தமிழோவியம்
தராசு : கிலோ இரண்டு ரூபாய்
- கணேஷ் சந்திரா

ஓவ்வொரு தேர்தலின் போதும் நடக்கும் சந்தர்ப்பவாத கூட்டணிகளை விட சுவாரஸ்யமானது பிரபல கட்சிகளின் சாதனை விளக்கங்களும், தேர்தல் வாக்குறுதிகளும்.

1967 தேர்தலில், திரு. அண்ணாதுரை உபயோகித்த ரூபாய்க்கு மூன்று படி அரிசி வாக்குறுதியை தூசுதட்டி சற்று மாற்றி அமைத்திருக்கிறது இன்றைய தி.மு.க. "நாங்கள் ஆட்சிக் வந்தால், அக்கணமே நியாய விலைக் கடைகளில் ஓரு கிலோ அரிசி இரண்டு ரூபாயாகவும் மற்றும் எழை எளியோருக்கு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி இலவசமாக வழங்கப்படும்" என்று தி.மு.க தலைவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

சற்று திரும்பிப்பார்க்கையில், 1967ல் தி.மு.க ஜெயித்த போது சென்னை மற்றும் கோவை தவிர வேறெங்கும் ரூபாய்க்கு மூன்று படி (சில இடத்தில் ஒருபடி) சரியாக வழங்கப்படவில்லை. அங்கேயும் சில மாதங்களுக்கு பிறகு அது நிறுத்தப்பட்டது. காரணம் கேட்ட போது அப்போதைய உணவு மந்திரியாக இருந்த திரு.பா.வு சண்முகம், தேர்தலின் போது இருந்த விலைவாசி இப்போது இல்லை ஆகவே ரூபாய்க்கு மூன்று படி அரிசியை கட்டுபடியாகாது என்று தெரிவித்தார்.

இப்பொழுதும் கூட தனது தேர்தல் அறிக்கையில் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று சொல்லப்பட்டதே தவிர, அதில் கால அளவோ அல்லது எல்லைக்கோடு எது என்று
எதுவும் சொல்லப்படவில்லை. இதைத்தவிர தினப்படி சாப்பாடிற்கே வழியில்லாத மக்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி எதற்கு என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழாமல் இல்லை.

1964 - 1966களில் தமிழகத்தில் கடுமையான அரிசி பஞ்சம் இருந்தது. அப்போது ரூபாய்க்கு முன்று படி அரிசி என்ற யுக்தி தி.மு.கவிற்கு வெற்றியை தேடி தந்தது. இப்போது நிலமை அப்படி இல்லை. அதைத்தவிர அப்போது ஆளும் காங்கிரஸ் மீது மக்களுக்கு இந்தி திணிப்பு போன்றவற்றால் வெறுப்பே மிஞ்சி இருந்தது.

இப்போது மக்கள் அதிக விழிப்புனர்வோடு அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டுயிருக்கிறார்கள். ஆகவே வெறும் வார்த்தை ஜாலங்களினால் மட்டும் அவர்களை இழுக்க முடியாது.

அன்று போல் இன்றும் அரிசி பிரச்சாரம் பிரம்மாஸ்திரமாக பாய்கிறதா இல்லை புஸ்வானமாக போகிறதா என்று பொறுத்திருந்து பார்போம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors