தமிழோவியம்
தராசு : அட்சய திருதியை அட்டகாசம்
- மீனா

Atchaya Advtசமீப காலமாக இந்திய மக்களிடையே - குறிப்பாக தமிழக மக்களிடையே அதிகரித்துவரும் மோகங்களில் ஒன்று அட்சய திருதியை அன்று நகை வாங்குவது. தலையை அடகு வைத்தாவது அட்சய திருதியை அன்று 1 கிராம் தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடையே கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துவருகிறது. இந்த ஆண்டு அட்சய திருதியை  ஏப்ரல் 19 மற்றும் ஏப்.20 என்று இரண்டு நாள் வருகிறது. 72 ஆண்டுகளுக்கு பிறகு இத்தகைய நிகழ்வு ஏற்படுகிறது.

தமிழக நகைக் கடைகளில் ஆண்டு மொத்த விற்பனையில் நான்கில் ஒரு பங்கு அட்சய திருதியை தினத்தில் மட்டும் விற்பனையாகிறது. கடந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தில் மட்டும் ரூ. 100 கோடிக்கு மேல் நகை வர்த்தகம் நடைபெற்றது. இந்த ஆண்டு நள்ளிரவிலும் வர்த்தகம் நடைபெறுவதால் விற்பனை ரூ. 150 கோடியைத் தாண்டும் என்று நகைக் கடை அதிபர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் இந்த ஆண்டு வெள்ளைப் பொருள் வாங்கினால் வளம் கொழிக்கும் என்று ஜோதிடர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதன்படி வைர நகை வாங்கினால் நல்லது என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் வைர நகை விற்பனையும் அமோகமாக இருக்கும் என்று வைர நகை வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

முன்பெல்லாம் அட்சய திருதியை அன்று திருமணம் - நாட்டு மற்றும் வீட்டு நலனுக்காக ஹோமங்கள் செய்தல், தான தருமங்கள் செய்தல் பூஜை - புனஸ்காரம் போன்ற நல்ல காரியங்கள் நடைபெற்று வந்தன. அட்சய திருதியை அன்று செய்யும் வேலைகள் பல்கிப் பெருகும் என்ற எண்ணத்தில் இத்தகைய நல்ல புண்ணிய காரியங்களை மக்கள் செய்து வந்தார்கள். மகான்கள் கூறி வந்த புண்ணிய காரியங்களை செய்ய மறந்த மக்கள் எந்த புண்னியவானோ வியாபார நோக்குடன் கிளப்பி விட்ட சமாச்சாரமான தங்க நகை வாங்கும் வழக்கத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள். மக்களின் மோகத்தை மேலும் மேலும் தூண்டுவதைப் போல அமைந்தன நகைக்கடை வியாபாரிகளின் வியாபாரத் தந்திரங்கள். அட்சய திருதியை விளப்பரங்கள் என்ன - தள்ளுபடி என்ன - முன்பதிவு என்ன என்று நாடே அல்லோலப்படுகிறது தற்போது.

வசதி படைத்தவர்களால் நினைத்த நேரத்தில் நினைத்ததை செய்ய முடியும். ஆனால் தற்போது தங்கம் விற்கும் விலையில் நடுத்தர குடும்பத்து மக்களால் தடாலடியாக நகை வாங்குவது என்பது முடியாத காரியம். தலையை அடகு வைத்தாவது அட்சய திருதியை அன்று நகை வாங்கியே தீருவேன் என்று அடம் பிடித்து குடும்பத்தில் குழப்பத்தை விளைவிப்பவர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். அழியும் பொருளை வாங்க தம்மிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச அமைதியையும் தொலைக்கும் நேரத்தில் - இறைவனைப் பற்றிய தியானங்களிலும் வழிபாடு வேள்விகளிலும் மனதை செலுத்த முன்வரவேண்டும். தம்மை விட ஏழ்மையான நிலையில் இருப்பவர்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய முன்வரவேண்டும். கண்களை விற்று சித்திரம் வாங்கிய கதையாக ஆகிவிடக்கூடாது நம் வாழ்க்கை.

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பது போய் ஆடிக்கழிவு என்று ஆகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் அட்சய திருதியையின் உண்மையான நோக்கத்தை மக்கள் என்று புரிந்து கொள்ளப்போகிறார்களோ?

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors