தமிழோவியம்
தராசு : வங்கி முறைகேடுகள்
- மீனா

சிவகங்கை கூட்டுறவு வங்கி சீர்குலைவுக்கு ஆளும் அ.தி.மு.க அரசு தான் காரணம் என்று மத்திய நிதிஅமைச்சர் குற்றம்  சாட்ட, அதை மறுத்து காட்டமாக நடந்த தவறுகளுக்கெல்லாம் முந்தைய தி.மு.க அரசே காரணம் என்று அறிக்கை மேல் அறிக்கையாக தமிழக முதல்வர் விட்டுக்கொண்டிருக்கிறார். பிரச்சனை என்னவென்றால் - சம்மந்தப்பட்ட சிவகங்கை கூட்டுறவு வங்கியில் நடந்த சில முறைகேடுகளால் வங்கிக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டதும், அதை சரிசெய்யும் விதமாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கூட்டாக இணைந்து வங்கியின் நடவடிக்கைகளில் சில மாறுதல்களைச் செய்ததும் தான்.

இந்தியாவைப் பொருத்தவரை வங்கி முறைகேடுகளும் வாராக்கடன்களினால் வங்கிகளின் செய்ல்பாடுகள் பெருமளவில் முடக்கப்படுவதும் சர்வ சகஜமான விஷயங்களில் ஒன்றாகிவிட்டது. இதற்கான அடிப்படைக் காரணங்களில் மிக முக்கியமானவை இவைகள்தான் : சாதாரண மக்கள் வங்கியிலிருந்து 1 ரூபாய் கடனாகப் பெறுவது என்றாலும் அது மிகப்பெரிய விஷயம். தகுந்த ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டால்தான் அவர்களது மனு பரிசீலனைக்கே செல்லும். அப்படிப்பட்டவர்கள் வாங்கும் கடனைக் கராறாக வசூலிப்பதில் சம்மந்தப்பட்ட வங்கி அதிகாரிகளும் போட்டிபோட்டுக்கொண்டு பொறுப்பேற்பார்கள். வசூலும் செய்துவிடுவார்கள்.

ஆனால் தகுந்த ஆதாரங்கள் ஏதுமின்றி, அரசியல்வாதிகளை மட்டும் கையில் போட்டுக்கொண்டு கோடிக்கணக்கில் கடனை வாங்கி ஸ்வாகா செய்யும் பெரிய மனிதர்களை மட்டும் நம் வங்கி அதிகாரிகள் ஏனோ கண்டுகொள்வதே இல்லை. இப்படிப்பட்டவர்கள் கடன் கேட்டு விண்ணப்பிக்கும்போதே அந்த விண்ணப்பத்தை நிறைவேற்ற உத்திரவிட்டு அரசியல்வாதிகளின் உத்திரவு கடிதங்களும், சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து நோட்டுப் பெட்டிகளும் வங்கி அதிகாரிகளைச் சென்றடைவதுதான் காரணம்.

சாதாரண மக்கள் வாங்கிய சிறிய அளவிலான பணத்தை திரும்பச் செலுத்த ஒரு நாள் தவறினாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வங்கி அதிகாரிகள், பணமுதலைகளான அதிகார வர்கத்தினர் கோடிக்கணக்கில் வாங்கிய பணத்தை திரும்பச் செலுத்தத் தவறும் போது அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கைகளையும் எடுக்காமல் கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருப்பதன் விளைவு  - வங்கிகளே திவாலாகும் நிலை. மக்கள் வரியாகச் செலுத்தும் பணத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதுதான் நம் நாட்டின் நிதித்துறை. அதன் ஒரு கிளை வங்கிகள். ஆக மக்கள் பணம் ஒரு சில அதிகார வர்கத்தினர் மற்றும் அரசியல்வாதிகளின் தூண்டுதலால் தவறான நபர்களுக்கு கடனாக வழங்கப்பட்டு வீணடிக்கப்படுகிறது. சில தனிநபர்கள் வங்கிகளையே ஆட்டிப்படைக்கும் அதிகாரம் பெற்றவர்களாகிறார்கள். ஆனால் கடைசியில் நஷ்டப்பட்டு நிற்பது என்னவோ மக்கள்தான்.

வங்கிகளில் சில தனிமனிதர்களுக்கான நற்சான்றிதழ் வழங்கி தற்போது பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் எத்தனையோ அரசியல் தலைவர்களைப் பார்த்தும் நம் அரசியல்வாதிகள் இன்னமும் பல பணமுதலைகளுக்கு நற்சான்றிதழ் வழங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த போலிச் சான்றிதழை நம்பி இதைக் கொண்டுவரும் அயோக்கியர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை வாரிக்கொடுத்துவிட்டு வாயைப் பொத்திக்கொண்டிருக்க நம் வங்கி அதிகாரிகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் இருக்கும் வரையில் நம் நாட்டில் பல வங்கிகள் திவாலாகிக்கொண்டுதான் இருக்கும். சி.பி.ஐ.யும் வழக்குகளைப் போட்டுத் தள்ளும்.. நாமும் வங்கியில் பணத்தைப் போட்டுவிட்டு புலம்பிக்கொண்டுதான் இருப்போம்... இத்தனைக்கும் நடுவே வங்கிகளின் செய்ல்பாடுகள் குறித்து நிதியமைச்சர், முதல்வர் போன்ற அரசியல்வாதிகள் போடும் கூச்சல்களும் வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து காட்டும் அக்கறையும் போலித்தனமானவையே தவிர வேறு ஒன்றுமில்லை....

Copyright © 2005 Tamiloviam.com - Authors