தமிழோவியம்
பங்குச்சந்தை ஒரு பார்வை : எகிறப் போகும் பங்குச்சந்தை
- சசிகுமார்

கடந்தச் சில வாரங்களாக பங்குச்சந்தை தள்ளாடிக் கொண்டே இருந்தது. திங்களன்று (பிப்ரவரி 28), பட்ஜெட் நாள். சந்தை எகிறுமா, சரியுமா என்ற கவலையில் அனைவரும் சிதம்பரத்தின் பட்ஜெட் உரை மீது ஒரு கண்ணும், குறியீடுகள் மீது ஒரு கண்ணும் வைத்து பார்த்துக் கொண்டிருக்க, சந்தை சரிவதும், உயருவதுமாக இருந்தது. ஒரு கட்டத்தில் குறியீடு 25 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்திருந்தது. பின் 25 புள்ளிகள் சரிந்திருந்தது. சிதம்பரம் தனது பட்ஜெட் உரையை நிறைவுச் செய்ய குறியீடு தீப்பற்றிக் கொண்டது போல எகிறத் தொடங்கியது.

பங்குச்சந்தைச் சேர்ந்த சிலர் இதனைக் கனவு பட்ஜெட் என்றே வர்ணித்தனர். பங்குகளை வாங்கிக் குவிக்கத் தொடங்க மும்பை பங்குச்சந்தைக் குறியீடு, BSE, 144 புள்ளிகள் எகிறி 6,713.86 புள்ளிகளை எட்டியது. இது வரலாறு காணாத உயர்வு. தேசியப் பங்குச்சந்தை, NSE, 42.35 புள்ளிகள் எகிறி 2,103.25 புள்ளிகளை எட்டியது.

சிதம்பரம் வெளியிட்ட சில அறிவிப்புகள் சந்தையை தீப்பற்ற வைத்து விட்டது

- பங்குப் பரிவர்த்தனை வரி (Securities Transaction Tax) குறைந்தளவே உயர்த்தப்பட்டது
- corporate tax 35ல் இருந்து 30%மாக குறைக்கப்பட்டது
- பட்ஜெட் இந்தியப் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுச் செல்லும் என்ற எதிர்பார்ப்பு
- உள்கட்டமைப்பு போன்ற பொருளாதார வளர்ச்சிக்கு தேவைப்படும் துறைகளுக்கு பட்ஜெட்டில் கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம்
- நாட்டை அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் வகையில் பலத் துறைகளுக்கு பரவலானச் சலுகைகள்
- பங்குச்சந்தையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் National Institute of Securities Markets அமைக்கப்படும், வருமான வரியில் 1லட்சம் வரை பரஸ்பர நிதி போன்றவற்றில் முதலீடு செய்யலாம் போன்ற அறிவிப்புகள்
- டிரைவேட்டிவிஸ் வர்த்தகத்தில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பணம் தவிர பங்குகளை கூட Collateral ஆக கொடுக்கலாம் என்ற அறிவிப்புகள். இது வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.

அடுத்த நாளும் (மார்ச் 1, செவ்வாய்) சந்தை எகிறக் கூடும் என்ற அனைவரின் எதிர்பார்ப்புக்கும் மாறாக BSE 62 புள்ளிகள் சரிந்தது. வரலாறு காணாத உயர்வை எட்டியப் பிறகு முதலீட்டாளர்களின் லாப விற்பனையால் சந்தை சரிந்த்து. லாப விற்பனைத் தவிர நிதியமைச்சர் புதியதாக அறிவித்துள்ள Fringe Benefits Tax நிறுவனங்களின் லாபத்தில் குறிப்பாக மென்பொருள் நிறுவனங்களின் லாபத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சமும் பங்குகளை சரிய வைத்தது. மென்பொபொருள் பங்குகளும் குறிப்பிடத்தக்க அளவில் சரிந்திருந்தன.

Fringe Benefits Taxல் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று நிதியமைச்சர் அறிவிக்க மறுநாள் (மார்ச் 2, புதன்) BSE குறியீடு 35 புள்ளிகள் எகிறி 6,686.89 ஐ எட்டியது. NSE 8 புள்ளிகள் எகிறி 2,093.25 ஐ எட்டியது. இதன் பிறகு அடுத்த இரு நாட்கள் இரு வரலாறு காணாத உயர்வு. வியாழனன்று (மார்ச் 3) BSE 97 புள்ளிகளும், வெள்ளியன்று (மார்ச் 4) 64 புள்ளிகளும் எகிறியது.

இந்த வாரச் சந்தை நிலவரம்

மும்பை பங்குச்சந்தை குறியீடு - BSE

சந்தை தொடங்கிய நிலை = 6,569.72
சந்தை முடிவுற்ற நிலை = 6,849.48

தேசியப் பங்குச்சந்தை குறியீடு - NSE

சந்தை தொடங்கிய நிலை = 2,060.90
சந்தை முடிவுற்ற நிலை = 2,148.15

சரிவு / உயர்வு நிலை
மும்பை பங்குச்சந்தை - BSE = 279.76 புள்ளிகள் உயர்வு
தேசியப் பங்குச்சந்தை - NSE = 87.25 புள்ளிகள் உயர்வு

சந்தை இப்பொழுது இது வரையில்லாத புதிய இலக்கை அடைந்திருக்கிறது. இனி மேல் மேற்கொள்ளும் எந்த உயர்வும் புது உயர்வு தான். புதிய இலக்குத் தான். புதிய வரலாறு தான். ஆனால் நம்மால் புதிய வரலாறுகளைப் படைக்க முடியுமா ? இந்த உயர்வு மேலும் உயர்வைத் தருமா ? இல்லை தற்காலிக உயர்வா ?

மார்கன் ஸ்டேன்லி நிறுவனம், குறியீடு இந்த வருட இறுதிக்குள் 7000ம் முதல் 8000ஐ எட்டும் என்று கணிக்கிறார்கள். கொஞ்சம் அதிகமாக ஆய்வு செய்பவர்கள் அடுத்த பத்தாண்டுகளில் குறியீடு 25,000 ஐ எட்டும் என்றும் சொல்கிறார்கள். பத்தாண்டு கதையை விட்டு விடுவோம். இந்த ஆண்டுக்குள் குறியீடு எவ்வளவு உயரும். தற்போதைய நிலையான 6,849.48 ஐ கடந்து இந்த ஆண்டுக்குள் 8000 எட்டும் என்று தற்போதையச் சூழலை வைத்து நிச்சயமாக சொல்லாம். இதற்கு மேலும் உயரலாம்.

இந்தியப் பொருளாதாரம் இந்த ஆண்டு 7% வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என்று பொருளாதார ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பலத் துறைகளில் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. ஜவுளி, மென்பொருள், பார்மா போன்ற துறைகளின் எதிர்கால வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இந்தத் துறைகளின் வளர்ச்சிக்கேற்ற வகையில் பட்ஜெட்டில் சலுகைகலும் அளிக்கப்பட்டிருக்கின்றன.

நாட்டின் உள்கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் special purpose vehicle போன்ற திட்டங்களை அரசு முன்வைத்துள்ளது. நாட்டின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு தரமான உள்கட்டமைப்புத் தேவை. இவை அனைத்தையும் விட நாடு தற்பொழுதுள்ள 7% வளர்ச்சியைக் கடந்து இரண்டு இலக்க வளர்ச்சியை நோக்கி நகர வேண்டுமானால் விவசாயம் நிச்சம் நல்ல முன்னேற்றம் காண வேண்டும். நாட்டின் மக்கள் தொகையில் 3ல் 2 பங்கு மக்கள் இந்தத் துறையை நம்பி இருக்கும் பொழுது நாட்டின் GDP யில் விவசாயத்தின் பங்கு அதிகரிக்க வேண்டும். அரசு கிராம வளர்ச்சி, விவசாயம் போன்ற துறைகளுக்கு அளித்துள்ள சலுகைகள் வெறும் அறிவிப்பாக இருந்து விடாமல் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அரசின்
பெரும்பாலானத் திட்டங்கள் அறிவிப்புடனே நின்று விடுகின்றன. இங்கு Delivery Mechanism என்ற ஒன்று பல நேரங்களில் ஒழுங்காக செயல்படுவதில்லை. செயலாற்றினாலும் சரியாக செயலாற்றுவதில்லை. மக்களை சென்று செருவதில்லை. இதனை இந்தப் பட்ஜெட்டில் குறிப்பிட்ட நிதியமைச்சர், திட்டங்கள் செயலுற்றும் முறை பலப்படுத்தப்படும் என்று கூறினார். எப்படிச் செய்யப் போகிறார் என்பது அடுத்த சில மாதங்களில் தெரிந்து விடும்.

எது எப்படியோ பங்குச்சந்தை தீப்பற்றிக் கொண்டது போல இனி வரும் நாட்களில் எகிறும் என்றே தோன்றுகிறது.

பிப்ரவரி மாதம் மட்டும் சுமார் 8,719 கோடி ரூபாய்க்கு பங்குச்சந்தையில் பணம் குவிந்துள்ளது. இனி மேலும் முதலீடு குவியும் என்றே பங்குச்சந்தை நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள். பல வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் இந்தப் பட்ஜெட்டிற்குப் பிறகு வெளிநாட்டு முதலீடு பங்குச்சந்தையில் அதிகரிக்கும் என்றே சொல்கிறார்கள். நிதியமைச்சர் ஒரு Balanced பட்ஜெட்டை கொடுத்திருக்கிறார் என்பதால் இவர்களின் முதலீடு இனி வரும் நாட்களில் அதிகரிக்கும்.

ஆனால் வெளிநாட்டு முதலீட்டைப் பொறுத்தவரையில் ஒரு அச்சம் அனைவரிடமும் உண்டு. நினைத்தால் தங்கள் முதலீட்டை அதிகரிப்பார்கள். ஏதாவது பாதகம் என்றால் உடனடியாக தங்கள் முதலீடுகளை விலக்கிக் கொள்வார்கள். இந்த வருடம் ஜனவரி மாதம் கூட இவ்வாறு தான் நிகழ்ந்தது. அமெரிக்க வட்டி விகிதம் பற்றிய அச்சம் வெளியானவுடன் சில வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை விலக்கிக் கொண்டன. சந்தை சுமார் 500 புள்ளிகள் சரிந்தது. பிறகு அவர்களின் முதலீடு இம் மாதம் சந்தைக்கு மறுபடியும் வரத் தொடங்க
சந்தை எகிறியது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களில் Hedge Fund என்ற பிரிவில் சில நிறுவனங்கள் இருக்கின்றன. பரஸ்பர நிதி போன்ற ஒரு நிதியமைப்புத் தான். ஆனால் குறிப்பிட்ட சிலர் ஒன்று சேர்ந்து அமைக்கும் நிதி நிறுவனம். உதாரணமாக என் நிறுவனத்தில் கூட இதேப் போன்ற Hedge Fund உண்டு. இது தொடங்கப்பட்ட பொழுது இதில் இருந்த மொத்த Counterparties (க்ளயண்ட்ஸ்) 15 பேர் தான். இவர்களுக்கென்று ஒரு நிதிப் பிரிவு. ஒரு Fund Manager எல்லாம்  உண்டு. இந்தப் பிரிவின் நோக்கமே ரிஸ்க்கை குறைத்து ஆனால் ரிட்டர்ன்சை அதிகரிக்க வேண்டும். என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். நம் பரஸ்பர நிதி போல பங்குகளை வாங்கி விற்பார்கள். பரஸ்பர நிதி போல இல்லாமல் பங்குகளை விற்றும் வாங்குவார்கள் (Short Selling). டிரைவேட்டிவிஸ் மூலம் வர்த்தகம் செய்வார்கள். இப்படி நிறைய முறையில் வர்த்தகம் செய்வார்கள். தேவையெல்லாம் ரிடர்ன்ஸ் தான். பல ஆசியச் சந்தையில் வர்த்தகம் செய்வார்கள். வர்த்தகம் முடிவடைந்தவுடன் எஸ்கேப் தான். இவர்கள் தான் ஜனவரி மாதம் பங்குகளில்  குறிப்பிடத்தக்க அளவில் சரிவை ஏற்படுத்தியவர்கள். பங்குச்சந்தை உயர் நிலையில் இருக்க, அமெரிக்க வட்டி வகிதம் எகிறும் என்ற நிலையில் பங்குகளை விற்று காணாமல் விட்டார்கள்.  இப்பொழுது மறுபடியும் வருவார்கள்.

ஆக, ஒரு விஷயம் நமக்கு இங்குத் தெளிவாகிறது. நம் பங்குச்சந்தையின் உயர்வும் தாழ்வும் நம் கையில் இல்லை. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் கைகளில் தான் இருக்கிறது.

ஏன் ? நம்மிடம் அந்தளவுக்கு பணமில்லையா ? இருக்கிறது. ஆனால் இங்கு யாரும் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதில்லை. இங்கு நிறையப் பேர் பணத்தைச் சேமிக்கிறார்கள். பல விதங்களில் சேமிக்கிறார்கள். ஆனால் இவர்களில் யாரும் முதலீட்டாளர்கள் இல்லை. இவர்களை முதலீட்டாளர்களாக மாற்றும் நடவடிக்கையைத் தான் நிதியமைச்சர் இந்தப் பட்ஜெட்டில் செய்துள்ளார்.

தற்பொழுது காப்பீடு,  சில குறிப்பிட்ட பத்திரங்கள் இவற்றில் முதலீடு செய்தால் தான் வருமான வரியில் இருந்து விலக்கு பெற முடியும். ஆனால் இந்தப் பட்ஜெட்டில் ஒரு லட்சம் வரை காப்பீடு தவிர பரஸ்பர நிதி போன்றவற்றில் கூட முதலீடு செய்யலாம் என்ற அறிவிப்பு அனைவருக்கும் நன்மை பயக்கும். முதலீட்டாளர்கள், பரஸ்பர நிதி போன்றவற்றில் வருமான வரி விலக்குகளுக்காக முதலீடு செய்யும் பொழுது, பங்குச்சந்தையில் உள்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரிக்கும். இது தவிர கடந்த மாதம் பென்ஷன் நிறுவனங்கள் குறிப்பிட்ட ஒரு சதவீதம் நிதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என்று அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதன் மூலமும் ஒரு கணிசமானத் தொகை பங்குச்சந்தைக்கு வரப் போகிறது.

கடந்த ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமையவிருந்த நேரம்.  இடதுசாரிகள் தனியார்மயமாக்கம் பற்றி சில கருத்துகளை வெளியிட,  அச்சத்தில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குக ளை விற்க சந்தை சுமார் 800 புள்ளிகள் சரிந்திருந்தது. பின் மன்மோகன் சிங் அப்போதைய நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிடம் இந்தச் சரிவை தடுத்து நிறுத்துமாறு கூறியதையடுத்து LIC காப்பீட்டு நிறுவனம் பங்குகளை நிதியமைச்சகத்தின் உத்தரவின் பேரில் வாங்கியது. இதனால் சரிவு ஒரளவுக்கு சரி செய்யப்பட்டது.

ஆனால் உள்நாட்டு நிறுவனங்கள் அதிகளவில் பங்குகளை வாங்கியிருந்தால் சரிவு ஒரளவுக்கு சரிச் செய்யப்பட்டிருக்கும். வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்கும் பொழுது குறைந்த விலைக்கு வரும் பங்குகளை வாங்குவதற்கு நிறுவனங்கள் வேண்டும். முதலீட்டாளர்கள் வேண்டும். உள்நாட்டுப் பணம் பங்குச்சந்தையை நோக்கி வர வேண்டும். வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களை நம்பி நம் பங்குச்சந்தை இருக்க கூடாது. அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் பங்குச்சந்தையை அந்தத் திசை நோக்கித் தான் செலுத்திக் கொண்டிருக்கிறது

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் நிதியுடன், உள்நாட்டு நிதியும் அதிகரிக்கும் பொழுது சந்தைக்கு அது ஏற்றம் தானே ?

இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை இந்தப் பட்ஜெட் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் சந்தை தற்பொழுது உயர்ந்தாலும், பங்குச்சந்தையில் அதிகரிக்கப் போகும் முதலீடுகள், இந்தியப் பொருளாதாரத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சிப் போன்றவை சந்தையை மேலும் உயர்த்தும்.

இந்த ஆண்டுக்குள் குறியீடு 8000ஐ எட்டும் என்றும், அடுத்த பத்தாண்டுகளுக்குள் குறியீடு 25,000 எட்டும் என்று சொல்வது தற்பொழுது வெறும் அனுமானங்களாகத் தெரியலாம். ஆனால் நடக்க முடியாதவைகள் அல்ல. சாத்தியமானவைத் தான். குறியீடுகளின் இலக்குகள் குறையலாம். ஆனால் எதிர்காலம் பிரகாசமாகவே இருக்கிறது.

அந்த பிரகாசமான எதிர்காலத்தில் நீங்களும் பங்கெடுத்துக் கொள்ள இது தான் சரியான சமயம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors