தமிழோவியம்
திரைவிமர்சனம் : மண்ணின் மைந்தன்
- மீனா

கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் சமீபத்தில் வெளியான படங்களில் இதுவும் ஒன்று என்பதைத் தவிர வேறு உருப்படியான விஷயம் ஒன்றும் இல்லாத படமே மண்ணின் மைந்தன். இதுவரை ஆடு, மாடு, யானை, பாம்பு என்ற ரேஞ்சிலேயே உலவிக்கொண்டிருந்த இராம.நாராயணன் ஒரு மாறுதலுக்காக விலங்குகள் எதுவும் இல்லாமல் எடுத்திருக்கும் படம் என்ற மற்றொரு பெருமையும் இதற்கு உண்டு.

ஒரே ஊரில் வாழும் இரு பெரிய மனிதர்களான மனோஜ்.கே.ஜெயன் மற்றும் பொன்னம்பலம் இருவரும் பரம எதிரிகள். இவர்கள் இருவரது பகையால் இருதரப்பிலும் பல அடியாட்கள் இறக்கிறார்கள். அப்படி இறந்தவர்களில் ஒருவரது மகனான சிபியை, மனோஜ் கே ஜெயன் சிறுவயது முதற்கொண்டு பொன்னம்பலத்தைப் பழிவாங்கும் வெறியில் வளர்கிறார். சிபியும் பொன்னம்பலத்தை எதிர்க்கும் வேலையைச் சரியாகச் செய்துவருகிறார். ஒருகட்டத்தில் முதலாளி மகள் சுஹாவைக் காதலிக்கவும் செய்கிறார்.

இதற்கிடையே மோதிக்கொண்டிருக்கும் பொன்னம்பலமும் மனோஜும் ஊர் பெரியவர்களின் தீராத முயற்சியினால் இணைய முற்படுகிறார்கள். அதற்கு விலையாக சிபியின் தலையை பொன்னம்பலம் கேட்க, "எடுத்துக்கோ!! " என்று காஷ¤வலாக சொல்கிறார் மனோஜ். தன் தகப்பன் சிபிக்கு எதிராக செய்யும் துரோகத்தை அறிந்த சுஹா, சிபி தன்னைக் காதலிப்பதாக மனோஜிடம் கூறும்போது, தான் அப்படி நினைக்கவே இல்லை என்று கூறி சிபியை வெளியே அனுப்பிவிடுகிறார். ஒரு கட்டத்தில் காதல் ஜோடிகள் தடைகளை மீறி ஒன்று சேர, அதைப் பிரிக்க மனோஜும் பொன்னம்பலமும் கூட்டாக சதி செய்ய... அதையும் மீறி காதலர்கள் எப்படி ஒன்று சேருகிறார்கள் என்பதே கதை.

போஸ்டரிலும் டைட்டிலிலும் பிரமாதமாக முதலாவதாக சத்யராஜின் பெயரைப் போட்டாலும் மனிதர் என்னவோ சப்-ஜூனியர் ஆர்டிஸ்ட் ரேஞ்சிற்குத் தான் வருகிறார். முதலில் 2 சீன்.. பிறகு 2 சீன்.. கடைசியில் 2 சீன்.. இவர் வரும்போதெல்லாம் நக்கல் வசனங்கள் தூக்குகின்றன. சில பன்ச் டயலாக்குகள் வேறு.. மகனுக்காக ரொம்பவே அடக்கி வாசித்திருக்கிறார்..

அப்பா சத்யராஜின் ஸ்டைலை அப்படியே காப்பியடிக்க சிபி முயற்சி செய்திருப்பது வருத்தமான விஷயம். ஆக்ஷன், லொள்ளு, ஜொள்ளு.. எல்லாமே அப்பா ஸ்டைல். தனக்கென்று ஒரு தனி வழியை சிபி அமைத்துக்கொள்ளாவிட்டால் வரும் காலங்களில் அவர் தேறுவது ரொம்பவே கஷ்டம். புதுமுகம் சுஹா.. இதைத் தவிர அவரைப் பற்றிச் சொல்ல படத்தில் ஒன்றும் இல்லை.

தங்கள் சுயநலனையே பெரிதாகக் கருதும் வழக்கமான வில்லன்களாக மனோஜ்.கே.ஜெயன் மற்றும் பொன்னம்பலம். காட்டுக்கூச்சல் போடுவதைத் தவிர உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை இவர்கள் இருவரும்.

படத்தில் கொஞ்சம் ஆறுதல் தரும் ஒரே ஜீவன் வடிவேலுதான்.. வாட்டர் வடிவேலுவாக இவர் வரும் காட்சிகள் எல்லாம் ஓஹோ என்று சிரிக்க வைக்காவிட்டாலும் ஓக்கே ரகம். அதிலும் தான் கொலை செய்த கதையை இவர் கூறும் ஆரம்ப காட்சி அருமை.

இசை பரத்வாஜ். நோ காமெண்ட்ஸ்... கண்ணம்மாவில் தான் வசனம் எழுதியும் அது பிரமாதமாகப் போகவில்லை என்ற ஆதங்கமோ என்னவோ கலைஞருக்கு.. அதே சூட்டுடன் இந்த படத்திற்கும் வசனம் எழுதியுள்ளார். ஆங்காங்கே சில அரசியல் டயலாக்குகள் காணப்பட்டாலும் மொத்தத்தில் வசனம் சுமார் ரகம். இதற்கு மேலாவது தகுதியான படத்திற்கு மட்டுமே நான் வசனம் எழுதுவேன் என்ற கொள்கையை கலைஞர் கடைபிடித்தால் உடன்பிறப்புகள் பிழைப்பார்கள்!

நல்ல கதை மட்டுமே ஹீரோ. அப்படி இல்லாத பட்சத்தில் கலைஞர் என்ன கடவுளே வந்தாலும் ஒரு படத்தைக் காப்பாற்ற முடியாது என்பதற்காக சரியான உதாரணம் மண்ணின் மைந்தன். இராம.நாராயணன் கூடிய விரைவில் ஒரு அம்மன் படத்தை அனிமல்ஸ¤டன் எடுப்பார். அதுதான் அவருக்குச் சரியாக வரும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors