தமிழோவியம்
இயேசு சொன்ன கதைகள் : சடங்குகள் பூஜைகள்
- சிறில் அலெக்ஸ்

தவறாமல் சடங்குகளையும், பூசைகளையும், தொழுகையையும் நிறைவேற்றினால் போதுமானது எனும் எண்ணம் மதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. சடங்குகள் பூஜைகள் தொழுகைகளின் உள்நோக்கங்கள் சிறப்பானவை என்பதில் ஐயமில்லை, இருப்பினும் வெளி அடையாளங்களோடு மட்டுமே பக்தியை நின்றுவிடச் செய்கின்றன இவை.

இதுபோன்று சடங்குகளோடு மட்டும், கடவுளுடனான உறவை நிறுத்திக்கொள்பவர்கள் பலர்.

இத்தகைய பக்தியுடையோர் மற்றவர்களை குறை சொல்லுவதும், தன்னைப் பிறரைவிட உயர்வானவராக நினைப்பதும் பொதுவானது. கோவிலுக்குப் போகாத நபரை, பூசை சடங்குகளில் பங்கெடுக்காத நபரை ஒழுக்கமற்றவர் எனவும் எண்ணுவதுண்டு.

இயேசு ஒரு புரட்சிக்காரர். அமைப்புவாதத்தை வெறுத்தவர். கோவில்களை வியாபாரக்கூடமாக்கியவர்களை சாட்டைகொண்டு அடித்து விரட்டியவர். சாமியார்களையும், சமயப் பெரியவர்கள், கடவுளின் தீவிர பக்தர்கள் எனச் சொல்லிக்கொண்டு மக்களை கடவுளின் பேரில் ஏய்த்தவர்களையும் சவால் செய்தவர். 'வெளிவேடக்காரர்களே உங்களுக்கு ஐயோக்கேடு' என்றார். 'வீரியன் பாம்புக் குட்டிகளே' என ஏசினார். 'வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே' என ஒப்பிட்டார்.

இறைவனுக்கு யார் நெருக்கமானவர்? வெறும் சடங்குகளில் ஈடுபட்டுக்கொண்டு 'கடவுளைத் தெரியும்' என கர்வம் கொண்டலைபவரா அல்லது தன் இயலாமையை, பாவித்தனத்தை நினைத்து வருந்தும் சாமான்யனா?

"ஒருவனுக்கு இருவர் கடன்பட்டிருந்தனர். ஒருவன் ஐநூறு தினாரியும் இன்னொருவன் ஐம்பதும். இருவரும் கடனை திருப்பித்தர இயலாதபோது இருவரையும் அவன் மன்னித்தான். இப்போது இந்த இருவரில் யார் கடன் கொடுத்தவனை அதிகம் நேசிப்பான்?" எனக் கேட்டார் இயேசு.

யாருக்கு அதிக கடன் மன்னிக்கப்படுகிறதோ அவனே அதிகம் அன்பு செலுத்துவான்.

யார் ஒருவர் தன் பாவங்கள் அதிகமாய் மன்னிக்கப்படுகிறது என உணர்கிறானோ அவனால்தான் கடவுளை அதிகமாக அன்புசெய்ய முடியும்.

"இருவர் செபிக்கச் சென்றனர். ஒருவன் பீடத்துக்கு முன் நின்று. 'கடவுளே! நான் அந்தப் பாவியைப் போலல்லாமல் நல்லதே செய்கிறேன் நாள்தோறும் தொழுகிறேன். என்னக்கருளும்.' என்றான். மற்றவனோ கோயிலுக்குள் செல்ல மனமில்லாதவனாய், வானை ஏறிட்டுப் பார்க்க துணிவில்லாதவனாய், மார்பில் அடித்துக்கொண்டு 'கடவுளே நான் பாவி என்மேல் கருணைகொள்ளும்' என்றான். இவனே கொடைகளோடு வீடு சென்றான். தன்னைத் தானே உயர்த்துகிறவன் தாழ்த்தப் படுவான். தன்னைத் தாழ்த்துகிறவனோ உயர்த்தப் படுவான்." என்றார் இயேசு.

Copyright © 2005 Tamiloviam.com - Authors