தமிழோவியம்
உள்ளங்கையில் உலகம் : கம்பியில்லாத் தொழில் நுட்பம்
- எழில்

பேசுக செல்பேசியில் அளவோடு; செலவானால்
பேசுதலின் குறுந்தகவல் நன்று.

கம்பியில்லாத் தொழில் நுட்பத்தின் வேர்களைத் தேடினால் , அது ரேடியோ அலைகளைக் கண்டுபிடித்து அதனை நீண்ட தூரத்திற்கு ஒலிபரப்ப முடியும் என்று நிரூபித்த மார்க்கோனியிலிருந்து ஆரம்பிக்கும். எனவே, சுருக்கமான ஒரு அறிமுகம் செய்ய முயன்றால், வானொலி, தொலைக்காட்சி, போர்க்காலங்களில் சமிக்ஞை பறிமாறிக்கொள்ளும் கம்பியில்லா தொடர்பு முறைகள்  என்று நீண்டு நம் ஊர்க் காவல்துறை உபயோகிக்கும் பெரிய பெரிய வயர்லெஸ் கருவி வரை வந்து முடியும். மேலே சொன்ன எல்லா முறைகளும் அரசு  அல்லது பொது நிறுவனங்கள் பயன்படுத்துவதற்காகவோ அல்லது அலைபரப்பு (Braodcast) செய்வதற்காகவோ உதவுபவை. சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையில் கம்பியில்லாத் தொலைத் தொடர்பு வசதி செய்யும் எண்ணம் நாளடைவில் வலுப்பெற்றது.

குறைக்கடத்திகளின்( Semi Conductors) பயனால் ஏற்பட்ட சில்லுப்புரட்சி, மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்புத்துறையில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தியது.1970-க்குப்பின் கம்பியில்லாத் தொடர்பு முறை பிரசித்தி பெற ஆரம்பித்தது. இதனை முதலாம் தலைமுறை (First generation Wireless) என்று அழைக்கிறார்கள். இந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட கைக் கருவிகள்( Handsets) அளவில் சற்றுப் பெரியவை. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியது. ஒவ்வொரு நாட்டிலும் பயன் படுத்தப்படும்
அதிர்வெண் (Frequencey)களும் வேறு பட்டன. மேலும் நீங்கள் காரில் சென்று கொண்டிருக்கும் போது பேசிக்கொண்டே சென்றால் குறிப்பிட்ட எல்லை கடந்தவுடன் உங்கள் அழைப்பு துண்டிக்கப்பட்டு விடும். நீங்கள் அடுத்த கட்டுப்பாட்டு எல்லைக்குள் தற்போது வந்துவிட்டீர்கள். எனவே மீண்டும்  பழைய எண்ணை அழைக்க, தற்போது நீங்கள் நுழைந்துள்ள பகுதியில் இருக்கும் கட்டுப்பாட்டு அறை மூலம் தொடர்பு ஏற்படுத்திப் பேச வேண்டும். பேச்சும் தெளிவாய் இராது. நிறைய குறுக்கீடுகள், இரைச்சல்கள் இருக்கும். இத்தகைய முதலாம் தலைமுறை செல்பேசியைப் பயன்படுத்திப் பேசினீர்களேயானால்  இரைச்சல் மற்றும் குறுக்கீடுகள் காரணமாய் உங்களுக்கு ஆரம்பத்தில் எரிச்சலும் கோபமும் வரலாம். ஆனால் போகப் போகப் பழகிவிடும். என்ன செய்ய, வேறு வழி இல்லையே!

ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நுட்பத்தைக் கொண்டு இயங்கியதால் ஒரு நாட்டில் உபயோகிக்கும் கைக் கருவியினை மற்றொரு நாட்டில் பயன்படுத்த முடியாது, மற்றும் முதலாம் தலைமுறை  கம்பியில்லா நெட்வொர்க்குகளில் பல குறைபாடுகள் இருந்தன, இவை அனைத்தும் ஒப்புமை (Analog) முறையில் அமைந்தவை. ஒரே நேரத்தில் நிறையத் தொடர்புகள் ஏற்படுத்த முடியாமல் தட்டுப்பாடு (Capacity Limitation) ஏற்பட்டது.

எண்பதுகளின் ஆரம்பத்தில் ஐரோப்பிய நாடுகள் சற்று நெருங்கி வந்தன. உலகமயமாதல் , சந்தை மயமாதல் போன்ற திட்டங்கள் வலுப்பெற்றன. தொலைத்தொடர்பு வசதிகளை முன்னேற்றினால் தொழில் வளர்ச்சி விரைந்து வளரும் என்று அறிந்தனர். ஐரோப்பிய நாடுகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து , நாடுகளுக்கிடையே அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் முதல் முயற்சியாகத் திட்டம் ஒன்றை வகுத்தனர்.1982-ல் ஒரு புது வகை செல்பேசி முறையை உருவாக்க குழு அமைக்கப்பட்டது. செல்லிடை சிறப்புக் குழு  (Groupe Speciale Mobile) என்று பெயர் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்குழுவில் ஐரோப்பாவின் பலவேறு நாடுகளையும் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தொலைத் தொடர்புச் சட்டங்கள் இயற்றும் அமைப்புகள், தொலைத் தொடர்புச் சேவை வழங்குபவர்கள், பொறியியல் வல்லுனர்கள்  எனப் பல்வேறு அமைப்புகள் இணைந்தன. பத்து ஆண்டுகளில் குறையே இல்லாத, நிறைவான ஒரு செல்பேசிச் சேவையை வழங்க இக்குழு உறுதி பூண்டது. ஒப்புமை அமைப்பிலிருந்து (Analog system) இலக்கமுறை அமைப்பிற்கு (Digital system) மாறும் வண்ணம் திட்டங்கள் தீட்டப்பட்டன. காகிதத்தில் எழுதிய திட்டங்களும் விவர வரையறைகளும் (Specifications) ஆய்வகங்களிலும் சோதனைக் கூடங்களிலும்
செயல் முறையாகப் பரிசோதிக்கப்பட்டன. அடிப்படைச் செயல்முறைகள் சோதனை ரீதியாக வெற்றி பெற்றது அனைவருக்கும் புத்துணர்ச்சி தருவதாக அமைந்தது. 1990-ல் விவர வரையறைகள் இறுதி செய்யப்பட்டு முடிவானவை  நூற்று முப்பது வரையறைகள் , ஏறத்தாழ ஐயாயிரம் பக்கங்களுக்கு மேல்.

சரி, இந்தச் செல்பேசி சேவையின் அடிப்படை நோக்கங்கள் என்ன?

1.இரைச்சலோ, இடையூறுகளோ இல்லாத மேம்படுத்தப்பட்ட பேச்சுத்தரம் . செல்பேசி கொண்டு பேசுபவர்கள் பேச்சை, எதிமுனையில் இருப்பவர்கள் எவ்விதச் சிரமமும் இன்றி அப்படியே புரிந்து கொள்ள முடியும். எதிர்முனையில் பேசிபவர்களது பேச்சும் செல்பேசியில் தெளிவாய் உணரப்படுதல் வேண்டும்.

2.குறைந்த செலவு, நிறைந்த சேவை. செல்பேசி வலையமைப்பு (network)அமைத்தல், அவற்றைச் செயல்படுத்துதல், அவற்றைப் பேணுதல் (maintenance) - இதற்கு ஆகும் செலவுகளை நெறிப்படுத்தி குறைந்த செலவில் நிறைவான சேவையை வாடிக்கையாளர்களுக்கு அளித்தல்.

3. உயர்வகைப்பாதுகாப்பு (Security). நாம் பேசும் பேச்சு, செல்பேசியிலிருந்து வலையமைப்பை அடையும் வரை வானலைகளாக மாற்றப்பட்டு அனுப்பப்படுகிறது. இந்த வானலைகளை இடைமறித்துப் பிறர் ஒட்டுக்கேட்க முடியாவண்ணம் , மிகப் பாதுகாப்பான முறையில் நெட்வொர்க்கிற்கும் செல்பேசிக்கும் இடையே தகவல் பறிமாற்ற முறை  அமைத்தல்.

4. சர்வதேச அலையல் (International Roaming) . எந்த நாட்டிற்குச் சென்றாலும் , எங்கிருந்தாலும் பிறர் நம்மைத் தொடர்பு கொள்ளவும் , நாம் பிறரைத் தொடர்பு கொள்ளவும் வசதி செய்தல்.

5. கைக் கருவி , கையில் அடங்கும் வண்ணம் அடக்கமாகத் தயாரித்தல், மேலும் கைக் கருவிகள் குறைந்த திறனில் நெடு நேரத்திற்கு  இயங்கும் வண்ணம் (Low Power) தயாரித்தளித்தல்.

6. கம்பியில்லா வலையமைப்புகள் , எதிர்காலத்தில் வரப்போகும் புதுப்புது  நுட்பங்களையும் முன்னோக்கி, அதற்கேற்றாற்போல் தகவமைத்துக்கொள்ளுதல். அதாவது, புதிது புதிதாய்ப் பின்னாளில் வரும் கண்டுபிடிப்புகள், புதிய சேவைகள் ஆகியவற்றை , இருக்கும் வலையமைப்பிலேயே சில மாறுதல்கள் செய்து , அச்சேவைகளை ஏற்றுக்கொண்டு மேலும் வளர்தல்.

பின்னர் வலையமைப்புகள் அமைக்கப்பட்டன. கைக் கருவிகள் வடிவமைக்கப்பட்டன. வணிக ரீதியாக, ஒரு நாட்டிற்கு இரண்டு சேவை வழங்குனர்கள் என்று  முதலில் தீர்மானிக்கப்பட்டது. 1992 முதல் சேவைகள் தொடங்கின. அன்றிலிருந்து இன்று வரை இந்த செல்பேசிச் சேவையின் வளர்ச்சி ஏறுமுகம்தான், ஜெர்மனியில் மட்டும் இச்சேவை ஆரம்பித்த முதல் பதினெட்டு மாதங்களுக்குள் பத்து லட்சம் பேர் செல்பேசியைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். ஐரோப்பா தவிர்த்து முதன்முதலில் ஆஸ்திரேலியா இச்சேவையைப் பயன்படுத்தத் தயாரானது. பின்னர் மற்ற நாடுகளும் இந்த முறையைப் பின்பற்ற முன்வந்தன. சுமார் 30 நாடுகளுக்கும் மேல் இணைந்து  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்( Memorandum of Understanding ,MoU) கைச்சாத்திட்டன. ஐரோப்பியாவிற்கு மட்டும் சொந்தமான இந்தச் செல்பேசிச்சேவை  உலகளாவிய நகர்தொலைத் தொடர்பு முறையானது (GSM - Global System for Mobile Communication). இந்தக் காலகட்டத்திலிருந்து  இரண்டாவது தலைமுறைக் கம்பியில்லாத் தொடர்பு முறை (Second generation) ஆரம்பிக்கிறது. சென்ற ஆண்டில்,(2004) இந்தச் செல்பேசிச் சேவை தொடங்கிப் பன்னிரெண்டு ஆண்டுகளில் உலகமெங்கும் இச்சேவையைப் பயன்படுத்திப் பாவிக்கும் பயனாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு ஆயிற்று தெரியுமா?  100 கோடி! நம்புங்கள், இது உண்மையே. தற்போதைய  உலக மக்கள்தொகை 600 கோடி. அப்படியானால் உலகில் ஆறில் ஒருவர் இச்சேவையைப் பயன்படுத்தும் அளவுக்குப் பிரபலம் அடைந்துள்ளது.

உலகளாவிய சேவை என்று கூறினேன். அமெரிக்காவிலுமா? 

அமெரிக்காவில் பயன்படுத்தப் படும் செல்பேசிச் சேவை , ஐரோப்பாவிலும் பிற கண்டங்களிலும் அறிமுகமான முறையிலிருந்து வேறுபட்டது . அதனைப்பற்றியும் நாம் பிறகு விரிவாக அலசலாம்.  ஆனால் இன்றைக்கு அமெரிக்காவிலும்  பரவலாக ஜி எஸ் எம் சேவைகள் பிரபலமடைந்து வருகின்றன.


துண்டுச் செய்தி:

ஸ்வீடனின் மக்கள் தொகை 90 லட்சம் தான்.  ஆனால் பயன்படுத்தப்படும் செல்பேசிகளின் மொத்த எண்ணிக்கை 93 லட்சம்!

Copyright © 2005 Tamiloviam.com - Authors