தமிழோவியம்
முத்தொள்ளாயிரம் : அவள், பாண்டியனின் காதலி !
- என். சொக்கன்

பாடல் 99

பெருநகரக் கதவுகளில், சிறியதாக ஒரு துளை வைத்து, அதில் ஒரு கண்ணாடி லென்சும் பொருத்தியிருப்பார்கள். அதன்வழியே பார்த்தால், வெளியே நிற்பவர், யார், எவர் என்று தெரிந்துகொள்ளலாம் - சற்றே மிகைப்படுத்திய தோற்றம்போல் தெரியும், அவ்வளவுதான் !

இதன் முக்கியமான பயன், யாரைத் தவிர்க்கவேண்டும் என்று தெரிந்துகொண்டு, கதவைத் திறக்காமலே இருந்துவிடுவதுதான் - கணீரென்று அழைப்பு மணிச் சத்தம் கேட்கிறதா ? சட்டென்று கதவைத் திறந்துவிடக்கூடாது - லென்ஸ்வழியே ஊன்றிப் பார்க்கவேண்டும் - வந்திருப்பவர் யார் என்று தெரிந்துகொள்ளவேண்டும் - பிறகு, இவரை உள்ளே அனுமதிக்கதான் வேண்டுமா என்று சிந்தித்துப்பார்க்கவேண்டும் - எப்போது வந்தாலும் கையில் அரை மூட்டை மாம்பழத்தோடு வருகிற கிராமத்து மாமாவா ? ஆஹா, கதவை அகலத் திற ! எப்போதும் வம்புப் பேச்சுக்கு அலையும், அரை கரண்டி காபிப் பொடி கடன் கேட்கப்போகும் பங்கஜ மாமியா ? வந்த சுவடு தெரியாமல் பின்னே நகர்ந்து மறைந்துவிடு - அழைப்பு மணியை அழுத்தி, அழுத்தி, விரல் தேயட்டும் !

- இப்படியாக, தவிர்க்கவேண்டியவர்களை அடையாளம் கண்டுகொள்வதற்காகப் பொருத்தப்படும் இந்தக் கதவுத் துளையை, இங்கே ஒரு பெண், பாண்டியனின் காதலி, வேறுவிதமாய்ப் பயன்படுத்துகிறாள் !

பாண்டியன் காலத்திலும் கதவில் லென்ஸ் உண்டா என்று யோசிக்கவேண்டாம் - இது லென்ஸ் துளை இல்லை, சாவித் துளை !

அரசன் பாண்டியன் வீதி உலா வரும்போது, அவனைப் பார்த்து, மனதைப் பறிகொடுக்கும் பெண்கள் ஏராளம் ! ஆகவே, அவன் உலாக் கிளம்புகிறான் என்று கேள்விப்பட்டதுமே, ஊரில் இருக்கிற வயதுப் பெண்களின் அம்மாக்களுக்கெல்லாம் பெரும் பதட்டமாகிவிடும். தங்களின் மகள்களை, பாண்டியனின்மீது காதலில் விழுந்துவிடாமல் காப்பாற்றியாகவேண்டும் என்று அவசரமாய்க் கிளம்புகிறார்கள், பெண்களை வீட்டினுள் இழுத்துப் பூட்டிவிடுகிறார்கள்.

தடுக்கத் தடுக்க, ஒரு விஷயத்தின்மீது ஆர்வம் அதிகமாகும் என்று சொல்வார்கள் - அதுபோல, வீட்டினுள் சிறைவைக்கப்பட்ட இந்தப் பெண்ணின் பருவ மனது, பாண்டியனை எப்படியாவது பார்த்தாகவேண்டும் என்று தீர்மானம் செய்துகொள்கிறது.

நெடுநேரம் யோசித்தபின், அதற்கும் ஒரு வழி கிடைக்கிறது - அம்மா இல்லாதபோது, கதவின் சாவித் துளை வழியே, பாண்டியனைக் கண்ணாரப் பார்த்து மகிழ்கிறாள் அவள் !

