தமிழோவியம்
மஜுலா சிங்கப்புரா : வெற்றி கொண்ட கையினாய் வா வா வா!
- எம்.கே.குமார்

சிங்கப்பூர் என்ற நாடு உருவானதில் இருந்து இன்றுவரை செழித்து தழைத்துக் கொண்டிருக்கும் அதன் முன்னேற்றத்தை எளிதில் உணர்ந்துகொள்ள வேண்டுமாயின் சிங்கப்பூரின் விமான நிலையத்தை உதாரணமாக நாம் எப்போதும் எடுத்துக்கொள்ளலாம். திடமான நம்பிக்கை மற்றும் செயல்பாடுகளாலும் ஆரோக்கியமான தரத்தாலும் இன்று உலகின் சிறந்த விமான நிலையங்களுல் ஒன்றாகக் காட்சி கொடுத்துக்கொண்டிருக்கும் 'சாங்கி விமான நிலையம்' சிங்கப்பூரின் வரலாற்றில் நான்காவது விமான நிலையம்.

விமானங்களையும் ரயில்களையும், தான் போகும் இடத்திற்கெல்லாம் 'கையிலெடுத்துச்செல்வதை' வாடிக்கையாகக் கொண்டிருந்த ஆங்கிலேயர்கள்தான் இங்கும் அதை முதலில் கொண்டுவந்தனர். ஆங்கிலேயர்கள் சிங்கப்பூரை ஆட்சி செய்துகொண்டிருந்தபொழுது இங்கிலாந்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் வழியில் சிங்கப்பூரில் 'ரேஸ்கோர்ஸ்' என்னுமிடத்தில் முதன் முதலாக அந்த விமானத்தை இறக்கி சிங்கப்பூர் மண்ணின் விமான 'முதல் முத்தமிடலுக்கு' 1919 ல் அடிகோலி வைத்தார் 'ரோஸ் ஸ்மித்' எனப்படும் இங்கிலாந்து நாட்டு விமானி. அதுதான் சிங்கப்பூருக்கு வந்த முதல் விமானம். அவர்தான் முதல் விமானி!

1919ல் 'ரேஸ்கோர்ஸில்' வந்து அது இறங்கினாலும், முறையான விமான தளமாக எதுவும் இல்லாது கிடந்த வேளையில், 'சிலேத்தார்' விமானத்தளம் கிபி. 1929 ல் கட்டிமுடிக்கப்பட்டு பயணத்திற்கு தயாரானது. 1930ல் '·போக்கர் F-7A' என்னும் 'ராயல் டச்சு இண்டீஸ் ஏர்லைன்ஸ்' (KNILM) நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம், 'படாவியா' நகரிலிருந்து (தற்போது ஜகார்த்தா-இந்தோனேசியாவின் தலைநகர், டச்சுக்காரகள் சூட்டிய பெயர் அது!) எட்டு நபர்களுடன் சிங்கப்பூரில் வந்திறங்கி 'முதல் வர்த்தக விமானம்' என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டது.

அதற்குப்பிறகு, 1937ல் 'கல்லாங்' விமானதளம், 1955 ஆகஸ்டில் 'பாயா லேபர்' விமான தளம் ஆகியனவும் கட்டி விமான சேவைக்குப் பயன்படுத்தப்பட்டன. 1966ல் 'மலேசியா ஏர்வேஸினுடன்' சிங்கப்பூர் அரசாங்கம் இணைந்து 'மலேசியா-சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' நிறுவனத்தைத் தொடங்க, அவற்றின் விமானங்களனைத்தும் இங்கிருந்துதான் முதலில் இயக்கப்பட்டன. பிறகு 1972 ல் 'மலேசியா-சிங்கப்பூர்' ஏர்லைன்ஸிடமிருந்து சிங்கப்பூர் தனது பங்குகளை திரும்பப் பெற்றுக்கொண்டு, 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' என்ற ஒன்றைத் தனியாக ஆரம்பித்தது.

இக்காலக் கட்டத்தில் சிங்கப்பூர், அதன் பொருளியலில் வானுயர பறக்க ஆரம்பிக்க, அதன் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாலாவதும், தரம், குணம், வேகம், சேவை என எல்லாவற்றிலும் மற்ற எல்லாவற்றையும் எல்லாவிதத்திலும் மிஞ்சும் பெரியதும் பிரமாண்டதுமான ஒரு விமான நிலையம் சிங்கப்பூருக்குத் தேவைப்பட்டது. அதன்படி 1975 ஆம் ஆண்டு, சிங்கப்பூர் அரசு, ஒரு நிபுணர் குழுவோடு 'வேலையை' ஆரம்பித்தது. ஏறக்குறைய 870 ஹெக்டேர்கள் நிலத்தை கடலுக்குள்ளிருந்து உருவாக்க, சுமார் 40 மில்லியன் கனமீட்டர் அளவு மணல் கடலிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இதுபோக 12 மில்லியன் கனமீட்டர் அளவு கெட்டியான பாறைகள் உடைக்கப்பட்டு நிரப்பட்டிருக்கின்றன. கடலிலிருந்து 7 மீட்டர் உயரத்தில் 'நான்கு' மீட்டர் 'ரன்வேயுடன்' சுமார் 150 கோடி வெள்ளி (1.5 பில்லியன் டாலர்) செலவில் 'ஆறே' ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்டு, 1981 ஜூலை முதல் திகதி முதல் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, டிசம்பர் மாதம் 29ம் நாள் பிரதமரால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.

வருடத்திற்கு 21 மில்லியன் பயணிகளைக் கையாளும் தகுதியும் ஒரே நேரத்தில் 45 விமான 'வண்டிகள்' வந்து நின்று போகும் வசதியும் இருந்தால் மட்டும் போதுமா சிங்கப்பூருக்கு?

1986ல் அடுத்த வேலை ஆரம்பமாகியது. 'டெர்மினல் 2!' மிகவும் நவீனப்படுத்தப்பட்டதாய், வருடத்திற்கு சுமார் 23 மில்லியன் பயணிகளைக் கையாலும் தகுதிபடைத்ததாய் 1990ல் கட்டி முடிக்கப்பட்டு, 22 நவம்பர் முதல் தனது சேவையை துவக்கியிருக்கிறது அது. பிறகு 1996 ஜூலையில் சுமார் 330 மில்லியன் டாலர் செலவில் இன்னும் இருபத்தியிரண்டு விமானங்கள் நிற்குமளவுக்கு பெரிதாக்கப்பட்டு இப்போது மொத்தம் 34 'வான வண்டிகள்' நின்று பறந்து போகுமளவுக்கு விரிவாக்கப்பட்டு இதோ இன்று, 76 விமானப்போக்குவரத்து நிறுவனங்களைச் சேர்ந்த, வாரம் ஒன்றுக்கு 3720 விமானங்களுடன், உலகப்பந்தின் 55 நாடுகளையும் அவற்றின் 175 நகரங்களையும் இணைக்கும் 'பறக்கும் பாலமாகத்' திகழ்ந்து மலர்ந்து கிடக்கிறது இந்த சாங்கி விமான நிலையம்.

ஆனாலும் ஆண்டுக்காண்டு, சுற்றுலா மற்றும் மற்ற பயணிகளின் வருகை விபரம், 'வட்டிப்புலியின் பேரன் போல' எகிறிக்கொண்டிருக்க, இதோ அடுத்த கட்டம் ரெடி. மூன்றாம் டெர்மினல்.! 2008 ஆம் ஆண்டை குறியீடாககொண்டு மூன்றாம் டெர்மினலுக்கான வேலைகள் மிகவும் பரபரப்பாக நடக்க ஆரம்பித்துவிட்டன. இப்பணியுடன் இனி சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம், சுமார் 64 மில்லியன் பயணிகளை இனி வருடந்தோறும் கையாளக்கூடும்.

இவைதவிர சுமார் 180 மில்லியன் டாலர் செலவில் 'டெர்மினல் 1ம்' சுமார் 240 மில்லியன் டாலர் செலவில் 'இரண்டாம் டெர்மினலும் 'புதுப்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அண்மைய வெளியீடுகளான, 'டீக்காசு' கொடுத்தால் ஊர் சுற்றிக்காட்டும் 'லோ பட்ஜெட்' விமானங்கள் வந்து போவதற்கென 24 மில்லியன் டாலர் செலவில் இன்னொரு 'தனி டெர்மினலும்' உருவாகப்போகிறது. இவைகளின் வழி 3 மில்லியன் பயணிகள் எளிதில் பயணம் மேற்கொள்ள அரசாங்கம் வழி வகை செய்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், உலகிலேயே முதன் முறையாக, 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' பறக்கவிடப்போகும் 'சூப்பர் ஜம்போ ஏர்பஸ் A 380' என்னும் 80 மீட்டர் இறக்கை அகலமும், ஏழு மாடி உயரம், இரு அடுக்குகளும், '555' சீட்டுகளும் கொண்ட மிகப்பெரிய விமானம், 2006-ல் சிங்கப்பூருக்கு வருவதையொட்டி அதற்கான ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து வருகின்றன.

இவ்வகையில் 35,000 பேருக்கு நிரந்தர வேலையையும், 55,000 பேருக்கு தற்காலிக வேலை வாய்ப்புகளையும் வழங்கி வரும் சாங்கி விமான நிலையத்திற்கு உலகில், 'சிறந்த - மோசமான' பட்டங்கள் எதுவும் கிடைத்திருக்கிறதா? சிங்கப்பூர் விமான நிலையம் இவ்வட்டாரத்தில் ஏன் அவ்வளவு சிறப்புக் கொண்டதாய் இருக்கிறது, சிங்கப்பூர் அரசின் சொந்த விமான நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்க்கும் அதன் ஊழியர்களுக்கும் ஏதாவது பிரச்சனை நடந்ததா? இவ்விஷயத்தில் சிங்கப்பூர்காரர்களுக்கும் ஜப்பானியர்களுக்கும் என்ன வேறுபாடு, இந்த விமான தளத்தை உருவாக்குவதில் உண்மையில் இந்தியர்களின் பங்கு என்ன என்பது பற்றியெல்லாம் அடுத்த வாரம் பார்ப்போம்.

(தொடரும்..)


சிங்கப்பூர் டைம்ஸ் 2015 இதழில் இருந்து.

சென்னை. ஏப்ரல் 20. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று கனமான மழைப்பொழிவு ஏற்பட்டது. சென்னை வானிலை ஆராய்ச்சி மண்டலத்தின் 'மழையளக்கும் கருவியில்' இது மிக அதிக அளவு காட்டியதாகவும், இதுவரை இந்தளவுக்கு மழைப் பொழிவு இதற்குமுன் எப்போதும் இருந்ததில்லை எனவும் ஆராய்ச்சி மண்டலத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நேற்று பெய்த கன மழையின் விளைவால் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விடாது பெய்த அடைமழையினால் தங்களது வீடுகளையும் உடமைகளையும் இழந்த பொதுமக்கள் இன்று காலை 'வெள்ள நிவாரண உதவி' கேட்டு சென்னை-தாம்பரம் நான்கு வழிச்சாலையில் மறியல் நடத்தினர். இதனால் அப்பகுதி போக்குவரத்து பலமணி நேரங்கள் தாமதானது.

இதற்கிடையே திருச்சி மற்றும் தஞ்சையில் தொடர்ந்து கொளுத்தும் வெயில்கொடுமையால் பயிர்கள் கருக ஆரம்பித்துவிட்டதாகவும் ஆடு மாடுகளும் குடிக்க நீரின்றி தவியாய் தவித்து சூடுநோய் கண்டு இறப்பதாகவும் அரசாங்கம் உடனே தலையிட்டு 'பஞ்சம்பட்டினி நிவாரண உதவி' வழங்கவேண்டும் எனவும் இல்லாவிட்டால் திருச்சி-தஞ்சை சாலையில் தொடர்ந்து மூன்று நாட்கள் மறியலில் ஈடுபடப்போவதாகவும் ஒரு குழு முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தலைமைச்செயலகத்தை மேற்கோள் காட்டிய செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

இந்நிலையில் சென்னையில், குடிநீருக்காக, '2000' மீட்டர் ஆழத்திற்கு 'ஆழ்துளை கிணறு' போட்டவர் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சென்னை மக்கள், முதல்வருக்கு ஒரு மனு அனுப்பியுள்ளனர். எரிவாயுக்கள் ஏதும் வருகிறதா என்பதைப் பார்க்க புலனாய்வுப்போலீசார் அப்பகுதியில் அடிக்கடி ரகசிய கண்காணிப்புகள் நடத்துவதாகவும் பொதுமக்களில் சிலர் அங்கு பேசிக்கொண்டனர்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors