தமிழோவியம்
தராசு : காவிரியும் கர்நாடகமும்
- மீனா

வருடா வருடம் வரும் தீபாவளி, பொங்கல், புத்தாண்டைப் போல பல வருடங்களாக தவறாமல் வரும் பிரச்சனைதான் காவிரிப் பிரச்சனை. வருடம் தவறாமல் கர்நாடக அரசு (அது எந்தக் கட்சி அமைக்கும் அரசாக இருந்தாலும் சரி) காவிரி எங்களுக்குத்தான் சொந்தம் - தமிழர்களுக்கு தண்ணீர் தரவே மாட்டோம் என்பதும், பதிலுக்கு இங்குள்ள அரசு (தி.மு.க ஆனாலும் சரி அ.தி.மு.க ஆனாலும் சரி) உடனடியாக உண்ணாவிரதம், பந்த் போன்ற போராட்டங்களில் ஈடுபடுவதும் பார்த்துப் பார்த்து சலித்துப்போன காட்சிகள்.

இந்த வருடக் கணக்கை ஆரம்பிக்கும் நோக்கில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒப்புதல் வழங்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழகம் நிறைவேற்றக்கூடாது என்று கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா முழக்கமிட அதைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டபடி பேசி பிரிவினை வாதத்தை தூண்டி வருகின்றன. வழக்கம்போல தமிழ் திரைப்படங்கள் ஓடும் திரையரங்குகளை அடித்து நொறுக்கியும், தமிழ்நாட்டிலிருந்து செல்லும் பேருந்துகளை எறித்தும் தங்களது வெறியைக் காட்டிவருகிறார்கள் கன்னட அரசியல்வாதிகளும் அவர்களால் தூண்டப்படும் வெறியர்களும்.

பதிலுக்கு தமிழக அரசு சார்பில் பிரச்சனையில் தலையிடுமாறு மத்திய அரசை முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார் - திரையுலகம் சார்பாக அனைத்து நடிகர் - நடிகைகள் - தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோருமாக சேர்ந்து உண்ணாவிரதம் இருந்துள்ளனர். பதிலுக்கு கர்நாடக கலைஞர்களும் அவர்கள் மாநிலத்தில் உண்ணாவிரதம் இருந்துள்ளார்கள்.

யாரை ஏமாற்ற இந்த நாடகம்? கர்நாடக அரசியல்வாதிகள் மே மாதம் நடக்க இருக்கும் தேர்தலை மனதில் வைத்து இப்படிச் செய்கிறார்கள் என்றால் வருடா வருடம் ஏன் இதே காட்சி அரங்கேறுகிறது? ஜெயலலிதா உண்ணாவிரதத்தில் ஆரம்பித்து எத்தனை உண்ணாவிரதங்கள் - எத்தனை பந்த்? ஆனால் பிரச்சனை இம்மியளவிற்குக் கூட தீரவில்லை.. அவர்கள் தண்ணீர் தர மாட்டோம் என்று முரண்டு பிடிப்பதும் - தந்த தண்ணீரை எப்படி பயன்படுத்தவேண்டும் என்று கட்டளையிடுவதும் இன்னமும் தீர்ந்தபாடில்லை.. சரி கர்நாடக அரசியல்வாதிகள்தான் கழிசடைகள்.. நம் தலைவர்கள் எப்படி என்று பார்த்தால் - எங்கள் உயிரைக் கொடுத்தாவது இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று முழங்கும் ஒருவர் கூட உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை. மற்ற எல்லாவிஷயங்களுக்கும் மத்திய அரசை மிரட்டோ மிரட்டென்று மிரட்டி காரியத்தை சாதித்துக்கொள்பவர்கள் காவிரி விஷயத்தில் மத்திய அரசு தங்களுக்குச் சாதகமான முடிவை எடுக்காவிட்டால் மத்திய மந்திரிகள் ராஜினாமா செய்வார்கள் எம்.பிக்கள் ராஜினாமா செய்வார்கள் என்று ஒப்புக்காவது ஒரு அறிக்கைவிட்டார்களா - கிடையாது.. கிடைத்த பதவியை யார் தூக்கி எறிவார்கள்??

மத்திய அளவில் தேசிய கட்சி நடத்தும் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவாவது இந்த விவகாரத்தில் தங்களது கர்நாடகத் தலைவர்களை அடக்க முயல்கிறார்களா என்றால் பதில் கிடையாது. ஆக மொத்தத்தில் அரசியல்வாதிகள் அனைவருமே ஒரே ரகம்தான்.

இரு மாநில விவசாயிகளும் - பொதுமக்களும் அரசியல்வாதிகளின் இந்த இரட்டை வேடத்தைப் புரிந்துகொண்டு தங்களுக்குள்ளேயே பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும். சமூக ஆர்வலர்கள் யாராவது முழுமனதுடன் இதற்கு துணை நின்றால்தான் இப்பிரச்சனைக்கான ஒரு சுமூகமான தீர்வைக் காண முடியும். நல்ல தலைவர்களை நம் நாடு இழந்து பலகாலமாகிறது - நல்ல உள்ளங்களையும் நாம் இழந்துவிட்டோமா - இல்லை இன்னும் யாராவது மிச்சமிருக்கிறார்களா இப்பிரச்சனையைத் தீர்க்க?

Copyright © 2005 Tamiloviam.com - Authors