தமிழோவியம்
தராசு : பெர்னாண்டஸ் - வாஜ்பாய் தமாஷ் செய்வது யார் ?
- மீனா

George Fernandesபோபர்ஸ் வழக்கு சம்மந்தமான கோப்புகளைத் தொடவேண்டாம் என்று பிரதமர் வாஜ்பாய் தான் ராணுவ அமைச்சராக இருந்த போது கேட்டுக்கொண்டதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரிவித்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் தற்போது தான் அவ்வாறு கூறவே இல்லை என்றும் வாஜ்பாய் தமாஷாக தன்னிடம் பேசியதைத் தான் பத்திரிக்கைகள் திரித்து எழுதிவிட்டன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் உண்மை வெளிவராமல் புகைந்துகொண்டிருக்கும் போபர்ஸ் விவகாரத்தில் முன்னாள் ராணுவ மந்திரி இவ்வாறு பொறுப்பற்ற முறையில் முன்னாள் பிரதமரையும் சம்மந்தப்படுத்தி பேசியிருப்பது கண்டித்தக்க வேண்டிய ஒரு விஷயமாகும். பெர்னாண் டஸ் பேச்சின் இரு தவறுகள் : தேவையே இல்லாமல் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசியது.. அதையும் தெளிவாகப் பேசாமல் சந்தேகங்களுக்கு இடம் தரும் வகையில் பேசியது.

தன்னுடைய இந்தப் பேச்சின் விளைவாக "போபர்ஸ் விவகாரத்தை கையில் எடுக்க வேண்டாம் என்று கூறி வாஜ்பாய் பெர்னாண்டஸ் கைகளை கட்டிப்போட முயற்சித்தாரா?" என்ற கேள்வி மக்கள் மனதில் எழாது என்று அவர் நினைத்திருந்தால் அதை விட மடத்தனம் எதுவுமில்லை. முதல் அறிக்கையை விட மோசம் அவரது இரண்டாவது அறிக்கை. "வாஜ்பாய் தமாஷாகத்தான் அப்படிச் சொன்னார். அவரது நகைச்சுவை உணர்வு அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.." என்று இன்று கூறியுள்ளார் பெர்னாண்டஸ். ஒரு நாட்டின் பிரதமருக்கு எந்த விஷயத்தை தமாஷாகச் சொல்லவேண்டும். எந்த விஷயத்தை அழுத்திச் சொல்லவேண்டும் என்பது தெரியாமல் இருக்காது.. நாட்டையே புரட்டிப் போட்ட போபர்ஸ் விவகாரத்தில் எல்லாம் வாஜ்பாய் போன்ற அனுபவசாலிகள் ராணுவ அமைச்சரிடம் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதே என்று நகைச்சுவையாகப் பேசுகிறார்கள் என்றால் அது நம்பமுடியாத ஒரு நிகழ்வு. ஒருவேளை வாஜ்பாய் அப்படி பேசியிருந்தால் அது கண்டனத்திற்குரியது.

ஏற்கனவே காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் போபர்ஸ் விவகாரத்தை மூடி மறைக்க ஏகப்பட்ட முயற்சிகள் செய்ததும் செய்து வருவதும் தெரிந்த விஷயம்தான். பாரதிய ஜனதா போன்ற கட்சிகள் ஆட்சிக்கு வரும்போது மட்டுமே போபர்ஸ் விவகாரத்தில் உள்ளது உள்ளபடி விஷயங்கள் அம்பலமாக முடியும். அந்த நம்பிக்கைதான் மக்கள் மனதில் உள்ளது. அதை தகர்தெரியும் வகையில் அமைந்துவிட்டது பெர்னாண்டஸ்ஸின் இந்தப் பேச்சு. வாஜ்பாய் தமாஷாக அப்படிச் சொன்னாரோ இல்லை நிஜமாகவே அப்படிச் சொன்னாரோ - உண்மை எதுவாக இருந்தாலும் இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த விஷயத்தை வெளியே சொன்னதன் மூலம் பெர்னாண்டஸ் மக்கள் மத்தியிலும் மற்ற தலைவர்கள் மத்தியிலும் தன்னுடைய நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் என்றால் மிகையில்லை.

Copyright © 2005 Tamiloviam.com - Authors