தமிழோவியம்
கட்டுரை : இந்திய அரசியலில் ராம்லால்களுக்குப் பஞ்சமே இல்லை
- 'டெல்லிவாலா'


36 பெரிதா, 41 பெரிதா? 41 தான் பெரிது என்று சிறு குழந்தை கூட கூறிவிடும். ஆனால் ஒரு மாநிலத்தின் கவர்னருக்கு இது தெரியவில்லையாம். சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியிலே, ஜனநாயகம் படுகொலை செய்யப் படுவதும், அரசியலமைப்புச் சட்டம் கற்பழிக்கப் படுவதும், நீதி நெறிமுறைகள் கேலிகூத்துக்குள்ளாக்கப் படுவதும், மக்களின் விருப்பம் தூக்கி எறியப்படுவதும் இது முதல் முறையன்று. 1984 ஆம் தனிப் பெரும்பான்மை உள்ள என் டி ராமாராவின் ஆட்சி, ராம்லால் என்ற ஒரு அடிவருடிக் கவர்னரால் கலைக்கப் பட்டுவிட்டு, பாஸ்கரராவ் என்பவர் தலைமியில் காங்கிரஸ் ஆட்சியை கட்டாயமாக நிறுவினார். அப்பொழுதுதான் அமெரிக்காவிலிருந்து இருதய அறுவைச் சிகிச்சை முடித்துக் கொண்டிருந்த என் டி ராமாராவின் உயிருக்கே உலை வைக்கப் பார்த்தது அப்பொழுதிருந்த இந்திராவின் காட்டுத் தர்பார் காங்கிரஸ் ஆட்சி. இன்று மருமகளின் ரிமோட் கன்ட் ரோல் ஆட்சியில், அதே நாடகம் மீண்டும் ஒரு முறை இன்னொரு கைக்கூலி மூலம் அமுலாக்கப் படுகிறது. மாமியாரானால் என்ன? மருமகளானால் என்ன, காங்கிரஸ் என்றாலே தார்மீக நெறிமுறைகளை மதியாத  கட்சிதான் என்பது மீண்டும், மீண்டும் ரிரூபிக்கப் படுகிறது.

ஜார்க்காண்ட் மாநிலத்தில். 41 உறுப்பினர்களின் ஆதரவினை கவர்னர் முன்பாகக் காட்டியபின்பு கூட சட்டத்தையும், நடைமுறைகளையும் காற்றில் தூக்கி எறிந்து விட்டு 36 பேர்களே உடைய ஒரு கூட்டணியை அரசமைக்க அழைத்து அவசர அவசரமாக சோரன் என்ற ஒரு கொலைக் குற்றவாளியை முதல்வராக அமர்த்தியிருக்கும் கேலிக் கூத்து அரங்கேறியிருக்கிறது. சோனியாவின் ஆசியுடன், பல்வேறு ·போர்ஜரி வேலைகளில் மன்னனுமாகிய அஜித் ஜோகி என்பவர் தலைமையில், மீண்டும் ஒரு முறை இந்தியாவில் ஜனநாயகம் கற்பழிக்கப் பட்டிருக்கிறது. நாட்டு மக்கள் இன்னும் மன் மோகன் சிங்கை நேர்மையானவர் என்று நம்பிக்கொண்டிருக்கின்றனர். நியாயமானவர் செய்திருக்கக்கூடிய காரியமா இது? நேர்மையான செயலா இது? இது போன்ற அத்து மீறல்களை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருப்பதன் மூலம் அவருக்கிருந்த  மரியாதையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார். 'யோக்கியன் தெருவில் வருகிறான் செம்பை தூக்கிப் பத்திரமாக உள்ளே வை' என்ற கதையாகி வருகிறது.

சோனியா மன்மோகன் கூட்டணியில், ஜனநாயகம் கேலிகூத்தாக்க படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கோவாவில் குழப்பத்தை விளைவித்து, மெஜாரிட்டியே இல்லாத காங்கிரஸ் அரசை நிறுவ ஜமீர் என்ற இன்னொரு கவர்னர் தலைகீழாய் நிற்கிறார். ஜனநாயக நாட்டின் அத்துனை தர்ம நியாயங்களையும், சட்ட நீதி நெறிமுறைகளும் கோவாவில் கேலிக் கூத்தாக்கப் பட்டுள்ளன. காரணம்? கோவா மாநிலத்தில் ஒரு பா ஜ க ஆட்சி நடப்பது ஒரு சிலருக்கு பெரும் உறுத்தலாக இருந்ததுதான். முன்னாள் ஐ ஐ டி மாணவரும், திறமையான நிர்வாகியுமான பரிக்கரின் ஆட்சி பலிகடாவாக்கப் பட்டுள்ளது.

இந்த ஜனநாயகப் படுகொலையில் ஒரே ஆறுதல் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நடவடிக்கை மட்டுமே. ஜனநாயகத்தைப் பற்றி நேபாளத்துக்கு அறிவுரை கூற இந்தியாவுக்கு எந்தத் தகுதி உள்ளது? மன்மோகன் சிங்கிற்கு என்ன அருகதை இருக்கிறது? வெட்கக்கேடு. உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் ஜனநாயகம் சந்தைப் பொருளாக்கப் பட்டு சோனியாக்களாலும், ஜமீர்களாலும், ரிஸ்விக்களாலும் கூவிக் கூவி விற்கப் படுகின்றது. சோனியா பிரதமர் பதவியையே துச்சமாக மதித்துத் தூக்கி எறிந்த தியாகி என்றார்கள்? இதுதான் ஒரு தியாகி நடந்து கொள்ளும் லட்சணமா?  கோவா, ஜார்க்காண்ட், அடுத்து பீகார். இதற்கு எதற்கு தேர்தல் ஆணையம் வைத்து தேர்தல் புடலங்காய் எல்லாம் நடத்திக் கொண்டு, பேசாமல் சோனியாவின் கைக்கூலிகளை ஒவ்வொரு மாநிலத்திற்கும் அனுப்பி எம் எல் ஏக்களை அவர்களே நியமித்து, ஆட்சி அமைத்துக் கொள்ளலாமே?

இந்தியாவில் மீண்டும் ஒரு முறை அரசியல் நிர்ணயச் சட்டமும், ஜனநாயககும் படு கொலைச் செய்யப்பட்டுள்ளன. எதற்கெல்லாமோ குரல் கொடுக்கும் திமுகக்களும், கம்னியுஸ்டுகளும், நமது இணைய அறிவு ஜீவிச் சூரப்புலிகளும் வாயையை மூடிக் கொண்டுள்ளன. ரிஜ்வி செய்தது சரிதான் என்று நாளைக்கு இந்த ஜனநாயகக் காவலர்கள் சப்பைக் கட்டுக் கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. வழக்கமான காங்கிரஸ் ஜால்ராக்களான இந்திய ஆங்கிலப் பத்திரிகைகள் கூட லேசாக இதை எதிர்த்து முணங்கியுள்ளன என்பது ஒரு லேசான ஆறுதல்.

காங்கிரஸ் ஆட்சிகளிலில் ராம்லால்கள் மட்டும் மறைவதே இல்லை, பல்வேறு பெயர்களில் அவதாரம் எடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள். முந்தா நாள் ஒரு ராம்லால், நேற்று ஒரு சமீர், இன்று ஒரு ரிஜ்வி, நாளை ஒரு பூடா சிங்? இந்தியாவில் உணவுக்குப் பஞ்சம் வரலாம், நேர்மைக்குப் பஞ்சம் வரலாம், நீதிக்குப் பஞசம் வரலாம் ஆனல் ராம்லால்களுக்கு மட்டும் பஞ்சமேயில்லை.

பேய்கள் ஆட்சி செய்ய பிணம் தின்னும் சாத்திரங்கள்?

 

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors