தமிழோவியம்
திரைவிமர்சனம் : சண்டை
- மீனா

இயக்குனராக இருந்து †ஹீரோவாக மாறியுள்ள சுந்தர்.சியின் 3வது படம் சண்டை. ஒருகாலத்தில் ஜெய்ஷங்கர் நடித்து வெளிவந்த பூவா தலையா படத்தின் கிட்டத்தட்ட ரீமேக் தான் ரஜினியின் மாப்பிள்ளை. பூவா தலையா, மாப்பிள்ளை இரண்டு படங்களின் கதையையும் கலந்து செய்த ரீமேக் படம் தான் சண்டை.

பாங்காக்கில் மகள் ராகிணியுடன் வசிக்கும் நதியா தன் மகளுக்கு கல்யாணம் செய்வதற்காக இந்தியா வருகிறார். மாப்பிள்ளையும் வெளிநாட்டு ஆள்தான். கலெக்டரான தன் கணவர் நெப்போலியனின் சாவுக்கு காரணமான தன் சகோதரன் அலெக்ஸ் முன்னால் தன் மகள் கல்யாணத்தை நடத்தவேண்டும் என்ற எண்ணத்தில்தான் நதியா இந்தியாவிற்கே வருகிறார். வந்த இடத்தில் சில ரவுடிகள் நதியாவையும், அவரது மகளையும் தாக்க முயல்கிறார்கள். இக்கட்டான அந்த நேரத்தில் ஆபத்பாந்தவனாக வந்து தங்களைக் காப்பாற்றும் சுந்தர்.சி யை பார்த்து மலைக்கும் நதியா - தன் அண்ணன் குடும்பம் தான் இத்தனைக்கும் காரணம் என்று நினைத்து அவர்களிடமிருந்து மகளைப் பாதுகாக்க சுந்தர்.சியையே தனது மகளின் பாடிகார்ட் ஆக நியமிக்கிறார்.

ராகினியின் கல்யாணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும் என்று சுந்தர்.சி யும் அவரது நண்பரான விவேக்கும் போடும் பல திட்டங்கள் மண்ணைக் கவ்வினாலும் ஒரு வழியாக கல்யாணத்தை தடுத்து நிறுத்திவிடுகிறார்கள். குறிப்பிட்ட நாளில் மகளின் கல்யாணம் எப்படியும் நடந்தே தீரவேண்டும் என்று நினைக்கும் நதியா சுந்தர்.சி யையே தனது மாப்பிள்ளையாக்குகிறார். கல்யாணம் முடிந்த பிறகுதான் நதியாவிற்கு சுந்தர்.சி தன் அண்ணன் மகன் என்ற உண்மை தெரியவருகிறது.

கலெக்டரான தன் கணவர் நெப்போலியனை ஒரு நிலத்தகறாரில் கொன்றது தன் அண்ணன் தான் என்று உருதியாக நம்பும் நதியா தன் அண்ணன் மகன் தன் மகளின் கணவனானதை சகிக்க முடியாமல் தவிக்கிறார். எப்படியாவது சுந்தர்.சி யைக் கொல்லவேண்டும் என்று நினைக்கும் அவரது முயற்சிகளுக்கு உறுதுணையாக வந்து சேர்கிறார்கள் ஊர் பெரிய மனிதர்களில் ஒருவரான காதல் தண்டபாணியும் அவரது மகன்களும்.

Sandai sundar cசுந்தர்.சி க்கு எதிராக இவர்கள் செய்யும் பல முயற்சிகள் தோல்வியடைகின்றன. ஒரு கட்டத்தில் தன் கணவரைக் கொன்றது தன் அண்ணன் அல்ல என்பதையும் அக்கொலையைச் செய்தவர்களே காதல்தண்டபாணி மற்றும் அவரது மகன்கள் தான் என்பதை தெரிந்து கொள்கிறார். சுந்தர்.சி இக்கும்பலிடமிருந்து எப்படி நதியாவைக் காப்பாற்றுகிறார் என்பதே கிளைமாக்ஸ்.

தனக்கு எது வரும் - வராது என்பதை நன்றாக தெரிந்து வைத்துக்கொண்டு அதற்கேற்ப திறமை காட்டுகிறார் சுந்தர்.சி. ஆஜானுபாகுவாக அவர் அறிமுகமாகும் காட்சியே அசத்தலாக அமைகிறது. காமெடியிலும் சண்டைக் காட்சிகளிலும் அதகளம் செய்யும் சுந்தர்.சி இனி வரும் படங்களில் பாடல் காட்சிகளில் ஆடுவதை மட்டும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். நடிப்பு ஓக்கே.. 

மாமியாராக வந்தாலும் அசத்தலான நடிப்பால் அனைவரையும் பின்னுக்குத் தள்கிறார் நதியா. முதலில் தனது மகளது திருமணத்தை எப்படியாவது குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற தவிப்பை அழகாக காட்டுவது அருமை. ஆனால் சுந்தர்.சி தன் அண்ணன் மகன் என்று தெரிந்த பின்னர் மகளை அவரிடமிருந்து பிரிக்க அவர் செய்யும் வேலைகள் கொஞ்சம் ஓவர்.. அதிலும் கொலை செய்யும் அளவிற்கு போவது அபத்தம்..

விவேக் காமெடி பல நேரங்களில் சிரிப்பை வரவழைத்தாலும் சில நேரங்களில் கடுப்பை வரவழைக்கிறது. குறிப்பாக நாட்டாமையாகவும், மகனாகவும் வரும் காட்சிகள் ரொம்பவே ஓவர்.. ஆனாலும் இப்படத்தின் பெரிய பிளஸ்களில் ஒன்று விவேக்குடன் சேர்ந்துகொண்டு சுந்தர்.சி அடிக்கும் லூட்டிகள். அதிலும் குறிப்பாக மாப்பிள்ளையை மூன்று முடிச்சு ஸ்டைலில் கொலை செய்ய நடு ஆற்றுக்கு படகில் கூட்டிப் போவதும் கடைசியில் இவர்கள் இருவரும் தண்ணீரில் விழுந்து தத்தளிக்க - மாப்பிள்ளை இவர்களைக் காப்பாற்றுவதும் சூப்பரோ சூப்பர்.  

கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிற்கும் பாத்திரம் நெப்போலியனுக்கு. இவர் தனது பண்பட்ட நடிப்பால் மனதில் நிற்கிறார் என்றால் கவர்சியால் நிற்கிறார் நமீதா. கரகாட்டக்காரியாக வந்து அவர் ஆடும் ஆட்டம் அப்ப்பா..

கதாநாயகியாக ராகினி. பொம்மைப் போல வந்து போகிறார் என்பதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.. காதல் தண்டபாணி, ராஜ்கபூர் போன்றவர்களின் வில்லத்தனத்தில் பழைய பார்முலாவத்தான் பார்க்க முடிகிறதே தவிர புதுசாக - பெரிசாக ஒன்றும் இல்லை.

தினாவின் இசை ஓக்கே. வாடி என் கப்பக்கிழங்கே பாடலை சுந்தர்.சி பாடியிருப்பது - ஹ¤ம் இசையமைப்பாளர் மற்றும் சுந்தர்.சி யின் தைரியத்தை என்னவென்று சொல்ல.. மொத்தத்தில் இன்னொரு ஆக்ஷன்  மசாலாவை இயக்கி அனைவரிடமும் பாராட்டு பெற்றிருக்கிறார் தயாரிப்பாளர் - இயக்குனர் ஷக்தி சிதம்பரம்.


 

Copyright © 2005 Tamiloviam.com - Authors