தமிழோவியம்
கட்டுரை : திருமாவளவன் நேர்காணல் - மணா
-

புதிய பார்வையில் வெளியான திருமாவளவனின் உரையாடலில் இருந்து சில பகுதிகள்.

பேராசிரியர் கலந்து கொண்ட கூட்டத்தில் நானும் ஒரு பேச்சாளனாகப் பங்கெடுத்திருக்கிறேன். தி.மு.க.வின் பேச்சாளர்கள் பட்டியலில் என்னை இணைக்கச் சொல்லி விண்ணப்பித்தேன். அதற்குப் பிறகு ஒரேயொரு முறை மட்டும் எனக்கு வாய்ப்பளிக்கப் பட்டது. அது ஒரு போராட்டம் நடத்துவதற்கான கலந்துரையாடல். அதில் கலந்துகொண்டு கட்சியின் மந்தநிலை பற்றியும், வெகுஜன மக்களிடம் கட்சி பற்றி இருக்கும் கருத்துக்களைப் பற்றியும் இயல்பாகப் பேசியதும் சல்சலப்பாகிவிட்டது. பேசிக் கொண்டிருக்கும்போதே கலைஞர் கூப்பிட்டு 'போராட்டத்தைப் பற்றி மட்டும் பேசுங்க' என்று சொன்னார். நான் பேசிவிட்டு நகர்ந்ததும் "வெகுஜனம் என்றெல்லாம் பேசினால் சாதாரண மக்களுக்குப் புரியாது" என்று கலைஞர் சொன்னார்.

1983லிருந்தே ஈழத்தின்மீது ஈடுபாடு இருந்ததால் விடுதலைப் புலிகளைப் பற்றி எனக்கு ஒரு மதிப்பீடு இருந்தது. ஈழ மக்களுக்காக உயிரையே இழக்கக்கூடிய அளவுக்குப் போராடுகிறார்கள் என்பதே அவர்கள்மீது நன்மதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன் பாதிப்பு எனக்கிருந்ததால் 'தலித் பேந்தர்' என்கிற பெயரை - 'ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள்' என்று மொழிமாற்றம் செய்திருந்த பெயரை - 'விடுதலை சிறுத்தைகள்' என்று சூட்டினேன். சாதி ஒழிப்பு, தமிழ்த் தேசியம், வர்க்கப் போராட்டம், பெண் விடுதலை, வல்லரசு எதிர்ப்பு என்று ஐந்து வகையான கொள்கைகளை வரையறுத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்குள்ள திராவிடக் கட்சிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் எந்த நிலையிலும் மேலே வரமுடியாத அளவுக்கு இறுக்கமான சூழ்நிலையே இருக்கிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் வழங்கப்பட்ட அளவுக்கு மற்ற கட்சிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய இடம் அளிக்கப்பட்டதில்லை.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக கக்கன், இளையபெருமாள், மரகதம் சந்திரசேகர் என்று பலர் வரமுடிந்தது. காமராசரின் அமைச்சரவையில் முக்கிய இலாகாவான காவல்துறையை கக்கனிடம் கொடுக்குமளவுக்கு காங்கிரசில் தாராளமான ஜனநாயகத்தன்மை இருந்தது. கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் நுழையக் கூடாது என்று சாதிய நெருக்கடிகள் இருந்த காலகட்டத்தில் பி.ஆர். பரமேஸ்வரனிடம் அறநிலையத்துறை அமைச்சரவைப் பொறுப்பைக் கொடுக்கக்கூடிய அளவுக்கு நெகிழ்வான போக்கு காங்கிரசில் இருந்தது.

ஆனால் 90களின் தொடக்கம்வரையில் ஒன்றியச் செயலாளரின் பொறுப்புக்குக் கூடத் திராவிடக் கட்சிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் வரமுடியவில்லை. சேரிகளுக்கென்று மட்டும் தனியாகச் சில கிளைச் செயலாளர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள்.

சத்தியாவாணிமுத்து போன்றவர்கள் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் அதை வைத்துத் தாழ்த்தப் பட்டோருக்கு உரிய முக்கியத்துவம் இருந்ததாகப் பொதுமைப்படுத்திச் சொல்லமுடியாது.

1980க்கு முன்புவரை தமிழகத்தில் சாதிக் கலவரங்கள் குறைவாக இருந்ததாகச் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். அது தவறு. மிகக் கொடூரமான அடக்குமுறையின் மூலம் ஆயிரம் ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி வைத்திருக்கிறார்கள். எவ்வளவு பெரிய வன்முறையும் அடக்குமுறையும் நடந்திருந்தால் 'இந்த இழிவான வாழ்க்கையே போதும்' என்று இம்மக்கள் ஒதுங்கியிருப்பார்கள்?

கலவரங்கள் நடந்தாலும் இப்போதிருக்கிற மாதிரி ஊடகங்கள் வழியாக அவை வெளிப்பட முடியவில்லை. பசுவை வதைத்தால் தடுக்கச் சங்கமிருக்கிறது. ஆனால் மனிதனை மிருகத்தை விடக் கேவலமாகக் கொடுமைப் படுத்தினால் அதைக் கேட்க யாரிருக்கிறார்கள்? கவிஞர் இன்குலாப் சொன்ன மாதிரி "பறையனாக வாழ்ந்து பார்த்தால்தான் பார்ப்பனியத்தின் கொடுமையை உணரமுடியும்."

திராவிடக் கட்சிகள் பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு பார்ப்பன எதிர்ப்பு என்பதில் உறுதியாக நின்று தாழ்த்தப்பட்டவர்களைப் பயன்படுத்திக் கொண்டார்களே தவிர, சாதி ஒழிப்பிலோ, இந்துத்துவ எதிர்ப்பிலோ அவர்கள் எந்த முனைப்பையும் காட்டவில்லை.

தேர்தல் நேரத்தில் சேலத்தில் இந்துத்துவ எதிர்ப்பு மாநாட்டை நடத்தினோம். இந்துத்துவ எதிர்ப்பு என்பதற்குள் பார்ப்பனிய எதிர்ப்பும் அடங்கியிருக்கிறது. ஆனால் பார்ப்பனிய எதிர்ப்பிற்குள் இந்துத்துவ எதிர்ப்பு இல்லை. இந்துத்துவத்திற்கு மாற்று தமிழ்த் தேசியம்தான்.

திராவிட இயக்க வரலாற்றை எழுதுபவர்கள் யாராவது இரட்டைமலை சீனிவாசனைப் பற்றியோ, அயோத்திதாசப் பண்டிதரைப் பற்றியோ, தந்தை சிவராஜ் பற்றியோ, அவர்களின் பங்களிப்புப் பற்றியோ ஏன் எழுதவில்லை? ஏன் மூடி மறைக்கிறார்கள்? அம்பேத்கார் பௌத்த மதத்திற்கு மாறவேண்டும் என்கிற கருத்தியலுக்கு வந்ததற்குக் காரணமே அயோத்திதாசப் பண்டிதர்தான்.

இன்றைய தனித்தொகுதி முறை, அப்பட்டமான பித்தலாட்ட முறை. இரட்டை வாக்குரிமையை நாங்கள் 14 ஆண்டுகளாக கோரி வருகிறோம். தாழ்த்தப்பட்டோருக்கான உறுப்பினரைத் தாழ்த்தப்பட்டோரே தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற உரிமையுடன், பொது உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க இன்னொரு உரிமை வழங்க வேண்டும் என்கிறோம்.

- புதிய பார்வை/நவ. 15, 2004

Copyright © 2005 Tamiloviam.com - Authors