தமிழோவியம்
கவிதை : பெண்
- புஹாரி

Womenபெண்ணே உலகின் ஆதாரம்
அவளற்ற ஆண் வெறும்
தளமற்ற கட்டிடம்

உள்ளத் தவிப்புக்கு மருந்தும்
உயிரின் துடிப்புக்குச் சமாதானமும்
பெண்ணே இன்றி
பெறுவதுதான் எப்படி

கலையா கணினியா
இலக்கியமா இராணுவமா
நாட்டுத் தலைமையா
விண்வெளிப் புரட்சியா
எங்கே இல்லை அவள்

சொல்லுங்களேன்
உயிரைச் சுமக்கும் ஒரே உயிர்
உலகில் பெண்தானே?

துவண்ட மனதுக்கு
மடிதந்து தலைகோத
ஒரு பெண்ணற்றுப் போயின்
மனித இனம் மொத்தமும்
சுடுகாட்டுப் பிணங்கள்தானே

எல்லாச் சுகங்களும்
எங்கும் கிடந்தாலும்
ஒரு பெண்ணில்லா பூமியில்
சிறு பொழுதேனும் நகருமா

அந்தப் பூமியும் கூட
ஓர் அழகுப் பெண்ணல்லவா

நிலவா மலரா கடலா காற்றா
காண்பதெல்லாம் பெண்ணல்லவா

சுகங்களின் இருப்பிடம் அவள்
சொர்க்கத்தின் பொருளும்
அவளேதான்

ஓராயிரம் ஓட்டைகளும்
உருப்படாத துடுப்புமாய்
நடுக்கடலில் விடப்பட்ட
ஆசை ஓடங்கள்தானே
மனித மனங்கள்

ஒரு பெண்ணின் துணையின்றி
வாழ்வெனும் கரைசேர
வாய்க்குமோ கனவிலும்

அவளின் அன்பின்றி
ஆயுள் ரேகைக்கு
ஆயுள்தான் ஏது

அழப்பிறவா மனிதருண்டோ

ஓரெட்டில் அம்மா
ஈரெட்டில் தங்கை
மூவெட்டில் காதலி
நாலெட்டில் தாரம்
ஐயெட்டில் மகளென்று
சாவெட்டு வரும்வரை
நம் கண்ணீர் நிறுத்தி
அமைதியின் மடிகிடத்த
தம் கண்ணீர் பொழியும்
கருணை மேகங்களல்லவா
பெண்கள்

அறிவுரைக்கோ
ஆயிரம் நாவுகளுண்டு
ஆறுதலுக்கு
அவளன்றி வேறு வழியுண்டோ

பெரும்பாலும் பெண்கள்
உயிர்களைப் பிரசவிக்கும்போது
ஆண்கள்
அணுகுண்டுகளைத்தானே
பிரசவிக்கிறார்கள்

உயிர்களின் ஆக்கமெல்லாம்
பெண்ணே என்பதால்
அந்தத்
தெய்வமும் பெண்தானோ!

Copyright © 2005 Tamiloviam.com - Authors