'ஆஹா, நான் பாண்டியனின் அழகைப் பார்த்து ரசிப்பதற்காகவே, கதவில் இப்படி வசதியாய்த் துளை செய்து வைத்திருக்கிற தச்சருக்கு நன்றி !', என்று உரக்கக் கூவுகிறாள் அவள், 'இந்தக் கதவைச் செய்த தச்சர் யாரோ, எவரோ, தெரியாது ! ஆனால், அவர் எனக்குச் செய்திருக்கும் இந்த உதவிக்கு, நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் ?'

நகைச்சுவை ததும்பும் நல்ல பாடல்தான் - ஆனால், கதவின் கீழ்ப்பகுதியிலிருக்கிற சாவித்துளையின்வழியே எட்டிப் பார்ப்பதற்காக, தினசரி இப்படிக் குனிந்தால், அந்தப் பெண்ணுக்கு முதுகு பிடித்துக்கொள்ளாதோ என்று நினைத்தால்தான் கவலையாய் இருக்கிறது !


காப்புஅடங்குஎன்று அன்னை கடிமனை இற்செறித்து
யாப்புஅடங்க ஓடி அடைத்தபின் மாக்கடுங்கோன்
நன்னலம் காணக் கதவந்துளை தொட்டார்க்கு
என்னைகொல் கைம்மாறு இனி ?

(காப்பு - காவல்
கடிமனை - காவல் நிறைந்த வீடு
இற்செறித்து - வீட்டினுள் அடைத்துவைத்தல்
யாப்பு - கட்டு
தொட்டார் - தோண்டினார் / தோண்டியவர்)பாடல் 100


அவள், பாண்டியனின் காதலி !

'காதலி' என்று நாம் அவளை அங்கீகரித்துவிட்டோம் - ஆனால், பாண்டியன் இன்னும் அவளைப் பார்க்கக்கூட இல்லை - அன்றாடம் அவன் வீதி உலா வரும்போது, அவனை ஏக்கமாய்ப் பார்த்து, காதல் வயப்பட்ட ஏராளமான பெண்களில் அவளும் ஒருத்தி. கொஞ்சம் பச்சையாய்ச் சொல்வதானால், 'ஒரு தலைக்' காதலி !

மேற்சொன்னதுபோல், அந்த ஒரு தலைக் காதலி, பாண்டியனை தினந்தோறும் பார்த்து மகிழ்கிறாள் - இதை கவனித்த அவளுடைய அம்மா, 'ஐயோ, இந்தக் காதல் ஆபத்தாச்சே', என்று பதறிப்போய், மகளை வீட்டினுள் அடைத்துப் பூட்டிவிடுகிறாள்.

இந்தப் பெண் தவிக்கிறாள், அழுது புரள்கிறாள், 'அம்மா, நீ என்னை வீட்டுக்குள் அடைத்துக்கொள், எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை, ஆனால், தயவுசெய்து, என் மனம் கவர்ந்த பாண்டியன் வீதி உலா வரும்போதுமட்டும், அவனைக் கண்ணாரப் பார்ப்பதற்காக என்னை வெளியே அனுமதித்துவிடு !', என்று கெஞ்சுகிறாள், 'அவனைப் பார்க்காவிட்டால் நான் செத்துப்போய்விடுவேன் !', என்று மிரட்டுகிறாள்.

ஆனால், கண்டிப்பான அவளுடைய அம்மா, இந்த பயமுறுத்தலுக்கும், கெஞ்சலுக்கும் இரங்கவில்லை, பூட்டிய கதவைத் திறக்க மறுத்துவிடுகிறாள்.

செய்வதறியாத சோகத்துடன் தவித்திருக்கிறாள் அந்தப் பெண் - பாண்டியன் உலா வரும் நேரம் நெருங்குகிறது. அவனைப் பார்க்கமுடியாமல்போய்விடுமோ என்று நினைக்கையில், அவளுடைய உடம்பெல்லாம் நடுங்குகிறது.

அப்போதுதான், அவளுக்கு ஒரு அருமையான யோசனை தோன்றுகிறது - கதவு பூட்டியிருந்தால் என்ன ? ஜன்னல் இருக்கிறதே, அதன்வழியே பாண்டியனைப் பார்த்து ரசிக்கலாமே !

ஆனால், அதிலும் ஒரு பிரச்சனை - சாலையில் பாண்டியன் வருவது, இங்கிருந்து பார்த்தால் தெரியுமோ, தெரியாதோ ... அவளுக்குத் தெரியவில்லை.

ஆகவே, அதற்கும் ஒரு வழி கண்டுபிடிக்கிறாள் அவள் - வீதி உலாவின்போது பாண்டியன் பவனி வரும் பெண் யானையை, தன்னுடைய பாடலால் அழைத்து, அதற்கு ஒரு கோரிக்கை விடுக்கிறாள்.

'உடுக்கைபோன்ற பாதங்களை உடைய பெண் யானையே ! கேடயத்தைப்போன்ற காதுகளையும், தொங்குகின்ற தும்பிக்கையும் உடையவளே !'

(சிரிக்காதீர்கள் ! ஒரு யானையை வேறு எப்படிப் புகழ்ந்து பாடமுடியும் ? என்னதான் யானை என்றாலும், அதுவும் ஒரு பெண்தானே ? அதன் அழகைக் கொஞ்சம் புகழ்ந்து உச்சிகுளிரச் செய்தால்தானே நம்முடைய வேலை ஒழுங்காய் நடக்கும் ? அந்த மனோதத்துவம், பாண்டியனின் காதலிக்குத் தெரிந்திருக்கிறது !)

அவளுடைய புகழ்ச்சி வர்ணனைகளைக் கேட்ட யானை, மெல்லமாய்த் தலையசைத்தபடி, 'சரி, சரி, என்ன விஷயம், சீக்கிரம் சொல் !', என்கிறது.

'பெரிதாய் ஒன்றுமில்லை, உன்னால் ஒரு உதவி ஆகவேண்டியிருக்கிறது - கெஞ்சிக் கேட்கிறேன்', என்கிறாள் அவள்.

'என்ன உதவி ?'

'மலர்ந்து மணம் வீசும் பூக்களைத் தொடுத்து மாலையாய் அணிந்தவன், சிவந்த என் காதலன், பாண்டியன் ! நீதான் தினந்தோறும் அவனைச் சுமந்துகொண்டு வீதி உலா வருகிறாய் ! இன்றைக்கு அப்படி உலா வரும்போது, பாதையின் மையத்தில் நடக்காமல், எங்கள் வீட்டு ஜன்னலை ஒட்டியதுபோல் நடந்து வருவாயா ?', என்று கெஞ்சல் தொனியில் வேண்டுகிறாள் அவள், 'நீமட்டும் இந்த உதவியைச் செய்தாயானால், நான் எந்தச் சிரமமும் இல்லாமல், இங்கிருந்தபடியே என்னுடைய காதலனைக் கண்ணாரப் பார்த்து மகிழ்வேன் !'


துடிஅடித் தோல்செவித் தூங்குகை நால்வாய்ப்
பிடியே,யான் நின்னை இரப்பல் கடிகமழ்தார்
சேலேக வண்ணனொடு சேரி புகுதலும்எம்
சாலேகம் சார நட.

(துடி- உடுக்கை
அடி - பாதம்
தோல் - கேடயம்
தூங்கு கை - தொங்கும் துதிக்கை
நால்வாய் - யானை
பிடி - பெண் யானை
இரப்பல் - கெஞ்சுவேன்
கடி கமழ் தார் - அதிகமாய் மணம் வீசும் மாலை
சேலேக வண்ணன் - சிவந்த நிறம் கொண்டவன்
சாலேகம் - ஜன்னல்
சார - பக்கமாய் / ஒட்டியதுபோல்)

Copyright © 2005 Tamiloviam.com - Authors