தமிழோவியம்
கட்டுரை : அட்மிஷன் அவலங்கள்
- மீனா

மாணவர்களின் கல்லூரி அட்மிஷன் கூட எளிதாக அமைந்துவிடும் போலிருக்கிறது குழந்தைகளின் எல்.கே.ஜி அட்மிஷன் கிடைக்க பெற்றவர்கள் படும் பாட்டை நினைத்தால். தனியார் பள்ளிகள் பலவற்றிலும் தற்போது குழந்தைகளைச் சேர்க்க வேண்டுமானால் பெற்றோர் இருவரும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும்.. ஆசிரியர்கள் கூப்பிடும் போதெல்லாம் பெற்றோர் ஓடிவரவேண்டும்.. பள்ளி கட்டிட நிதியாக ஏகப்பட்ட பணத்தைக் கணக்குப் பார்க்காமல் கொடுக்கவேண்டும்.. என்றெல்லாம் ஏகப்பட்ட நிபந்தனைகள்.

இத்தனை கஷ்டப்பட்டு பெற்றோர் பிள்ளைகளுக்கு அட்மிஷன் வாங்குவதன் காரணம் - நல்ல பள்ளிகளில் சேர்த்துவிட்டால் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக அமைந்துவிடும் என்பதற்காகத்தான். ஆனால் இப்பள்ளிகளில் நிஜத்தில் நடப்பதென்ன? பிள்ளைகள் கொஞ்சம் சரியாகப்படிக்கவில்லை என்றால் சம்மந்தப்பட்ட மாணவர்களின் மானம் போவதுடன் அவர்களின் பெற்றோர் மானமும் கார்றில் பறக்கிறது. பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்தில் மார்க் சரியாக வாங்காத குழந்தைகளின் பெற்றோரை ஆசிரியர்கள் என்னவோ கொலைக்குற்றவாளிகளைப் போலப் பார்ப்பதையும் அங்கே தாங்கள் பட்ட அவமானத்திற்காக வெளியே வந்து பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பின்னியெடுப்பதையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். போதாத குறைக்கு தங்கள் பள்ளியின் தேர்ச்சி 100% இருக்கவேண்டும் என்பதற்காக கொஞ்சம் குறைவாக மதிப்பெண்கள் பெறும் மாணவ - மாணவிகளுக்கு கட்டாயமாக டி.சி கொடுத்து பள்ளியை விட்டு வெளியேற்றும் கொடுமைகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

இத்தகைய கட்டுப்பாடுகளின் விளைவு : விளையாட வேண்டிய வயதில் குழந்தைகள் பொதி சுமக்கும் கழுதைகளாக கட்டுக்கட்டாக புத்தக மூட்டைகளைச் சுமந்து கொண்டு பள்ளி - வீடு என்னும் குறுகிய வட்டத்திற்குள் தங்களை அடைத்துக்கொள்கிறார்கள். போதாத குறைக்கு டியூஷன் வேறு. மனதை ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்ள உதவும் விளையாட்டுகள் எல்லாம் எட்டாக்கனியாகிவிட பிள்ளைகள் இளம் வயதிலேயே மன அழுத்த நோய்க்கு ஆளாகிறார்கள். எங்கே சரியாகப் படித்து மதிப்பெண் பெறாவிட்டால் தண்டனைக்கு ஆளாக நேரிடுமோ என்ற பயத்திலேயே அவர்கள் வாழ்கிறார்கள். இதன் விளைவாகத்தான் தேர்வில் தோல்வியுற்றாலோ குறைவான மதிப்பெண் பெற்றாலோ பிள்ளைகள் தற்கொலை செய்துகொள்வது போன்ற விபரீதங்கள் ஏற்படுகின்றன.

வாழ்க்கைக்கு கல்வி அவசியம்தான். ஆனால் அது திணிக்கப்பட்ட ஒன்றாக மாறிவிடக்கூடாது. விரும்பி ஏற்கவேண்டிய ஒன்றாக இருக்கவேண்டும். 2020ல் உண்மையிலேயே வளமான - வலிமையான இந்தியாவை உருவாக்கவேண்டுமானால் நம் அரசியல்வாதிகள் சீர்திருத்தங்களை பள்ளிகளிலிருந்து தொடங்க வேண்டும். பள்ளிகளில் தற்போது நடைமுறையில் இருக்கும் நியாயமற்ற பல கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். இளம் வயதில் குழந்தைகளை புத்தகமூட்டைகளைக் கொண்டு திணறடிக்காமல் மேலை நாடுகளில் உள்ளது போல விளையாட்டு முறை கல்வித்திட்டத்தை அமுலாக்கவேண்டும். முக்கியமாக எந்த வயதான மாணவ மாணவியரையும் சரியான மதிப்பெண் பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி அவமானப்படுத்துவதை விட்டுவிட்டு சரியான அறிவுரை கூறி ஆசிரியர்கள் நல்வழிப்படுத்தவேண்டும் என்பதைச் சட்டமாக்கவேண்டும்.

இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒன்று.. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை உண்டு. குழ்ந்தைகளின் தனித்திறமை என்ன என்பதை பெற்றோர் கண்டுபிடிக்கவேண்டும். அத்திறனை வளர்த்துக்கொள்ள பிள்ளைகளுக்கு பெற்றோர் உதவ வேண்டும். அதை விட்டுவிட்டு இத்தனை கஷ்டப்பட்டு உன்னை இந்தப் பள்ளியில் சேர்த்திருக்கிறேன். அதற்காக நீ நன்றாகப்படிக்க வேண்டும்.. நான் இளம் வயதில் இது படிக்க ஆசைப்பட்டேன் ஆனால் அது நடக்கவில்லை.. அதனால் நீ என் ஆசையை நிறைவேற்றவேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்காமல் பிள்ளைகளின் நியாயமான விருப்பங்களை முடிந்த அளவிற்கு நிறைவேற்ற முன்வரவேண்டும். அப்போதுதான் குழ்ந்தைகளின் மனமும் வாழ்வும் வளம் பெறும். 

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors