தமிழோவியம்
கவிதை : வாழிய செந்தமிழ் வாழியவே !
- கோவி.கண்ணன்

 

நிதம் தூங்கும் நீ, இன்று
நிச்சயம் விழித்துக் கொண்டு இருப்பாய் !

ஞாலத்தின் மூல மொழியெது யென்பதன்
ஞானம் உமக்கு கிட்டியதா ? கிட்டவில்லை யென்றால்,
நூலகத்தில் தேவநேய பாவாணரைத் தேடிப் படி !
ஆணி அறைந்துச் சொல்கிறார்,
ஞாலத்தின் மூலம் தமிழேயென்றும்,
நானிலத்தின் மூத்தக்குடி தமிழரே யென்றும் !

சிந்து நதி மேலை நாகரீகத்தின்,
சொந்தக்காரர்கள் யாரென்பதைப் பற்றிச்
சிந்தை தெளியுங்கள், அவை நம்
முன்னோர்களுடையவை என்று முழக்கமிட
அகழ்வாராய்ச்சிக் குறிப்புகள் தம்மை
தாயர்படுத்திக் கொண்டிருக்கிறது !
கொண்டாடுவதற்கு நாமும் நம்மை
தயார் படுத்திக்கொள்வோமே !

நமசிவாய வெனும்
ஐந்தெழுத்து மந்திரத்தின்
ஆதாரம் அறிந்திருக்கிறோமா ?
தென்னாடுடைய சிவனே போற்றியென்று
பைந்தமிழ் தோற்றுவித்த மந்திரமேயது !
நம் மூத்தோர்கள் ஆக்கிவைத்த
ஆகம மந்திரமே, பின்னாளில் சிவாயநம வென
தந்திர வடமொழியால் திரிந்துப்போனது,
நாம் மறந்து போனோம் !

மூன்றில் இரண்டுபங்கு பைந்தமிழ்க் கலந்த
தேவபாசை யெதுவென்பது
உமக்கு தெரியுமா ?
நம் நேச மொழியை, நா கூசாமல்
நீசமொழி யென்றும்,
தெய்வத்திற்கே புரியாத மொழி யென்றும்
பொய் கூறி தாயைப் பழித்து தானே,
மெய் யிழந்த மோச வடமொழி தானது !

இனி யென்றும் தூங்காதே,
பலமொழிகள் பேசுவோம் ஆங்கே,
தமிழ்ப் பேசும் போது
தமிழ் மட்டுமே பேசுவோம்,
அப்பொழுது நீக்கப்படும் நம்
தமிழ்தாய் மீதுள்ள தூசு !
தவிர்த்தால் தமிழ்குலத்தில்,
நாமே அதன் மாசு !

வாழிய செந்தமிழ் வாழியவே !

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors