தமிழோவியம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : ஆற்றல் தரும் ஆதிக்கம்
- எஸ்.கே

இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்தபோது மற்ற அமைச்சர்களோ, கட்சிப் பிரமுகர்களோ, அதிகாரிகளோ, யாரும் அவர் மனதில் என்ன இருக்கிறது என்பதை எளிதில் ஊகிக்க முடியாதபடி "மூடிய கையாக" இருந்தார் என்று கூறுவார்கள். மற்றவர்களின் கருத்துகளைக் கேட்டு அறிவாரேயன்றி தன் உள்ளத்தை ஒருபோதும் பிறர் அறிய வெளிக்காண்பித்ததே  கிடையாது. காதும் கருத்துந்தான் வேலை செய்யுமேயன்றி வாய் அல்ல. அதுபோல் அவருடைய தோற்றக்குறிகள் மூலமாகக்கூட எதுவும் அறியமுடியாது.  தக்க தருணம் வரும்போது, கடைசியில்தான் தன் முடிவை அறிவிப்பார். அதனால் அவரிடம் எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கை உணர்வு தொடர்ந்து இருந்தது. பிறர்மேல்  அவர் கொண்ட ஆளுமை, கடைசி வரையில் குறையாமல் இருந்தது. She kept people guessing as to what she was up to, all the time.

கிரிக்கெட் மைதானத்தில் பந்து வீச்சாளர் தன் கையில் பந்தை எப்படிப் பிடித்துக் கொண்டு, எந்த முறையில் விடுவிக்கிறார் என்பதை பேட்ஸ்மேன் மிக உன்னிப்பாகக் கவனிப்பார். அதன்மூலம் பந்து எத்தகையது என்பதைக் கணித்து, அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற தயார் நிலையை முடிவு செய்துகொள்வார். ஆனால் சில பந்துவீச்சார்கள் அவ்வாறு பந்தை முழுவதும்  படித்துவிடாதபடி கையை மூடியபடி வீசுவார்கள். சிலர் கடைசி நிமிடத்தில்தான் சரியான கைக்கு பந்தை மாற்றிக் கொண்டு, பின் வீசுவார்கள். கூக்ளி, Reverse swing போன்றவை இதுபோல் மட்டையாளர்களை ஏமாற்றும் உத்திகள். இதுபோல் நம் எண்ணங்களையும் செயல் திட்டங்களையும் பிறர் எளிதில் கணித்துவிட முடியாமல் காக்க வேண்டும். எல்லா சீட்டுக்களையும் முகம் தெரிய விரித்து வைத்துவிட்டு விளையாட முடியுமா? நம்மிடம் எவ்வளவு Ace-கள் இருக்கின்றன என்பதை எதிராளி அறியாமல் காப்பதுதான் புத்திசாலித்தனம். சென்ற இதழில் நான் குறிப்பிட்டிருந்தபடி, நாம் முழுவதும் படிக்கப்பட்ட புத்தகமாக இல்லாமல் கொஞ்சம் புதிராக (Enigma) இருந்தால்தான் பிறருக்கு நம் மேல் ஒரு ஆர்வமும் மதிப்பும் தொடர்ந்து இருக்கும் (sustained interest and curiosity).

நீங்கள் வங்கி போன்ற ஒரு பொது சேவை அலுவலகத்துக்கு சென்று மேலாளரை சந்திக்கிறீர்கள். அவர் ஏதோ வேலையில் பிஸியாக இருக்கிறார். பிறகு உங்களுக்கு அடுத்தபடி வந்தவர்களைக் கவனிக்கிறார். ஆனால் உங்கள் பக்கம் அவர் கண்கள் நோக்கவேயில்லை. என்ன செய்வீர்கள்? அவர் எப்போது பெரிய மனது வைத்து உங்கள் பக்கம் திரும்புகிறாரோ அதுவரை பொறுத்துக் கொண்டிருப்பீர்களா, அல்லது அவர் செய்வது தவறு, உங்களை உடனே கவனிக்க வேண்டும் என்பதை உணர்த்தி, உங்கள் ஆளுமையை வெளிப்படுத்துவீர்களா? நீங்கள் சும்மா உட்கார்ந்திருந்தால் உங்களை மிதியடியாகத்தான்  மதிப்பார்கள். அதனால் உங்கள் தோற்றத்தை முன்னிலைப் படுத்தல் அவசியம்.

உங்கள் பேச்சு, செயல் எல்லாமே பிறர் கவனத்தைத் தூண்டும் வண்ணம் அமைய வேண்டும். Make yourself interesting to others. இதற்கு சுலபமான வழி நகைச்சுவை உணர்வுதான். ஆனால் அது இயல்பானதாக, புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். மலிவாகவும், தரக் குறைவானதாகவும் இருக்கக் கூடாது. நகைச்சுவையாக பேசக்கூடியவர்களுக்கு சமுதாயத்தில் விசிறிகள் அதிகம். நகைச்சுவை உணர்வுள்ள ஆண்கள்தான் பெண்களை அதிகம் கவர்கின்றனர் என்கிறார்கள்.

உங்கள் கீழ் பணியாற்றுபவர்களிடம் உரையாடும்போது chatty-ஆக இடம் கொடுத்து பேசாதீர்கள். எந்தவித மேலாதிக்க உணர்வுமின்றி சகஜமாக உரையாடுபவர் நீங்கள் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் நீங்கள் தோற்றுவித்தாலும், இங்கு யார் சொல் கடைசி, யார் ஆளுமை செலுத்துபவர் என்கிற செய்தி அடித்தளத்தில் ஐயத்திற்கு இடமின்றி ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஒருமுறை ஒருவர் சரியான அறிவுரை கொடுத்தார் என்ற காரணத்திற்காக  அந்த நபர் என்ன சொன்னாலும் அப்படியே முழுதும் ஆராயாமல் கேட்பது என்ற வழக்கத்தைக் கைக்கொள்ளாதீர்கள். நிலையாக இன்னார் அறிவுரையைத்தான் நீங்கள் கேட்டு அதன்படிதான் எப்போதும் செயல்புரிவீர்கள் என்பதுபோன்ற செய்தி பரவாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது மற்றவர்களுக்கு தவறான புரிதலுக்கு இடமளித்து, அந்த நபர்கள் உங்களைப் பற்றி ஓர் எதிர்மறை இமேஜை பரப்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. நீங்கள் ஒரு முக்கிய பதவியில் இருந்தால், அல்லது ஒரு நிறுவனத்தை நிர்வகிப்பவராக இருந்தால், தகுதி பார்த்து அறிவுரை கேளுங்கள், அருகாமை கொடுங்கள். சம்பந்தமில்லாத வெளிக்காரணங்கள் அடிப்படையில் உங்கள் முடிவுகள் அமையுமானால், அத்தகைய நபர்கள் மனம் மாறி உங்களுக்குக் கெடுதல் செய்ய வாய்ப்பிருக்கிறது. உறவினர் என்றோ, வேண்டியவர் சிபாரிசு செய்தார் என்றோ,ஒருவரை அருகில் இருத்திக் கொண்டீர்களானால், அவர் உங்கள் அருகாமையை தவறான வகையில் பயன்படுத்த தன் சுயநலத்தால் உந்தப் படுவார்கள். இது போன்ற காரணங்களினால் பல பேரசுகள் வீழ்ந்த வரலாறுகளை நாம் அறிவோம்.

Reputation is the cornerstone of power என்பார்கள். உங்கள் புகழ், நற்பெயர், கௌரவம், கீர்த்தி முதலியவற்றை நீங்கள்தான் பேனிக்காக்க வேண்டும். ஏனென்றால் இவை உங்களுக்கு ஒரு நாளில் கிட்டுவதல்ல. இதற்காக நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் சேர்த்த நற்பெயரைத் தொலைப்பது மிகச் சுலபம். ஒரே ஒரு தவறான சொல், தவறான இடத்தில் சொல்லப் பட்டால், அது தீபோல் பரவி உங்கள் புகழை "பரமபத சோபன" படத்திலுள்ள பெரிய பாம்புபோல் பாதாளத்தில் தள்ளிவிடும். மலைச் சிகரங்களில் அதிக இடமிருக்காது. கொஞ்சம் சருக்கினாலும் சீரழிவுதான். அதுபோல்தான் வாழ்க்கையின் மேல் நிலையும்.

உங்களைச் சுற்றியுள்ள கூட்டத்தைவிட நீங்கள் எதோ ஒருவகையில் மேம்பட்டவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்துங்கள். மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும்  காந்த சக்தி ஏதோ ஒன்று உங்களிடம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியவண்ணம் இருக்க வேண்டும். ஒளி உங்கள் திசையில்தான் பாய வேண்டும். இதற்கு முதல் படி தன்னம்பிக்கை கொள்ளல். ஒரு சொல் சொன்னாலும் தீர்மானமாக வெளிப்பட வேண்டும். ஏனையோர் அதைக் கேட்டே ஆகவேண்டும்!

இத்தகைய ஆளுமையையும், பிறர்மேல் செலுத்த வேண்டிய "பவரை"யும் பெறுவதற்கு உங்கள் கைவசம் உள்ள எல்லாவிதக் கருவிகளையும், சாதனங்களையும் பயன்படுத்தலாம். இத்தகைய கருவிகளில் மொழியும் ஒன்று. இதனை பலர் சாதகமாகக் கையாண்டதைப் பார்த்திருக்கிறேன். உதாரணமாக, உங்கள் காரோ, டிவியோ பழுதாகியுள்ளது; ஆனால் சேவையாளர் அசட்டையாக உள்ளார். அந்த நிலையில் நீங்கள் உங்கள் குரலை லேசாக உயர்த்தி "இந்தவித சாக்குகள் என்னிடம் செல்லாது" என்பதை தெளிவாக உணர்த்தவேண்டும். அந்த சூழ்நிலையில், ஒப்பந்தப்படி அமைந்த கடமைகளிலிருந்து தப்புவதற்குள்ள முயற்சியில் இறங்குவது பொதுவான மனித இயற்கை. ஆனால் அதற்கு நீங்கள் சிறிதும் இடம் கொடுக்கக் கூடாது. உங்களுக்கு என்ன வேண்டும், அதன் காரணங்கள் என்ன என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியபடி  இருக்க வேண்டும். அவர்கள் விரிக்கும் வலையில் விழுந்துவிடக் கூடாது. எந்தவித சால்ஜாப்புக்களுக்கும் செவிசாய்க்கக் கூடாது. இதனை Broken record method என்பார்கள். உங்கள் தேவை என்ன, உங்களுக்கு அது நியாயமான முறையின்படி நிச்சயமாகக் கிட்டவேண்டும் என்பதில் தெளிவான கருத்துக் கொண்டு அத்தகைய நிலைப்பாட்டில் எவ்வித குழப்பமுமில்லாமல் வெளிக்காண்பித்தீர்களானால், அவை உங்களுக்குக் கிட்டியே தீரும். இதுதான் இயற்கையின் நியதி. If you insist on getting only the best, you most often get it என்பது ஒரு பொன்மொழி.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆங்கிலத்தில் உரையாட முனைவார்கள். ஆனால் பலருக்கு சரளமாகப் பேச வராது. ஆங்கிலமும் தமிழும் கலந்து "மணிப்பிரவாள"நடையில் பேசுவார்கள். அத்தகையவர்களிடம் நீங்கள் கொஞ்சம் "ஸ்டைல்" கலந்த ஆங்கிலத்தில் தொடர்ந்து ஆளுமையுடன் உரையாடுங்கள். அவ்வளவுதான், அந்த நபரிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு அவர்களின் நிலை கொஞ்சம் தொய்வு கண்டுவிடும். இதுதான் சரியான தருணம் உங்கள் பவரை செலுத்துவதற்கு! இது ஆங்கிலம் மட்டுமின்றி ஹிந்தி, தமிழ் போன்ற எல்லா மொழியையும் சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்தலாம். ஒரு பணிமனையில் நடைபெற்ற விழாவில் பேச்சாளர்கள் அனைவரும் ஆங்கிலத்திலேயே தங்கள் உரையைப் படித்தார்கள்.  அதனால் பார்வையாளர்கள் பங்களிப்பே இல்லாமலிருந்தது. கடைசியில் என் வாய்ப்பு வந்தபோது தமிழில் பேசத் தொடங்கினேன். உடனே பெருத்த கரகோஷம் எழுந்தது. நான் ஒன்றும் கருத்துச் செறிந்த சொற்பொழிவு எதுவும் ஆற்றவில்லை. ஆனால் அந்தத் தருணத்தில் தமிழ் தான் அங்கு குழுமியிருந்தவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அன்றிலிருந்து பலர் அதுபோன்ற விழாக்களில் என்னைப் பேச அழைக்க ஆரம்பித்து விட்டார்கள் (குறைந்த பட்சம் நன்றி நவிலலாவது!). இதுபோல் வட இந்தியாவுக்குச்  சென்றால் ஹிந்தி தெரிந்தவர்கள் ஆளுமை ஓங்கும்!

உங்கள்மேல் ஒளிக்கற்றைகள் விழுந்த வண்ணம் இருக்க வேண்டும் என்று கூறினேன். அதற்காக உங்கள் மேல் சலிப்பு வரும் வண்ணம் over exposure கூடாது. அதே நேரத்தில் வெற்றி இலக்கை எட்டும்போது உங்களின் பங்கு, அதன் பயனாகக் கிட்டும் புகழ், இவை எள்ளளவும் குறைய நீங்கள் இடம் கொடுக்கக் கூடாது.

வாழ்க்கையில் தோல்விகளையே சந்தித்தவர்கள், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள், தீவிரமான கருத்துக்களுக்கு அடிமையானவர்கள், இங்கிதம் தெரியாதவர்கள் , அதிர்ஷ்டமற்றவர்கள், மனமகிழ்ச்சியற்ற போங்குகள்  போன்றவர்களை கிட்டச் சேர்க்காதீர்கள். அது உங்கள் பெருமைக்கு ஆபத்து. நீங்கள் அரும்பாடுபட்டு சேர்த்த புகழை அரை நொடியில் தங்கள் ஒவ்வாத நடத்தை மூலம் காலி செய்து விடுவார்கள். தவிர, உங்கள் மனத்திலும் எதிர்மறை உணர்வுகளைப் புகுத்தி, உங்கள் தன்னம்பிக்கையை சிதறடித்து விடுவார்கள்.
 
நீங்களே எல்லாத்துறைகளிலும் வல்லுனராக அமைய முடியாது. உங்களைச் சுற்றியிருக்கும் பல்துறை நிபுணர்களின் சேவையை நீங்கள் முழுதும் பெறவேண்டும். உங்களுக்கு சேவை செய்வதை அவர்கள் தங்களுக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருத வேண்டும். அது போன்ற எண்ண ஓட்டத்தை அவர்கள் மனதில் புகுத்த வேண்டும். வேலை முடிந்தபின் இன்னார்தான் செய்தார்கள் என்ற பெருமையை அவர்களுக்குக் கொடுத்தாலும், அவர்களை தேர்வு செய்து, ஒத்துழைப்பளித்து, மேலாண்மை புரிந்ததற்கான புகழ் உங்களிடம் கட்டாயம் சேரும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். கொஞ்சம் அசந்தால், காடுகளில் வேறு விலங்குகள் வேட்டையாடிப் பெற்றிருக்கும் இரைகளை, கழுகுகளும், ஹையீனாக்களும் திருடிச் செல்வது போல், அப்படியே சுருட்டிவிடுவார்கள்!

உங்களைச் சூழ்ந்த இவ்வுலகம் "எங்கே அவர்" என்று உங்களை எதிர் நோக்கியே இருக்க வேண்டும். வெற்றித் தாயின் அருள் என்னேரமும் உங்களிடம் குறைவின்றி அமைதல் வேண்டும்!

Copyright © 2005 Tamiloviam.com - Authors