தமிழோவியம்
கட்டுரை : ரஜினி-சப்தமா? சகாப்தமா?
- கணேஷ் சந்திரா

"ரஜினி"யைப் பற்றி பத்திச் செய்தியோ, பெட்டிச் செய்தியோ - எப்பொழுதும் பரபரப்பு தான். அப்படி இருக்க, புத்தகம் முழுவதும் ரஜினியைப் பற்றி வந்தால்? இதோ ஜெ.ராம்கி எழுதி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் "ரஜினி சப்தமா? சகாப்தமா? "

புத்தகத்தில் ரஜினிகாந்தைப் பற்றி புதிதாய் ஏதாவது எழுதியிருக்கிறதா? இல்லை அரைத்த மாவையே அரைத்து இருக்கிறார்களா? என்றால் பதில் மக்கள் தினசரிகளையும், திரைப்படங்களையும் எவ்வளவு உன்னிப்பாக படிக்கிறார்கள் - பார்க்கிறார்கள் என்பதை பொறுத்தது. தீவிர ரஜினி ரசிகனுக்கும் தெரியாத விஷயங்கள் இதில்  உண்டு. குறிப்பாய் கடந்த 25 ஆண்டுகளாக ரஜினிகாந்த் மேடையிலும், பத்திரிகையிலும் பேசிய முக்கிய விஷயங்கள் கவனமாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

ரஜினியின் சினிமா பிரவேசம் எப்படி, அவருடைய அரசியல் நிலை என்ன போன்ற விஷயங்கள் பலருக்கும் தெரிந்த சங்கதிதான். ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு தெரியாத விஷயங்களாகிய ரஜினி சினிமாவை விட்டு விலக முடிவு செய்தது எத்தனை முறை? அவரை ஒவ்வொரு முறையும் தடுத்தவர்கள் யார் யார்? ஒரு காலகட்டத்திற்கு மேல் ரஜினி வெறும் ஆக் ஷன் பட்ங்களை மட்டும் தேர்வு செய்தது ஏன்? பா.ம.கவுடன் மோதல் ஏன் / எப்போது தொடங்கியது? அரசியலில் அவருடைய மௌனத்தின் காரணம் என்ன? என்பது போன்ற பல விதமான கேள்விகளுக்கு தெளிவான பதிலைத் தந்துள்ளார் ஆசிரியர்.

ரஜினி கண்டிப்பாய் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்பவர்கள் இந்தப் புத்தகத்தை படித்தால் நிச்சயம் தங்கள் முடிவை மாற்றிக்கொள்வார்கள். ஏனெனில் ரஜினிக்கு சிறு வயது முதல் பிடித்த ஒரு விஷயம் தனிமை / ஆன்மீகம். அரசியலில் அது ஒரு கிடைக்கவே கிடைக்காது என்று தெரிந்த ரஜினி அதில் அடியெடுத்து வைக்க மறுக்கிறார். வராவிட்டால் வரமுடியாது என்று சொல்ல வேண்டியதுதானே என்று கேட்பவர்களுக்கு ஆசிரியர் மூன்று காரணங்களை சொல்கிறார். படித்தால் சரியாக இருக்கிறது. மேலும் ரஜினியின் குருநாதர் பற்றியும், அவருடைய குடும்பத்தைப் பற்றியும் விவரமாக எழுதியுள்ளார்.

முன்னமே சொன்னது போல இதில் பல விஷயங்கள் நமக்கு தெரிந்தது என்றாலும், அனைத்தையும் கோர்வையாக ஒரே இடத்தில் படிக்கும் போது நன்றாகவே இருக்கிறது.

ஒருவரைப் பற்றி தெரிந்த கொள்ள வேண்டுமென்றால் அவருடைய நெருங்கிய நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். நெருங்கிய நண்பன் என்று வரும் போது அதிகமான நல்ல விஷயங்களே வெளி வரும். அந்த நபர் செய்த தவறான முடிவுகளும் நண்பன் பார்வையில் சரியாகவே படும். ஆரிசியர் ரஜினியின் சோதனைக் கால கட்டத்தைப்பற்றி (80களில்) முழுமையாக எழுதாதது சிறு குறையாக இருக்கிறது.

புத்தக வடிவம், பேப்பர் தரம் மற்றும் அச்சிட்ட விதம் ஆகியவை நன்றாக உள்ளது.  கிழக்கு பதிப்பகத்தாருக்கு ஒரு ஷொட்டு.

ஜெ. ராம்கியின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டதக்கது.

பின்குறிப்பு : கல்லூரி நாட்களில் மயிலாடுதுறை ஜெ. ரஜினி ராம்கி என்கிற பெயர் சற்று பிரசித்தம். அப்பொழுது "சே! என்ன ஆளுயா இவன், பேரை இப்படி மாத்தி வெச்சிருக்கானே" என்று நினைத்த நான் - இன்று அவருடைய நல்ல நண்பராக அவருடைய புத்தகத்தை படித்து, விமர்சனம் எழுதி.... காலம்தான் எப்படி மாற்றுகிறது ?

காமதேனு.காமில் இந்தப் புத்தகம் வாங்க இங்கே சொடுக்கவும்

விலை : ரூ 50.


 

Copyright © 2005 Tamiloviam.com - Authors