தமிழோவியம்
கவிதை : சித்தாளு
- நாகூர் ரூமி

பொற்காலமாக இருந்தாலும்
இவள் தலையில் எழுதியதோ
கற்காலம்தான் எப்போதும்.

தொலைந்ததே வாழ்வு என
தலையில் கைவைத்து
புலம்புவார் பூமியிலே
தன் வாழ்வு தொலைக்காமல்
தற்காத்து வைப்பதற்காய்
தலையில் கைவைப்பாள் இவள்.

வாழ்வில் தலைக்கனம்
பிடித்தவர் உண்டு.
தலைக்கனமே வாழ்வாக
ஆகிப்போனது இவளுக்கு.

அடுக்குமாடி அலுவலகம் எதுவாயினும்
அடுத்தவர் கனவுக்காக.
அலுக்காமல் இவள் சுமக்கும் கற்களெல்லாம்
அடுத்தவேளை உணவுக்காக.

செத்தாலும் சிறிதளவே
சலனங்கள் ஏற்படுத்தும்
சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது.

 

 


 

Copyright © 2005 Tamiloviam.com - Authors