தமிழோவியம்
திரைவிமர்சனம் : டிஷ்யூம்
- மீனா

Jeeva, Santhiyaகலைநயத்துடன் ஒரு படகு வீட்டை ஓவியமாக வரையும் ஓவியக்கல்லூரி மாணவி - அந்த ஓவியத்தைப் பார்த்தவுடன் அந்த படகு வீட்டை எரிய வைத்து அதில் சூப்பரான சண்டைக்காட்சி எடுக்கலாம் என்று கூறும் ஒரு ஸ்டண்ட்மேன். முரண்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட இந்த இருவருக்கும் இடையே தோன்றும் காதல்தான் டிஷ்யூமின் ஒருவரிக் கதை.

சினிமாவில் ஹீரோக்களுக்கு டூப் போடும் ஸ்டண்ட் ஆள் ஜீவா. ஓவியக் கல்லூரி மாணவி சந்தியா. நண்பர்களாகத் தான் தாங்கள் இருவரும் பழகுவதாக சந்தியாவும் ஜீவாவும் தங்கள் நண்பர்களிடம் கூறுகிறார்கள். தங்கள் நட்பு ஒரு கட்டத்தில் தன்னுள் காதலாக மாறுவதை உணரும் ஜீவா தன்னைத் திருமணம் செய்து கொள்ள முடியுமா என்று நேரடியாக கேட்க, தனக்கு ஜீவாவின் மீது காதல் வரவில்லை என்றும் ஜீவாவுடன் தான் நட்பாகத்தான் பழகுவதாக சந்தியா கூறுகிறார். சந்தியா தன் மீது கொண்டுள்ள நட்பு என்றாவது ஒரு நாள் காதலாக மாறும் என்ற நம்பிக்கையில் தன்னுடைய காதலைத் தொடர்கிறார் ஜீவா.

ஜீவா தன் மகளைக் காதலிப்பதை எதிர்கிறார் சந்தியாவின் தாய் மாளவிகா. அம்மா எதிர்த்தாலும் அப்பா நாசர் மகள் என்றாவது ஜீவாவைக் காதலித்தால் அவர்கள் திருமணத்திற்கு தன் முழு சம்மதமும் உண்டு என்று கூறுகிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய வேலையில் இருக்கும் ஆபத்தை உணர்ந்து சந்தியாவை வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்ளுமாறு கூறுகிறார் ஜீவா. சந்தியாவிற்கு திருமண ஏற்பாடுகளும் நடக்கின்றன. திருமணம் நடந்ததா இல்லையா என்பதே முடிவு.

ரிஸ்க் பாஸ்கராக நடித்திருக்கும் ஜீவா ஆஹா இவரால் இப்படி எல்லாம் நடிக்க முடியுமா என்று அசர வைக்கிறார். சதா அடிதடி என்று சுற்றும் ஜீவா சந்தியாவின் மீது காதல் கொள்வதும் அதை அவரிடம் சொல்ல முடியாமல் திண்டாடுவதும் அருமை. சந்தியாவின் மனதில் நிச்சயம் தான் இடம் பிடிப்போம் என்ற நம்பிக்கையுடன் அவர் நண்பர்களிடம் பேசுவதும், நாசரின் மறைவால் சந்தியாவும் அவர் அம்மாவும் நிலை குலைவதைப் பார்த்து தானே சந்தியாவிடம் வேறு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லும் காட்சியிலும் சந்தியாவின் திருமணத்திற்கு முதல்நாள் மாப்பிள்ளையுடன் பேசும் காட்சியிலும் ஜீவாவின் நடிப்பு சூப்பர்.

காதல் படத்திற்குப் பிறகு சந்தியாவிற்கு நன்றாக நடிக்க வாய்ப்பு கிடைத்த மற்றொரு படம் இதுதான். ஜீவாவை தயங்காமல் நண்பராக ஏற்றுக்கொள்ளும் சந்தியா ஜீவா தன் காதலை வெளிப்படுத்திய பிறகு அவரைக் காதலிக்க தயங்குவதும், பிறகு ஜீவாவின் மீது இனம் புரியாமல் தான் வெளிப்படுத்தும் அக்கறையால் தான் அவரைக் காதலிப்பதை உணர்ந்து கொள்வதும் அருமை. கொடுத்த வேலையைக் கச்சிதமாக செய்துள்ளார். ஜோதிகாவைப் போலவே துறுதுறு என்று இருப்பது சந்தியாவிற்கு பெரிய பிளஸ்பாயிண்ட்.

சந்தியாவின் அப்பாவாக - தீயணைப்புத் துறை வீரராக நாசர். மகள் நட்பு - காதல் இரண்டையும் போட்டு குழப்பிக் கொண்டு தவிப்பதை அறிந்து கொண்டு அவருக்கு அட்வைஸ் செய்யும் இடத்தில் தன் நடிப்பால் மிளிர்கிறார்.

வழக்கமான நகைச்சுவை நடிகர்களை விட்டு உயரம் ரொம்ப கம்மியான பத்ரூ என்பவரை காமெடியில் கலக்க விட்ட இயக்குனருக்கு ஒரு சபாஷ். மூன்றடி இருந்து கொண்டு என்னமாக கலக்குகிறார்? பார்ப்பவர்களிடமெல்லாம் அவர் கடன் கேட்கும் டெக்னிக்கைப் பார்த்து அனைவரும் பயந்து ஒட, ஒரு கட்டத்தில் தான் பார்ப்பவர்களிடமெல்லாம் கடன் வாங்குவதற்கான காரணத்தை அவர் கூறும் போது மனதை நெகிழ வைக்கிறார்.

விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. குறிப்பாக நெஞ்சாங்கூட்டில் பாடல் நெகிழ வைக்கிறது. அறிமுக ஒளிப்பதிவாளரான ஸென்டோனியோவின் ஒளிப்பதிவு சூப்பர். வழக்கமான காதல் கதை தான் என்றாலும் அதை சற்று வித்தியாசமான எடுத்திருக்கும் விதத்திற்காக இயக்குனர் சசிக்கு ஒரு சபாஷ். மொத்தத்தில் ஜீவாவிற்கு இந்தப்படம் ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

Copyright © 2005 Tamiloviam.com - Authors