தமிழோவியம்
உள்ளங்கையில் உலகம் : அதிர்வெண் பகிர்வு
- எழில்

ஒரு செல்பேசிக்கும் ,அச்செல்பேசி இணைக்கப்பட்டிருக்கும் தள நிலையத்திற்குமிடையே எவ்வாறு பரிவர்த்தனை நிகழ்கிறது? தள நிலையத்திற்கும் செல்பேசிக்கும் எப்போதும் தொடர்பு இருக்குமா? தள நிலையம் ஒலிபரப்பும் அலைகளை எப்படி செல்பேசி பெறுகிறது? செல்பேசி அனுப்பும் தகவல்கள் எவ்வாறு தள நிலையத்திற்குப் போய்ச் சேருகின்றன? ஒரே நேரத்தில் பல செல்பேசிகள் எப்படி ஒரு தள நிலையத்துடன் தொடர்பு கொள்கின்றன? அவை அனுப்பும் தகவல்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளாதா?  போன்ற சந்தேகங்கள் எப்போதாவது உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா?

ஜி எஸ் எம் இயங்கும் அலைவரிசை 900 மெகா ஹெர்ட்ஸ் என்று பார்த்தோம். எல்லாத் தள நிலையங்களும் ஒரே அதிர்வெண்ணில் இயங்குவதில்லை.  அவ்வாறு எல்லாத் தள நிலையங்களும் ஒரே அதிர்வெண்ணில் இயங்கினால் எந்த நிலையத்துடன் எந்தச் செல்பேசி இணைக்கப்பட்டுள்ளது? எந்த செல்பேசிக்குத் தகவல் அனுப்பப் படுகிறது? என்பது குறித்துக் குழப்பங்கள் ஏற்படும். எனவே ஒவ்வொரு செல்-லும் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் அலைபரப்பத் தீர்மானிக்கப் பட்டது.
 
ஜி எஸ் எம் - 900 அமைப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ள அதிர்வெண் பட்டை 880 மெகா ஹெர்ட்ஸிலிருந்து 960 ஹெர்ட்ஸ் வரை. செல்பேசிகள் இயங்க ஒரு அதிர்வெண் பட்டை(Frequency band) ; தள நிலையங்கள் இயங்க ஒரு அதிர்வெண் பட்டை. தள நிலையங்களின்  அதிர்வெண் பட்டை 925 முதல் 960 மெகா ஹெர்ட்ஸ் வரை. செல்பேசி இயங்கும்   அதிர்வெண் பட்டை 880 முதல் 915 மெகா ஹெர்ட்ஸ் வரை.  அதாவது , தள நிலையங்களின் செலுத்திகள் (Transmitters) 920 முதல் 960 மெகா ஹெர்ட்ஸில் அலைகளை ஒலிபரப்பும். செல்பேசிகளில் இருக்கும் பெறுனர்கள் (Receivers)அந்த அலைவரிசையிலிருந்து வரும் அலைகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் . அதுபோல் செல்பேசிகளின் செலுத்திகள்  925 முதல் 960 மெகா ஹெர்ட்ஸ் வரை ஏதாவது ஒரு அதிர்வெண்ணில் அலைகளை ஒலிபரப்பும் . தள நிலையங்களின் பெறுனர் இந்த அதிர்வெண்களிலிருந்து வரும் அலைகளை ஈர்க்கும்.

தள நிலையங்கள் பரப்பும் அதிர்வெண் பட்டையைக் கவனிப்போம். 925 மெகா ஹெர்ட்ஸ் முதல் 960 மெகா ஹெர்ட்ஸ் வரை. மொத்தம் 35 மெகா ஹெர்ட்ஸ் அகலப்பட்டை. இந்தப்பட்டையானது 200 கிலோ ஹெர்ட்ஸ் கொண்ட சிறு சிறு பட்டைகளாகப் பிரிக்கப் படுகிறது. ஒரு செல் ஒலிபரப்பும் அலைகள் 200 கிலோ ஹெர்ட்ஸ் அகலங்கொண்ட பட்டையாகும் (Bandwidth).  மொத்தம் 124  பட்டைகள் இவ்வாறு பிரிக்கப்படுகின்றன.  இம்முறைக்கு, அதாவது நமக்குப் பயன்படுத்த ஒதுக்கியுள்ள அதிர்வெண் பட்டையைப் பிரித்து ஒவ்வொரு
பரப்பி-யிற்கும்(Transmitter) ஒரு சிறு  அதிர்வெண் பட்டை வழங்கும் முறைக்கு அதிர்வெண் பகுப்பு பல்லணுகல் முறை (Frequencey Division Multiple Access , FDMA) என்று பெயர்.

இந்த முறையில் ஒவ்வொரு செல்-லிற்கும் 200 கிலோ ஹெர்ட்ஸ் அகல அதிர்வெண் பட்டை வழங்கப்படுகிறது. அப்படியானால் மொத்தம் 124 பட்டைகள்தானே உள்ளன? 124 செல்களுக்கு மேல் இருந்தால் என்ன செய்வது என்கிறீர்களா?  இருக்கவே இருக்கிறது அதிர்வெண் மறுபயன்பாடு (Frequencey Re-use) முறை. சாதாரணமாய் நீங்கள் கவனித்திருக்கக் கூடும்; ஒரு பெரிய மாநகரத்தில் நிறைய பண்பலை வானொலிகள் (FM Radio) இருக்கும். ஒவ்வொரு வானொலி நிலையத்திற்கும் ஒரு அதிர்வெண் வழங்கப்படுகிறது.ஒரு பண்பலை வானொலி நிலையத்தின் அதிகபட்ச ஒலிபரப்பு தூரம் நூறு அல்லது நூற்றைம்பது கிலோமீட்டர்கள். சென்னையில் 88 மெகா ஹெர்ட்ஸில் ஒரு  பண்பலை வானொலி இருக்கிறது. அதே அலைவரிசையில் (88 மெகா ஹெர்ட்ஸில்) மதுரையில் ஒரு பண்பலை வானொலி அமைத்தாலும் , இரு வானொலி அலைகளும் ஒன்றோடொன்று மோதி இடையூறு ஏற்படுத்துவதில்லை. ஏனெனில் இரு வானொலிகள் ஒலிபரப்பும் அலைகளின் திறன் நூறு கிலோமீட்டர்களுக்குள் அடங்கி விடும். இவ்வாறு ஒரே அதிர்வெண்ணை மீண்டும் பயன்படுத்திக் கொள்வதற்கு
அதிர்வெண் மறுபயன்பாடு என்று பெயர்.

பண்பலை வானொலிகள் எவ்வாறு நூறு கிலோமீட்டர்களுக்கு மேல் அதிர்வெண்ணைத் திரும்ப உபயோகப் படுத்திக்கொள்ளுமோ, அதே போல செல்பேசித் தள நிலையங்களும் அதிர்வெண் பட்டையைத் திரும்பப் பயன்படுத்திக் கொள்கின்றன, ஆனால் பண்பலை வானொலி போல் நூறு கிலோமீட்டருக்கெல்லாம் ஒரு செல்லின் ஒலிபரப்பு திறன் இருக்காது.  நகரமாயிருந்தால் நான்கு அல்லது ஐந்து கிலோமீட்டர்கள், கிராமமாயிருந்தால் சற்று அதிக தூரம், பத்துக் கிலோமீட்டர்கள் வரை.

இந்தப்  படத்தைப் பாருங்கள். அதில் F1 ,F2, F3 என்பதெல்லாம் ஒவ்வொரு செல்-லிலும் இருக்கின்ற தள நிலையங்கள் ஒலிபரப்பப் பயன்படுத்தும் அதிர்வெண்கள்(200 கிலொ ஹெர்ட்ஸ் அகலமுடையவை) . அதே அதிர்வெண்கள் மீண்டும் மற்ற செல்களிலும் பயன்படுத்துவதைக் காணலாம். அருகருகே உள்ள இரண்டு செல்களில் ஒரே அதிர்வெண் பயன்படுத்தப்படுதல் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் இடையூறுகள் தோன்றும் . எனவே , இடையூறு நிகழாவண்ணம் சற்றுத் தள்ளியுள்ள செல்களில் மீண்டும் ஒரு அதிர்வெண் பயன்படுத்தப் படலாம்.

