தமிழோவியம்
திரைவிமர்சனம் : மாயாவி
- மீனா

இயக்குனர்கள் தயாரிப்பாளர்களாகும் வரிசையில் ஷங்கருக்கு அடுத்தபடியாக இயக்குனர் பாலாவின் சொந்தப்படம். இயக்குனர் சிங்கப்புலி.

மகாபலிபுரத்தில் டூரிஸ்ட் கைடாக மெயின் வேலைபார்க்கும் சூர்யாவின் பார்ட்டைம் வேலை திருடுவது. ஏகதடபுடல்களுடன் தியேட்டரில் படம்பார்ப்பது, நண்பர்களுக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்வது என்று தன் கையில் உள்ள பணத்தை ஜாலியாக செலவு செய்யும் நபர். இவரது உயிர் நண்பர் சத்யன். ஒருமுறை சூர்யாவிற்கு பணநெருக்கடி ஏற்பட, ஒரு பங்களாவில் திருடப்போகிறார்கள் சூர்யாவும் சத்யனும். அங்கே தூங்கிக்கொண்டிருக்கும் நடிகை ஜோதிகாவைக் கண்டு ஆனந்தக் கூத்தாடுகிறார்கள் இருவரும். விளைவு போலீஸ் லாக்அப் வாசம்.

ஜோதிகாவின் மேனேஜர் சண்முகராஜன் ஜோவிடம் நல்ல பெயர் வாங்க மீண்டும் சூர்யாவை ஜோவைக் கற்பழிக்க முயன்றதாகக் கூறி போலீசில் மாட்டிவிடுகிறார். சிறையிலிருந்து வெளிவரும் சூர்யா ஜோவைப் பழிவாங்கும் விதமாக கடத்துகிறார். முதலில் ஏகத்திற்கு முரண்டுபிடிக்கும் ஜோ, பின்னர் சூர்யா மற்றும் சத்யனின் நல்ல உள்ளத்தைப் பார்த்து மனம் மாறுகிறார். இறுதியில் சூர்யாவால் விடுவிக்கப்படும் ஜோவை பணத்திற்காக கடத்துகிறது மற்றொரு கும்பல். அதிலிருந்து ஜோ எப்படித் தப்பிக்கிறார் என்பதே மீதிக் கதை.

காமெடிக் கதையில் லாஜிக் பார்க்கக்கூடாது என்பதை ஒவ்வொரு விநாடியும் நினைத்துக்கொண்டே தான் மாயாவி படம் பார்க்கவேண்டும். முதல் பாதியில் கதை ஓக்கே. பென்சில் மீசை, தங்கப்பல் என்று படத்தில் தன் கெட்டப்பை நன்றாகவே மாற்றிக்கொண்டுள்ளார் சூர்யா. ஆக்ஷன் மட்டுமல்லாமல் காமெடி, செண்டிமெண்ட் என்று பலவிதங்களிலும் கலக்குகிறார். பாதிப் படம் வரை ஜோவிடம் அவர் பேசும் வார்த்தைகளில் பாதிக்கும் மேல் நக்கலோ நக்கல்.

ஜோதிகா நடிகை ஜோதிகாவாகவே வருகிறார். அதனால் ஜோவின் சொந்தக்குரல் டயலாக்குகளை கேட்கும் நெருக்கடி நமக்கு. முழிச்சு முழிச்சே பாதிப்படங்களில் நடிக்கிறார் என்றால் இதில் வசனம் என்ற பெயரில் கத்திக் கத்தியே கொல்கிறார்.

சூர்யாவின் நண்பனாக வரும் சத்யன் சரியான தேர்வு. ஜோவை அவர் வெறுப்பேற்றும் சீன்களில் சூப்பர். ஜோவின் மேனேஜராக வரும் சண்முகராஜன், நடிக நடிகைகளின் மேனேஜர்களில் முக்கால்வாசிப் பேர்கள் செய்யும் வேலைகளை அப்படியே அப்பட்டமாக காட்டியுள்ளார். முகத்திலும் குரலிலும் அப்படி ஒரு பணிவு. ஆனால் செய்யும் வேலையில் நயவஞ்சகத்தனத்தைத் தவிர வேறு ஒன்றுமில்லை. இவரது பாத்திரப் படைப்பு அபாரம்.

பாதிப் படம் வரை ஒக்கே. ஆனால் மீதிப்பாதி? நான்காவது பேரா முதல் வரியைத் தான் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். பூட்டிய வீட்டில் இவர்கள் அடிக்கும் லூட்டிகளை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது, சூர்யாவை கண்காணிக்க போலீஸ் எந்தவித முயற்சியும் செய்யாமல் இருப்பது என்று ஏகப்பட்ட ஓட்டைகள்..

இயக்குனர் சிங்கப்புலி திரைக்கதையில் ஏகத்திற்கும் கோட்டை விட்டிருக்கிறார். இதைத் தயாரிப்பாளர் என்ற விதத்தில் பாலாவாவது கவனித்திருக்கலாம். மொத்தத்தில் மாயாவியில் கதை மாயமாக மறைந்துவிட்டது.

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors