தமிழோவியம்
அண்ணாச்சி உலகம் என்னாச்சி ? : 5 போலீச சுட்டது எந்தா அண்ணாச்சி?"
-
நாயரிடம் ஒரு டீ சொல்லிவிட்டு பெஞ்சில் உட்கார்ந்து பேப்பரை புரட்டினார் அண்ணாச்சி. ஸ்கூட்டரை தள்ளிக்கொண்டு வந்தான் மணி.

"எல மணி என்னா ஸ்கூட்டரத் தள்ளுத?"

"பாத்தா தெரிலியா அண்ணாச்சி ஸ்கூட்டர் பஞ்சர். நேரமே சரியில்ல" மணி சலித்துக்கொண்டே ஸ்கூட்டரை ஸ்டாண் போட்டு நிறுத்தினான்.

"எந்தா மணி டீ வேணோ?" நாயர் வியாபாரம் பேசினார்.

"போடு நாயர்" பெஞ்சில் உட்கார்ந்தான் மணி. அண்ணாச்சி ஆரம்பித்தார்.

"ஸ்கூட்டருக்கெல்லாம் இப்ப கெட்ட காலம்டே மணி."

"என்ன சொல்லுதிய?"

"நம்ம டிக் சேனி இருக்கார்லா? அமெரிக்க உதவி ஜனாதிபதி? அவரோட அசிஸ்டண்ட் ஒருத்தன்... ஸ்கூட்டர் லிபின்னு பேரு. அமெரிக்க உளவுத்துறை ஆளு ஒருத்தரப் பத்துன ரகசியமான வெவரத்தையெல்லம் வெளியிட்டாண்டே. போனவாரம் அவன்மேல தீர்ப்பாயிடுச்சு. 25 வருசம் ஜெயிலு."

"அமெரிக்காவுலையும் இதான் செய்தானுவளா?" மணி ஆச்சர்யமாய் கேட்டான்.

"ஆமாண்டே. ஸ்கூட்டர் மேல பழி போட்டுட்டு, டிக் சேனி தப்பிச்சுட்டார்னு பேசிக்கிறானுவ."
டி வந்தது.

"நாயர். தாமிரபரணில மட்டம் ஒசந்தா டீலேயும் தண்ணி தூக்கலாயிடுது?" மணியின் கிண்டலை நாயர் பொருட்படுத்தவில்லை.

"தாமிரபரணின்னது நியாபகம் வருது. அண்ணாச்சி காவிரிபத்தி என்ன சொல்லுதிய."

"காவிரி பிரச்சனையில, இன்னும் ஒரு வருசத்துக்கு அரசியல் மட்டுந்தாண்டே. அதுல பாத்துக்க கர்நாடகக் காரனுவ நம்ம எல்லைக்குள்ள வரப் பாத்துருக்கானுவ. நம்மாளு அங்க ஒருத்தனுமில்ல."

"நம்ம ஊர்னா வெட்டருவாவோட நின்னிருப்போம்ல."

"எல கேரளாவு பெரியாறு ப்ரெச்சன பண்ணுதானுவ. அதுக்குன்னு நாயர வெட்டுனா சரியாடுமால?" அண்ணாச்சி கேட்டதும் நாயர் ஓரப் பார்வை பார்த்தார்.

"ஆனா நம்ம ஊர் அரசியல்வாதியெல்லாம் ரெம்ப லேட்டத்தான் ரியாக்சன் பண்ணுதாவ. இத்தன மாசம் களிச்சு அம்மா உண்ணாவெரதம் அறிவிச்சிருக்கு." மணி சொன்னான்.

"மணி. கர்நாடகாவுல இருக்கிற ரியாக்சன் இங்க இல்லடே. சரிதான். அதான் சொன்னேன்லா, இனி ஒருவருசம் இத வச்சு ரெண்டு பேருமே அரசியல்தான் பண்ணப்போறானுவ. கர்நாடகா முன்னால சுப்ரீம் கோர்ட் தீர்ப்ப கண்டுக்கல ஆனா இப்ப திரும்ப அங்க கேஸ் போடப்போறாவளாம்."

"தாமிரபரணிக்கு சண்டவராதவரைக்கும் நமக்கு பிரச்சனயில்ல.", மணி

"பஞ்சாப்காரனுவ அடுத்தது தண்ணி குடுக்கமாட்டொண்றானுவ. தண்ணி ப்ரெச்சன பெரும் ப்ரெச்சனப்பா."

"வேறென்ன செய்தி அண்ணாச்சி"

"இந்தோனேசியாவுல ஒரே வாரத்துல ஒரு பூகம்பம், ப்ளேன் ஆக்சிடண்டுன்னு ஆடிட்டானுவ. பூகம்பத்துல 70பேர், ஆக்சிடண்ட்ல 22பேர் காலி. ஆனா 120பேர்கிட்ட தப்பிச்சிட்டானுவடே."

"ஊரு பூரா விபத்தாத்தாங் கெடக்கு."

Bush"எல்லாமா விபத்து. ஈரக்குல இன்னும் வெடிபோட்டுக் கொல்லுதானுவ. அரசாங்கம் ஒரு அடி முன்வச்சா தீவிரவாதி தொடர்ந்து அடிச்சுக்கிட்டே இருக்கான்ல. பக்கத்து நாட்டையெல்லாம் கூட்டி ஒரு மீட்டிங் வச்சானுவ. மீட்டிங் நடக்க நடக்க வெளிய வெடி வெடிக்குது பாத்துக்க. கொழப்பிட்டானுவல்லா. அமெரிக்காவுல எதிர்கட்சி காரனுவ படையெல்லாம் 2008க்குள்ளால திரும்ப வாங்கணும்னு சொல்லுதானுவ. ஆனா புஷ்ஷு ஒத்துக்கணுமே."

"இது யாருண்ணே? நடிகையா?" பேப்பரைக் காமித்து கேட்டான் மணி.

"இவ பேரு எலிசபத் ஹார்லி. இங்கிலாந்துக் காரிடே. இந்தியாவுலேந்து போன அருண் நாயர்னு ஒரு இந்தியன கல்யாணம் பண்ணியிருக்கா. ராஜஸ்தான்ல ஒரே கலாட்டாவாப் போச்சு."

"என்ன நாயர் ஒங்க சொந்தக்காரரோ?" மணி கேட்க நாயர் சிரித்தார்.

"எடா மணி எங்க சொந்தமின்னாலே நான் ஏண்டா சாயா போடுது.?"

"இதுல பத்திரிகைக்காரங்கள உள்ள விடலேன்னு சண்ட வேற. இதெல்லாம் ரெம்ப அதிகம்னு கம்யூனிஸ்ட் காரனுவ ராஜஸ்தான் சட்டசபையில அமளிதுமளி பண்ணிட்டானுவ."

"5 போலீச சுட்டது எந்தா அண்ணாச்சி?" நாயர் கேட்டார்.

"அது ஒரு பெரியக் கத நாயர். சுட்டவன ஓரினச் சேர்க்கை செய்யச் சொல்லி வற்புறுத்தியிருக்கானுவ. கோவம் வந்து சுட்டுட்டான். இன்னும் முழு வெவரம் தெரியல. பாப்போம்."

'த்தூ' நாயர் சாக்கடை நோக்கி துப்பினார்.

"நாயரே நாமதான் இங்கன மூலையில கெடக்கோம். ஒலகம் பூரா இப்பெல்லாம் ஓரினச் சேர்க்கை செய்றவங்க ரைட்ஸ் வேணுமின்னு கொந்தளிக்க ஆரம்பிச்சாச்சு. எங்க போயி முடியப் போவுதோ." அண்ணாச்சி பெருமூச்சுடன் சொன்னார்.

"அண்ணாச்சி அது ஒண்ணும் பேசாண்டா. கேட்டாலே காது கூசுது."

"இதெல்லாம் புரிஞ்சிக்கிற பக்குவம் நமக்கில்லையா. ரெம்ப கஸ்டம்." மணியின் செல்ஃப்போன் சிணுங்கியது.

"செல்ஃபோன வச்சிகிட்டு அவனவன் என்ன அநியாயம் பண்றான்யா?."

"இவன் கெடக்கான் காலங்காத்தாலயே கடன்கேட்டு ஃபோன்பண்ணுதான். நீங்க சொல்லுங்க அண்ணாச்சி." மணி செல்ஃபோனை கட் செய்தான்.

"கல்கத்தாவுல ஒரு பொண்ணு எஸ்.எம்.எஸ் போட்டு ஏரோப்ளேனக் கடத்தப் போறாங்கன்னு மெசேஜ் போட கலாட்டாவாயிடுச்சுடே. கடைசில ஆளப் புடிச்சிட்டானுவ. எல மணி ஒன் தம்பி எங்க வேல பாக்கான்?"

"பூனாவுலண்ணாச்சி".

"அதான பாத்தேன். எல பூனாவுல 200 எளந்தாரிப் பயலுகளும் பொண்ணுகளும் ராத்திரிபூரா போதை பார்ட்டின்னு கூடி கும்மாளமடிச்சிருக்குதுங்க. போலீஸ்போயி ஒரு 250பேர ரவுண்டு கட்டிட்டானுவ."

"காலேஜ் பசங்களோ?"

"வேலைக்குப் போறபயவளும் உண்டுடே. இப்பெல்லாம் சின்னப் பயலுவ கொஞ்ச நஞ்சமா சம்பாதிக்கானுவ. ஒரு கணக்கெடுப்புல கோக்கேன்னு சொல்லுத போத வஸ்து யூஸ்பண்றது இந்தியாவுல கூடிட்டே வருதுன்னு தெரிஞ்சிருக்குடே."

"ஒரு மலபார் பீடிக்கி வழியில்ல." நாயர் சலிப்புடன் சொன்னார்.

"ஆசியாவுலயே அதிகமா கோடீஸ்வரனுவ இருக்கிறது இந்தியாத்தானாண்டே." சொல்லிவிட்டு எழுந்தார் அண்ணாச்சி,"நாம பீடிக்கும் டீக்கும் கணக்கு சொல்லவேண்டியிருக்கு. நாயர் கணக்குல வச்சுக்க. வழக்கம்போல பென்சன் வந்ததும் தாரேன்."

மணி ஸ்கூட்டரைத் தள்ள கூடவே எழுது நடந்தார் அண்ணாச்சி.
Copyright © 2005 Tamiloviam.com - Authors