தமிழோவியம்
அண்ணாச்சி உலகம் என்னாச்சி ? : ரிலையன்ஸ் காய்கறி கடை
-

 

வழக்கம்போல நாயர்கடை பெஞ்சில் பேப்பருடன் அமர்ந்திருந்தார் அண்ணாச்சி.

"நாயர், ஊர்ல எல்லாம் எப்டி?"

"நன்னாயிட்டு உண்டு அண்ணாச்சி."

"நம்ம பசங்களப் பாத்தியா. உலகக் கோப்பையிலேந்து மானம் போயி திரும்ப வர்றானுங்க. இந்தியா பூரா எதிர்ப்பு. மக்களெல்லாம் கொடும்பாவி எரிக்கிறதும், ப்ளேயர் வீட்ல கல்லெறியுறதுமா பயங்கர கலாட்டா. மூணு நாலுபேரு மாரடைப்புல செத்துருக்காங்க நாயர். என்னக் கொடுமை பாத்தியா?"

"பின்ன இத்தன மோசமாயிட்டு தோத்தா வேறென்ன செய்யும்?"

"அவமானம். பெட்டிங், பிக்சிங்னு கிரிக்கெட்ட நாசம் பண்ணிட்டாங்கப்பா. கொல செய்யுறவரைக்கும் போயிடுச்சுன்னா பாரேன். புதுசா சின்னப் பசங்கள வச்சு டீம் பண்ணணும்னு சொல்லியிருக்காங்க. அடுத்த தடவையாவது ஏதாவது வாய்ப்பிருக்குதான்னு பாப்போம். கோகிக்கணக்குல கிரிக்கெட்டுக்கு செலவு செஞ்சு இப்டி தோத்தா எப்டி? இவங்க தோத்ததுல நன்மையும் இருக்குது. இப்ப பசங்க பரிச்சைக்கு ஒழுங்கா படிக்கலாம். வேலைக்குப் போறவங்களோட திறன் அதிகரிக்குமாம். அதனால இந்தியாவுக்கு லாபமாம் நாயர்."

"ஆனா அவங்களுக்கு செக்யூரிட்டிக்கு அதிகமா செலவு செய்யவேண்டியிருக்கே."

"ம்."

ஜோசப் வந்தான்.

"அண்ணாச்சி கிரிக்கெட் பத்தி பேசாதீங்க. வேறென்ன செய்தி இந்த வாரம்?"

"இந்த வாரம் பெரிய செய்தி என்னண்ணா. ஒரு 15 இங்கிலாந்து கடல்படை வீரனுங்கள இரான்காரன் புடிச்சுட்டு போயிட்டான். இரான் கடல் பகுதியில வேவு பாத்தானுங்கன்னு அவன் சொல்றான். இல்ல ஈராக் பகுதியிலத்தான் ரோந்து நடந்துச்சுன்னு இங்கிலாந்து சொல்லுது. இன்னைவரைக்கும் இதுக்கு முடிவு வரல."

"இரான்காரந்தான் இப்ப புது வில்லனோ?"

Bush"அமெரிக்காவுக்கு இப்ப இவந்தான் வில்லன். ஐ.நா வுல ஏற்கனவே இருந்த பொருளாதாரத் தடைக்கும் மேல இன்னும் அதிகமா போட்டிருக்காங்க. இரான் எதுக்கும் மசியிறமாதிரி இல்ல. இன்னொண்ணு இந்தியாவுக்கு இரான்லேந்து எண்ண கொண்டுவர ஒரு பைப் போடுற திட்டம் இருக்குது அதச் செய்யக் கூடாதுன்னு அமெரிக்கா இந்தியாகிட்ட சொல்லியிருக்கு."

"அவன் யாரு நமக்குச் சொல்ல?" ஜோசப் கேட்டான்

"ஆமா. அதான் இந்தியா அதெல்லாம் முடியாதுன்னு சொல்லியிருக்கு."

"வேறென்ன நியூஸ்."

"இலங்கையில ஒரு நியூஸ். விடுதலைப் புலிங்க முதல் முறையா விமானத் தாக்குதல் நடத்தியிருக்காங்க. கொழும்புக்கு பக்கத்துல இருக்கிற கட்டுனாயக்க இராணுவ விமாளத்தளத்தின்மேல தாக்குனதுல 2 பேர் எறந்திருக்காங்க."

"அப்ப விடுதலப் புலிங்ககிட்ட ப்ளேன் இருக்குது?"

Musharraf"ஆமா. இன்னொரு பக்கத்து நாடு பங்ளாதேஷ்ல பறவை காய்ச்சல் வந்திருக்குதாம். அங்க பண்ணையில இருந்து 1500க்கும் மேல கோழிங்கள கொன்னுருக்காங்க. நம்ம ஊர்ல எப்ப வேணும்னா வரலாம்னு சொல்லியிருக்காங்க."

"இப்பத்தான் சிக்கன் குனியா போயிருக்கு அடுத்தது இதுவா?"

"ம். பாக்கிஸ்தான்ல இன்னும் கலவரம் நடந்துட்டே இருக்குது. முஷ்ரப்புக்கு பயங்கர எதிர்ப்பு."

"அந்த ஜட்ஜ தூக்கினதுக்கா?"

"ஆமா. நம்ம தெல்கி இருக்கான்லா?"

"யாரு முத்திரைத்தாள் தெல்கியா?"

"ஆமா. அவனுக்கும் இன்னும் நாலுபேருக்கும் 10 வருசம் ஜெயில்னு தீர்ப்பு வந்திருச்சு. அவன் என்னடான்னா உண்மையான குற்றவாளிகள் தப்பிச்சுட்டாங்கன்னு பேட்டி குடுத்திருக்கான்."

"எல்லாம் அப்டித்தான் சொல்வாங்க. ஆனா இதுல உண்மையிருக்கலாம்." ஜோசப் சொன்னான்.

"யாருக்குத் தெரியும்?"

"அண்ணாச்சி நம்ம தமிழ் நாட்டு பட்ஜெட்டப் பத்தி என்ன சொல்றீங்க?" கேட்ட ஜோசப்பை பார்த்து சிரித்தார் அண்ணாச்சி.

"வரியில்லாத பட்ஜெட்டெல்லாம் ஒரு பட்ஜெட்டா? ஏற்கனவே இலவசம் இலவசம்ணு குடுத்து குடுத்து சிவந்த கைகள், பழக்கம் விடல. புதுசா வரி எதுவுமில்லாத இந்த பட்ஜெட்ட போயி மக்களுக்கு விளக்குவும் வேணுமாம் முதல்வர் சொல்லியிருக்காரு. இந்த அரசியல்வாதிகளே இப்டித்தான். குஜராத் கலவரத்துல எறந்தவங்களுக்கும் தீவிரமா காயப் பட்டவங்களுக்கும் 92.39 கோடி அளவுல நிவாரணம் தரச்சொல்லியிருக்கு மத்திய அரசு. ஆனா இதுல சதியிருக்குது, சரியானவங்கலுக்கு நிவாரணம் போகல, தேர்தல் நேரத்துல இந்த அறிவிப்பு தவறுன்னு எதிர்க் கட்சியெல்லாம் குமுறுது."

"அரசியல விடுங்கண்ணாச்சி. பொதுமக்கள் என்ன செய்றாங்க?"

"பொதுமக்கள் என்னடே பெருசா செஞ்சாங்க ஜோசப்? ரிலையன்ஸ்காரன் இப்ப காய்கறி கடையெல்லாம் வைக்க ஆரம்பிச்சுட்டான். இத எதிர்த்து சில்லற வியாபாரியெல்லாம் போராடியிருக்காங்க. ஒரு பையன் இங்லீஷ் சினிமாவப் பாத்துட்டு அதுல வர்றமாதிரி ஏதோ செஞ்சு பாக்கையில தீப்பிடிச்சி இறந்துட்டான்."

"ஈஸ்வரா?" நாயர் கவலையுடன் சொன்னார்.

"பொதுமக்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னண்ணா இந்தியாவுல ஏழ்மை 4.3% கொறஞ்சிருக்குது. ஒரு கணக்கெடுப்புல சொல்லியிருக்காங்க."

"என்னத்த கொறஞ்சிருக்குது?" ஜோசப்

"ஆமா ஏண்ணா இன்னைக்கும் 24கோடி போல ஆட்கள் ரெம்ப ரெம்ப மோசமான நெலமையில இருக்காங்களாம்."

"சுவையான செய்தி ஏதாச்சும்."

"இருக்குடே. நம்ம ரமணா படத்துல விஜயகாந்த் ஆஸ்பத்திரியில டாக்டரையெல்லாம் மாட்டிவிட ஒரு ஐடியா செய்வாரே."

"ஆமா."

"அதப் போல ஜப்பான்ல பத்திரிகை ஆட்கள் செலபேர் நிஜமாவே செஞ்சிருக்காங்க."

"எப்டி?"

"யூரின் டெஸ்ட்டுக்கு போயிட்டு. யூரினுக்குப் பதிலா குடிக்கிற டீயக் குடுத்து டெஸ்ட்பண்ணச் சொல்லியிருக்காங்க."

"ஆகா."

"ஆமா. 10 ஆஸ்பத்திரியில 6 பேரு நோயாளிக்கு சிறுநீர் கோளாறு இருக்குதுன்னு ரிப்போர்ட் குடுத்துர்க்காங்க. சிலர் மருந்தே எழுதிக் குடுத்திருக்காங்க."

"எப்ப ஏமாத்துரக் கும்பல் உலகம்பூரா இருக்குதுண்றீங்க."

"ஆமா ஜோசப். இந்த போஸ்ட் ஆபீஸ் வரைக்கும் போணும். நான் வரட்டா?". எழுந்தார் அண்ணாச்சி.

"அண்ணாச்சி நானும் வாரேன்." ஜோசப்பும் அண்ணாச்சியும் நாயர்கடையிலிருந்து விடைபெற்றனர்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors