தமிழோவியம்
முத்தொள்ளாயிரம் : 'எனக்கு அதிர்ஷ்டமே இல்லை'
- என். சொக்கன்

பாடல் 89

பாண்டியனைக் காதலிக்கும் ஒரு பெண், அவனை நினைத்தபடி ஏங்கியிருந்தாள். சாப்பாடு பிடிக்கவில்லை, தூக்கம் வருவதில்லை, அவனில்லாமல் வாழ விருப்பமில்லை !

இந்த நிலையில், என்றைக்கோ ஒரு நாள், தப்பித்தவறித் தூக்கம் வந்துவிட்டது !

காதலர்களுக்குத் தூக்கம் வந்தால், இலவச இணைப்பாகக் கனவும் வரும் - இவளுக்கும் வந்தது, கனவில் கூர்மையான வேலை ஏந்திய பாண்டியன் வந்தான், அவளுடைய கையைப் பிடிக்கவந்தான்.

பரவசமூட்டும் அந்தக் கனவை நிஜம் என்று நினைத்துக்கொண்டாள் அந்தப் பெண். சட்டென்று கண்களைத் திறந்துவிட்டாள் !

'ஐயோ, என்ன இது அநியாயம் ? என்னைச் சந்திப்பதற்காக வந்த என் பாண்டியன் எங்கே ? இங்கே அவனைக் காணவில்லையே ! அப்படியென்றால் ? இதுவரை நான் கண்டதெல்லாம் கனவா ?', என்று புலம்புகிறாள் அவள், 'எனக்கு அதிர்ஷ்டமே இல்லை ! கனவிலாவது என் காதலனைச் சந்தித்து, மனம்விட்டுப் பேச நினைத்தேன், இப்போது என் அசட்டுத்தனத்தால், கண்களைத் திறந்து, கனவையும் இழந்துவிட்டேன் !'


ஓராற்றால் என்கண் இமைபொருந்த அந்நிலையே
கூரார்வேல் மாறன்என் கைப்பற்ற வாரர்
நனவுஎன்று எழுந்திருந்தேன் நல்வினை ஒன்றுஇல்லேன்
கனவு இழந்துஇருந்த ஆறு.

(ஓராற்றால் - ஒரு வழியாக
இமை பொருந்த - இமை மூட / தூங்க
ஆறு - வழி)


பாடல் 90

அவள், பாண்டியனின் காதலி - கடற்கரையில் தோழியுடன் அமர்ந்திருக்கிறாள் !

சோகமும், ஏக்கமும் ததும்புகிற அவளுடைய பார்வை, தனக்கு முன்னே இருக்கும் மணல்மேட்டின்மீது விழுகிறது !

உதிரியான மணலைச் சேர்த்துக் குவித்தாற்போல் தெரிகிற அந்த மணல்மேட்டில், சில சங்குகள் கிடக்கின்றன. அவற்றைப் பார்த்ததும், அவளுடைய சோகம் இன்னும் கூடுகிறது.

பக்கத்தில் அமர்ந்திருக்கும் தோழியை அழைத்துச் சொல்கிறாள், 'தோழி, நானும், அந்தச் சங்குகளும் ஒன்றுதான் !'

தோழிக்கு ஒன்றும் புரியவில்லை, 'என்ன சொல்கிறாய் நீ ?', என்று குழப்பத்துடன் கேட்கிறாள்.

'தோழி, கடலினுள் கிடந்த அந்தச் சங்கை, இந்த அலைகள்தான் கரைக்குக் கொண்டுவந்தன. இங்கே வந்த கையோடு, ஒரு முத்தை உமிழ்ந்தது அந்தச் சங்கு ! இப்போது, தன்னை மீண்டும் கடலுக்குள் இழுத்துச் செல்வதற்காக இன்னொரு அலை வராதா என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறது !'

- இப்படிச் சொல்லிவிட்டு, பெருமூச்சுடன் தொடர்ந்து பேசுகிறாள் பாண்டியன் காதலி, 'நானும் அந்த சங்கைப்போலதான் ! என் காதலன் பாண்டியனுடன் திரும்பச் சேர்வதற்காக, அவனிடமிருந்து ஒரு தூது வராதா என்று ஏங்கிக் காத்திருக்கிறேன் !'


உகுவாய் நிலத்தது உயர்மணல் மேல்ஏறி
நகுவாய் முத்துஈன்று அசைந்தசங்கம் புகுவான்
திரைவரவு பார்த்திருக்கும் தென்கொற்கைக் கோமான்
உரைவரவு பார்த்திருக்கும் நெஞ்சு.

(உகுவாய் - உதிர்கின்ற
நகுவாய் - ஒளிவீசுகின்ற
சங்கம் - சங்கு
திரை - அலை)

Copyright © 2005 Tamiloviam.com - Authors