தமிழோவியம்
அடடே !! : அழகிய தமிழ் மகள் இவள்
- சுமித்ரா ராம்ஜி

பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தால் எப்படி இருக்கும்?

Sukanya Krishnanஒரு இந்தியர் அதிலும் தமிழர் அதிலும் ஒரு பெண் சமீபத்தில் படைத்த சாதனயை சொல்கிறேன். எம்மி அவார்ட் (Emmy Award) எல்லாம் டிசைனர் உடை நகையெல்லாம் மாட்டி கொண்டு அமெரிக்கர்கள் மட்டுமே வாங்கக் கூடிய விஷயம் போல இருந்த நிலை மாறி, அழகான இந்திய உடையில் சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான எம்மி விருதை நம் சானல் WB11 சுகன்யா கிருஷ்ணன் அவர்கள் வாங்கிய அந்த கண் கொள்ளா காட்சியைப் பார்த்த எல்லா இந்தியருக்கும் குறிப்பாக தமிழர்களுக்கு அதிலும் பெண்களுக்கு மெய் சிலிர்த்துத்தான் போயிற்று.

இந்திய தமிழர்களின் பெருமைக்கு பெருமை சேர்த்துள்ள சுகன்யா, பல வருடங்களாக நியூ யார்க் தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவராக தமிழுக்கு சேவை செய்து வரும் டாக்டர் எம்.என். கிருஷ்ணன், டாக்டர் சசிகலா கிருஷ்ணன் அவர்களின் அருமைப் புதல்வி. தந்தை அருமையான பேச்சாளர். இவரது அத்தையோ தம் தெளிவான வசன உச்சரிப்பினாலும் நடிப்பாலும் தமிழ் படங்களில் மிகவும் புகழ் பெற்ற திருமதி எம்.என்.ராஜம் அவர்கள். சுகன்யாவின் பேச்சுத் திறன் அவரது ரத்தத்திலியே இருக்கிறது.

1995ல் ஏபிசி சானல் சார்ந்த WUTR டீவியில் செய்தி வாசிப்பாளராக தம் பயணத்தை ஆரம்பித்த சுகன்யா தொடர்ந்து CBS சானல் சார்ந்த மற்றொரு பென்ஸில்வேனியா சானலில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்து தற்போது WB 11ல் காலை செய்திகளின் வாசிப்பாளராக பணி புரிந்து வருகிறார்.

Sukanya Krishnan with her parentsசென்னையில் பிறந்து நியுயார்க்கில் வளர்ந்தவர். ஆங்கிலம் தவிர, தமிழ் மற்றும் ஸ்பானிஷ் மொழியில் தெளிவாகவும், சரளமாகவும் பேசக்கூடியவர். இவருடைய பொழுது போக்கே புத்தகம் படிப்பது, வாலிபால் ஆடுவது மற்றும் புதிய இடங்களை சுற்றிப்பார்பதுதான்.

செய்தி வாசிப்பது தவிர Home Delivery, The Sopranos ஆகிய டி.வி தொடர்களிலும் நடித்துள்ளார்.

தான் வாங்கிய விருதை விட பெரிய விருதாக சுகன்யா நினைப்பது எது தெரியுமா ?

“சுகி - நான் வளர்ந்தவுடன் உன்னை போலவே ஆக விரும்புகிறேன்” என்று அவருடைய விசிறியான ஒரு 10 வயதுப் பெண் அவருக்கு அனுப்பிய ஈமெயில் தானாம்.

அவர் மேன்மேலும் விருதுகள் வாங்கி அமெரிக்கா வாழ் இந்தியர்களின் பெருமையை உலகுக்கு வெளிச்சம் காட்ட வாழ்த்துவோம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors