தமிழோவியம்
முத்தொள்ளாயிரம் : ஹேப்பி பர்த்டே
- என். சொக்கன்

பாடல் 93

'அடுத்த வாரம் எனக்கு ஹேப்பி பர்த்டே வருமே', என்று உற்சாகத்துடன் சொல்லும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறோம் - இலக்கணப்படி, அது 'பர்த்டே'மட்டும்தான். ஆனால், 'ஹேப்பி' என்ற சந்தோஷ அடைமொழியை, குழந்தைகள் தானாய்ச் சேர்த்துக்கொள்கின்றன - பிறந்த நாள் என்றாலே அது சந்தோஷமானதுதான் என்னும் உறுதியான நம்பிக்கையில் ! (சிறிதே வளர்ந்தபின், நாம் அந்த 'ஹேப்பி'யைத் தவிர்த்து, வெறும் 'பர்த்டே'க்களைக் கொண்டாடத்துவங்கிவிடுவது, தற்செயலானதில்லை !)

வருடத்தின் எல்லா நாள்களும் ஒரேமாதிரி இருக்கும்போது, பிறந்த நாள் என்பது சற்றே அதிக விசேஷம் - சாதாரணர்களாகிய நாம், அந்த ஒரு நாளில்மட்டுமாவது, நம்மை நாயகர்களாய் உணர்ந்துகொள்ள வாய்ப்புத் தருவதால் !

ஆனால், சந்தோஷம் தரும் அந்தப் பிறந்த நாள் வரும்போது, நாம் நோய்வாய்ப்பட்டுவிட்டால் ? மாத்திரை சாப்பிட்டுக்கொண்டு, படுக்கையில் சோர்ந்து கிடக்கையில், பிறந்த நாளின் உற்சாகத்தை யாரால் உணரமுடியும் ?

அப்படி ஒரு நிலைமைதான், இந்தப் பாடலின் நாயகிக்கு !

அழகான யானைமீது ஏறி பவனி வரும் பாண்டியனின் காதலி அவள் - அவனைப் பார்த்தாலே அல்லது நினைத்தாலே பரவசமுற்று, பிறவிப் பயன் பெற்றதுபோல் ஆனந்தத்தில் திளைப்பவள் !

ஆனால், இந்தக் கதையெல்லாம், அவனைச் சேர்ந்திருக்கும்போதுதான் - இப்போது, அவனைப் பிரிந்திருக்கிற சூழல் !

முன்பு ஆனந்தம் தந்த அவனுடைய நினைப்பு, இப்போது பிரிவின் ஞாபகத்தைதான் கொண்டுவருகிறது - முன்பு காதல் மயக்கத்தை ஏற்படுத்திய மாலை வேளையும், வாடைக் காற்று, இப்போது அவளைப் பார்த்துக் கோபமாய்ச் சீறுகிறது - வலி தருகிறது ! வேதனை தருகிறது !


பிணிகிடந் தார்க்குப் பிறந்தநாள் போல
அணிஇழை அஞ்ச வருமால் மணியானை
மாறன் வழுதி மணவா மருள்மாலைச்
சீறியோர் வாடை சினந்து.

(பிணிகிடந்தார் - நோய்வாய்ப்பட்டுக் கிடப்பவர்கள்
அணி இழை - அழகிய ஆபரணங்கள்
மணவா - மணக்காத
மருள் - மயக்கம்
சீறியோர் - கோபம் கொண்டவர்கள்)


பாடல் 94

காதலில் காத்திருப்பும் ஒரு சுகம்தான் என்று கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள் !

'ஆமாம் ! இந்தக் கவிஞர்களுக்கு வேறு வேலை என்ன ?', என்று சலிப்போடு சொல்கிறாள் ஒரு காதலி, 'காத்திருப்பதில் சுகம் காண்பதெல்லாம், கவிதையில்மட்டும்தான் சாத்தியம் ! நிஜத்தில், காக்கவைக்கிறவர்களின்மீது எரிச்சல்தான் வரும் ! தன்னந்தனியே காத்து நிற்பதால், சுற்றியிருக்கிறவர்களெல்லாம் ஒருமாதிரி பார்க்க, தாமதமாய் வருகிறவனைக் கடித்துக் குதறதான் தோன்றும் !'

அவள் சொல்வதில் நிஜம் இல்லாமல் இல்லை - காதலனை, அல்லது காதலியைப் பார்ப்பதற்கு ஒரு நேரம் (அல்லது நாள்) குறித்துவிட்டால், அந்த நேரத்தில் அவன் அல்லது அவள் வந்தாகவேண்டும் - அப்படியின்றி, வெறுமனே கையைக் கட்டிக்கொண்டு காத்திருப்பதில் யாருக்கு விருப்பமிருக்கும் ?

இந்தப் பாடலில் வரும் பெண்ணும் அப்படிதான் - கொடிய போரில், பகைவர்களை வீரமுடன் எதிர்த்து, வெற்றிபெற்ற பாண்டியனின் காதலி இவள். அவனைக் காணாமல் தவித்திருக்கிறாள்.

அப்போது, இந்தக் காத்திருப்புக் காலத்தின் தனிமை கனம் தாங்காமல், அவள் அவனைப்பற்றிப் பலவிதமாய் பேசத்துவங்கிவிடுகிறாள். அவனைச் சந்தித்து மகிழ்ந்த, பழைய நாள்களைப்பற்றிச் சொல்கிறாள், அவனுடைய வீரத்தைப்பற்றிப் பேசுகிறாள், அவனுடைய அழகை வர்ணிக்கிறாள், 'ஏன் இன்னும் வரவில்லை ?', என்று கவலைகொள்கிறாள், 'என்னைவிட, அரண்மனையில் அப்படி என்ன வெட்டிமுறிக்கிற வேலை ?', என்று செல்லமாய்க் கோபிக்கிறாள், 'இன்றைக்கு அவன் வரட்டும், இனிமேல் தாமதமாய் வருவாயா என்று அவனை மிரட்டி, உலுக்கிவிடுகிறேன் !', என்று தனக்குள் உறுதி சொல்லிக்கொள்கிறாள் !

இப்படியாக, அவன் இல்லாதபோது ஆயிரம் விஷயங்களைப் பேசும் இந்தப் பெண், அவனைக் கண்ணால் பார்த்ததும் என்ன செய்கிறாள் ?

அதுவரை, கவலை, கோபம், வருத்தம் என்று ஏராளமான உணர்ச்சிகளைக் கொண்டிருந்த அவளுடைய மனம், அவனைப் பார்த்த மறுகணம், 'வெட்கம்' என்னும் ஒற்றை உணர்ச்சிக்கு அடிமையாகிவிடுகிறது - சட்டென்று பேச்சு நின்றுவிடுகிறது, அவன்முன்னே தலைகுனிந்து நின்று, ஓரக்கண்ணால் அவனை ரகசியமாய்ப் பார்த்தபடி நிற்கிறாள் ! ('வேறென்ன செய்வது ? இந்த பாழாய்ப்போன வெட்கம், என்னுடைய உடன்பிறந்த சகோதரியாயிற்றே !', என்று நாணத்துடன் தனக்குள் பேசிக்கொள்கிறாள் அவள் !)

அவளுடைய மனம், அவனை ஆசையாய்ப் பார்த்தபடி, 'அணிகலன்கள் அணிந்த உன் அழகு மார்பை, எனக்குத் தா !', என்று கேட்கிறது ! உடல், அவனைத் தழுவிக்கொள்கிறது !


மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக்
காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன் கண்டக்கால்
பூண்ஆகம் தாஎன்று புல்லப் பெறுவேனோ ?
நாணோடு உடன்பிறந்த நான்.

(மாணார் - பகைவர்கள்
மறம் - வீரம்
வெம்போர் - கொடிய போர்
காணாக்கால் - பார்க்காவிட்டால்
கண்டக்கால் - பார்த்துவிட்டால்
பூண் - ஆபரணங்கள்
ஆகம் - உடல்
புல்ல - அணைக்க / தழுவ
நாண் - வெட்கம்)

Copyright © 2005 Tamiloviam.com - Authors