F1 என்பது ஒரு செல்லில் அமைந்துள்ள தள நிலையம் பயன்படுத்தும் அதிர்வெண். இதை  ஊர்தி அதிர்வெண் (Carrier Frequency) என்று அழைக்கிறார்கள்.  ஒரு செல்பேசியானது ஒரு குறிப்பிட்ட செல்லுக்குள் வந்தவுடன் அந்தச் செல்லில் அமைந்துள்ள தள நிலையம் ஒலிபரப்பும் அதிர்வெண்ணுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு அந்த அலைகளை வாங்கிக் கொள்கிறது. அந்த செல்லிலிருந்து அருகிலுள்ள மற்ற செல்களுக்குச் செல்லுகையில் அந்தச் செல்லில் இருக்கும் தள நிலையங்கள் ஒலிபரப்பும் அதிர்வெண்ணுக்கு தனது வாங்கி (Receiver)யை மாற்றிக்கொள்கிறது.  இவ்வாறு, ஒரு தள நிலையத்திலிலிருந்து அடுத்த தள நிலையத்திற்குச் அதிர்வெண் மாற்றிக்கொள்ளும் செல்பேசியின் இப்பண்பை அதிர்வெண் தாவல் என்கிறோம்(Frequency Hopping).

சரி, செல்பேசிக்கு வருவோம். செல்பேசிகளின் செலுத்தி (Transmitter) இயங்கும் அலைவரிசைக்கு வருவோம். 880 முதல் 915 மெகா ஹெர்ட்ஸ் வரை செல்பேசிச் செலுத்திகள் பயன்படுத்தும் என்று பார்த்தோம். இந்த அலைவரிசைப்பட்டையும் 200 கிலோஹெர்ட்ஸ் அகலமுள்ள 124 பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டிருக்கும். அப்படியானால் செல்பேசியானது எந்த அதிர்வெண்ணில் அலைகளை அனுப்பும்?

ஒரு செல்பேசியின் செலுத்தி இயங்கும் அதிர்வெண் அது தற்போது இணைந்துள்ள தள நிலையத்தைப் பொறுத்தது.  ஒரு தள நிலையம்  930  மெகா ஹெர்ட்ஸில் அலைகளை  அனுப்புவதாக வைத்துக் கொள்வோம். அதாவது தள நிலையத்தின் செலுத்தி 930 மெகா ஹெர்ட்ஸில் அலைகளை செல்பேசிக்கு அனுப்புகிறது. செல்பேசியின் பெறுனர் (Receiver) அந்த அதிர்வெண்ணுக்கு மாறி அலைகளைப் பெறுகிறது. செல்பேசியின் செலுத்தி இயங்கும் அதிர்வெண் , தள நிலையத்தின் அதிர்வெண்ணை விட  45 மெகா ஹெர்ட்ஸ் குறைவு.  எனவே செல்பேசி அனுப்பும் அலைகள் 895 மெகா ஹெர்ட்ஸில் இருக்கும்.   ஆக, தள நிலையம் இயங்கும் அதிர்வெண்  F1 என்றால் அத்தள நிலையத்திலுள்ள அனைத்துச் செல்பேசிகளும் அனுப்பும் அலைகளின் அதிர்வெண் F1 - 45 மெகா ஹெர்ட்ஸ்.

பொதுவாக இரண்டு கருவிகள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்கையில் இரண்டு வகையான முறையில் தகவல் பரிமாற்றம் நிகழலாம்.

ஒரு கருவி சமிக்ஞைகளை அனுப்ப மட்டுமே பயன்படுத்தப்படும். மற்றொரு கருவி அதைப் பெற மட்டுமே முடியும், இம்மாதிரியான முறையை அகவோன் (Pager) பயன்படுத்துகிறது. இதனை  ஒருவழி முறை எனலாம் (Simplex mode)

இரு கருவிகளும் தகவல்களை அனுப்பவோ, பெறவோ பயன்படுத்தப்பட்டால் அம்முறை இருவழி முறை (Duplex mode). இந்த இருவழி முறையிலும் இரண்டு உட்பிரிவுகள் :  ஒரே நேரத்தில் இரு கருவிகளும் தகவல்களை அனுப்பவோ பெறவோ முடிந்தால் அது முழுமையான இருவழி முறை(Full Duplex) ;  ஒரு நேரத்தில் முதல் கருவி தகவல்களை அனுப்பும், இரண்டாவது கருவி அதனைப் பெறும்; சற்று நேரம் கழித்து இரண்டாவது கருவி தகவல்களை அனுப்பும். முதல் கருவி அத்தகவல்களைப் பெறும். இம்முறைக்கு  அரை-இருவழி முறை என்று பெயர்(Half Duplex).

முழுமையான இருவழிமுறையைப் பயன்படுத்த வேண்டுமெனில் ஒரு கருவியில்  இருவழியாக்கி (Duplexer) எனும் பகுதி அவசியம். இது கொஞ்சம் இடத்தை அடைக்கும் சாதனம். இந்த இருவழியாக்கியின் வேலை என்ன? ஆன்டெனா வழியாக வரும் சமிக்ஞைகளையும் (Received Signals), ஆன்டெனாவுக்கு அனுப்பப் படும் தகவல்களையும்( Transmitted signals) ஒன்றுடன் ஒன்று கலந்துவிடாமல்  பிரித்து சரியான வகையில்  அலைபரப்பவோ/அலைபெறவோ உதவும் பணி இக்கருவிக்கு. தள நிலையங்களில் இக்கருவி அவசியம் தேவைப்படும். தள நிலையத்தில் இச்சாதனம் இடத்தை அடைப்பதில்லை, ஏனெனில் தள நிலையத்தின் அளவோடு ஒப்பிடுகையில் இது மிகச் சிறிய பாகம்.

ஆனால் செல்பேசிக்குள் இதனை வைத்தால் செல்பேசியின் அளவு சற்றே பெரிதாகலாம். அப்படியானால் என்ன செய்யலாம்? இருவழியாக்கியை செல்பேசியில் பயன்படுத்த வேண்டாமென்றும் , ஒரே நேரத்தில் அனுப்புதல்/பெறுதல் தேவையில்லை என்றும் முடிவானது. தள நிலையத்திலிருந்து தகவல் பெற்றவுடன், சிறிது நேரம் கழித்தே செல்பேசி தனது சமிக்ஞைகளைத் தள நிலையத்திற்கு அனுப்பலாம் எனத்தீர்மானிக்கப் பட்டது.

சரி, ஒரு தள நிலையம் F1 எனும் அதிர்வெண்ணில் ஒலிபரப்பினால் அந்தத் தள நிலையத்திலுள்ள  எல்லாச் செல்பேசிகளும்  F1 - 45 மெகா ஹெர்ட்ஸில்  தள நிலையத்திற்கு அலைகளை அனுப்புகின்றன என்று பார்த்தோம். அப்படியானால் ஒரே அதிர்வெண்ணில் , இத்தனை செல்பேசிகள் ஒரே நேரத்தில் , அவை இணைக்கப்பட்டுள்ள ஒரு தள நிலையத்திற்குத் தகவல் பரிமாற்றம் செய்தால் அத்தனை அலைகளும் சரியாக, முட்டிக்கொள்ளாமல் மோதிக்கொள்ளாமல் தள நிலையத்திற்குச் சென்றடையுமா? அப்படிச் சென்றடைந்தாலும் யார் அனுப்பிய
தகவல் இது என்று தள நிலையம் எவ்வாறு அறிந்து கொள்ளும்?

அடுத்த பதிவில் இது குறித்து அலசுவோம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors