தமிழோவியம்
தராசு : எது அவமானம்
- கணேஷ் சந்திரா

புதுதில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம், குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு 'டிப்ளோமேடிக்' விசா வழங்க மறுத்து விட்டது, மேலும் அவருடைய டூரிஸ்ட்/பிசினஸ் விசாவையும் ரத்து செய்துவிட்டது. உடனே பாரதீய ஜனதா மற்றும் அதன் கூட்டணி ஜால்ராக்கள் இது இந்தியாவிற்கு நேர்ந்த அவமானம் என்று கோஷம் தொடங்கியுள்ளனர். இந்த அவமானத்திற்கு காரணமே இவர்கள் கொள்கைதான் என்று எப்போது உணரப்போகிறார்கள் ?

தன் நாட்டிற்கு யார் வர வேண்டும் யார் வர வேண்டாம் என முடிவு செய்யும் அதிகாரம் அமெரிக்காவிற்கு உள்ளது. ஒற்றை வரியில் மறுக்காமல், மறுக்கப்பட்டதற்கு தகுந்த காரணத்தையும் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது.

ஒன்று, டிப்ளோமேடிக் விசாவில் வருவதற்கான அடிப்படை தகுதி சரிவர நிரூபிக்கபடவில்லை.

இரண்டு 2002 ஆம் ஆண்டு மோடி ஆட்சியிலிருந்த போது முஸ்லீம் மக்களுக்கு எதிராக மத உணர்வையும் கலவரத்தையும் ஏற்படுத்தி 2000 மேற்பட்டோரை பலியாக்கினார். இதை புலானாய்வு செய்து வெளியிட்டதே இந்திய அரசாங்கம்தான் என்று அதன் தொடர்பாளர் ஆதம் எரேலி குறிப்பிட்டார்.

நரேந்திர மோடி போன்றோர், ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பதே இந்தியாவிற்கு பெரிய அவமானம். அதை விட பெரிய அவமானம் விசா மறுக்கப்பட்டதால் இந்தியாவிற்கு ஏற்படப்போவதில்லை.

இதற்கு பிறகாவது பாரதீய ஜனதா மோடி போன்ற மதவாதிகளை ஒதுக்கிவைத்து, மதஆட்சி செய்யாமல் மக்களாட்சி செய்தால் இந்தியா சர்வதேச அளவில் அவமானப்படாமல் தலைநிமிர வாய்பளிக்கும்.

பின்குறிப்பு :

விசா கொடுக்க மறுத்ததால் விஸ்வ ஹிந்து மற்றும் பஜ்ரங்தல் அமைப்பினர் சூரத்தில் பெப்ஸி கம்பெனியை சூறையாடியுள்ளனர். விசா கொடுக்க மறுத்தற்கு காரணமே இவர்களுடைய இம்மாதிரி செயல்கள்தான். அதைக்கூட புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும் இவர்களை என்ன சொல்வது.

 

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors