தமிழோவியம்
தராசு : மாணவர்களைக் குழப்பும் மாநில அரசு
- மீனா

இந்த ஆண்டு தாங்கள் பொறியியல் கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா? வேண்டாமா? என்று மாணவர்கள் குழம்பித் தவிக்கும் வேளையில் சுயநிதி எஞ்ஜினியரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களை ஒப்படைக்கமாட்டோம் என்றும் அரசு நடத்தும் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்களைச் சேர்க்க மாட்டோம் - தாங்களே தனியே நுழைவுத் தேர்வு நடத்தப் போவதாகவும் 40 கல்லூரிகளின் நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

சென்ற ஆண்டு வரை சரியாக நடந்து கொண்டிருந்த நுழைவுத் தேர்வு மூலமாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேரும் முறையை மாற்ற நினைத்த மாநில அரசு அதிரடியாக இந்த ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் சேர நுழைவுத்தேர்வு தேவையில்லை என்ற முடிவை வெளியிட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றம் நுழைவுத் தேர்வுகள் அவசியம் என்று தீர்ப்பு வழங்கியது. நுழைவுத் தேர்வுகள் நடத்த தங்களுக்கு குறைந்தபட்சமாக 2 மாதங்களாவது அவகாசம் வேண்டும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ள இந்நிலையில் இந்த வருடம் தாங்கள் பொறியியல் கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா? வேண்டாமா என்ற குழப்பத்தில் மாணவர்கள் இன்னமும் சிக்கித் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தடாலடியாக பல முடிவுகளை எடுத்துவரும் ஜெயலலிதா தலைமையிலான இந்த அரசு பல சட்டங்களைப் போட்டதும், போட்ட மாத்திரத்தில் அவற்றை வாபஸ் வாங்கியதும் தெரிந்த விஷயம் தான். என்றாலும் மாணவர்கள் வாழ்க்கை சம்மந்தப்பட்ட இத்தகைய விஷயங்களில் சற்று சிந்தித்து முடிவெடுக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தங்கள் இஷ்டத்திற்கு அரசியல்வாதிகள் இயற்றும் சட்டங்களால் அப்பாவி மாணவர்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை யாரும் சிந்திக்க மறுப்பது ஏன்? நீதிமன்றத்திற்கும் மாநில அரசுக்கும் இடையே நடக்கும் இந்த மோதலில் மாணவர்கள் சிக்கி அவர்களது வாழ்க்கை பாழானால் யார் அதற்குப் பொறுப்பேற்பார்கள்? ஆளும் அரசைக் கண்டித்து எது எதற்கோ கண்டனத் தீர்மானம் இயற்றும் - போரட்டம் நடத்தும் எதிர்கட்சிகளும் இந்த விஷயத்தில் வாய்மூடி மவுனமாய் இருப்பது இன்றைய மாணவ சமுதாயத்தின் மீது இவர்களுக்கு உள்ள அக்கறையைப் பறைசாற்றுகிறது.

சட்டமன்றத் தேர்தலை விரைவில் எதிர்கொள்ள வேண்டிய நிலையிலுள்ள மாநில அரசு முதலில் இந்த ஆண்டு பொறியியல் கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்விக்கான விடையை வெகு விரைவில் அறிவிக்க வேண்டும். மேலும் அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்களை ஒப்படைக்க மாட்டோம் என்று முழங்கும் சுயநிதிக் கல்லூரி நிர்வாகிகளிம் கூடிய விரைவில் பேசி மாணவர்களுக்குச் சேரவேண்டிய உரிய இடங்களைப் பெற்றுத் தருவதிலும் மாநில அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்மந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுப்பார்களா?

Copyright © 2005 Tamiloviam.com - Authors