தமிழோவியம்
தராசு : - தேர்தலும் வாக்குறுதிகளும்
- மீனா

இன்னும் சில வாரங்களில் தேர்தல் என்ற நிலையில் தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தினந்தோறும் புதுப்புது வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன. ரேஷனில் அனைவருக்கும் 10 கிலோ அரிசி இலவசம் என்றெல்லாம் அ.தி.மு.க கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. தன்னைத் தேர்ந்தெடுத்தால் மக்களைத் தேடி ரேஷன் பொருட்கள் அனைத்தும் வீடு தேடி வரும் என்று கூறுகிறார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்.

இவர்கள் அனைவரையும் மிஞ்சும் வகையில் தி.மு.க தலைவர் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியபடி உள்ளார். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்குவதாகவும், ஏழை எளியோர்களுக்கு கலர் டி.வி இலவசமாக வழங்கப்படும் என்றும், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழக்கப்படும் என்றும், சத்துணவில் வாரத்திற்கு 2 முட்டைகள் வழங்கப்படும் என்றும், ஏழைப் பெண்களுக்கு திருமண உதவி வழங்கப்படும் என்றும், விவசாயிகளின் விவசயக்கடன்கள் ரத்து செய்யப்படும் என்றும் ஏராளமான வாக்குறுதிகளை தினமும் அள்ளி வீசுகிறார். வெகு விரைவில் கலர் டிவி இல்லாத வீடுகளை கண்டறிய கணக்கெடுப்பு நடத்தும் பணி துவங்கும் என்றும் தி.மு.க தலைவர் கூறியுள்ளார்.

கூட்டணியில் உள்ள காரணத்தினால் தான் பங்கேற்கும் ஒவ்வொரு கூட்டத்திலும் கருணாநிதி சொல்லும் ஒவ்வொரு திட்டத்தையும் தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் எவ்வாறு செயல்படுத்தமுடியும் என்பதை புள்ளி விவரங்களுடன் விளக்கிக் கொண்டு வருகிறார் மத்திய நிதியமைச்சர். இதே பணியைத்தான் மத்திய அரசில் இடம்பெற்றுள்ள மற்ற தமிழக அமைச்சர்களும் தாங்கள் பங்கேற்கும் ஒவ்வொரு கூட்டத்திலும் செய்து வருகிறார்கள்.

இதையெல்லாம் மிஞ்சும் வகையில் இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிச்டுகள் தி.மு.க தலைவர் ஆட்சிக்கு வந்த பிறகு தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று முழங்குகிறார்கள். இதே கம்யூனிஸ்டுகள் தான் மத்திய அரசிற்கும் ஆதரவு அளித்து வருகிறார்கள். ஒவ்வொரு மந்திரியும் தன்னுடைய துறையில் ஏதாவது விலையேற்றம் செய்தால் வெத்துக் கூச்சல் போட்டு ஆர்பாட்டம் என்ற பெயரில் நாடகம் நடத்தி வருகிறார்கள். மத்தியில் கம்யுனிஸ்டு கூட்டணியில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பலமுறை கேஸ் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலையை ஏற்றியுள்ளது. மக்களின் அத்தியாவசிய தேவையான உணவுப் பொருட்களின் விலையும் கண்டபடி உயர்ந்துள்ளது. ஆனால் கம்யூனிஸ்டுகள் செய்ததெல்லாம் என்ன? ஒன்றுக்கும் உதவாத வெற்று ஆர்பாட்டம்தான். இந்த ஆர்பாட்டங்களால் ஏறிய பொருல் எதனுடைய விலையாவது குறைந்ததா என்றால் பதில் நிச்சயம் இல்லை.

மத்தியில் தாங்கள் ஆதரவு அளித்துவரும் ஆட்சியில் நடக்கும் சீர்கேடுகளை, விலையேற்றங்களைப் பற்றி ஒன்றுமே செய்யமுடியாத நிலையில் இருக்கும் கம்யூனிஸ்டுகள் தமிழகத்தில் மட்டும் கருணாநிதியை எதிர்த்து என்ன செய்து விடுவார்கள்?

1967 ஆம் ஆண்டு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூபாய்க்கு மூன்ரு படி அரிசி வழங்குவோம் என்று முழங்கியவர் அப்போதைய தி.மு.க தலைவர் அண்ணா. ஆனால் சொன்னதை செய்தார்களா என்று ஆராய்ந்து பார்த்தால் விடை "இல்லை" என்பதுதான். நாட்டில் தற்போது நிலவிவரும் அரிசி பஞ்சத்தால் மக்கள் வாடுவதைத் தவிர்க்க ஒவ்வொருவரும் ஒரே ஒரு நாள் இரவு அரிசி சாதம் சாப்பிடுவதைத் தவிர்த்து காய்கறிகளை உண்டுவந்தால் பஞ்சத்தைக் கட்டுக்குள் கொண்டுவரலாம் என்று காமராஜர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூறிய போது "நாட்டு மக்களை ஆடு மாடுகளாக மாற்றப் பார்ர்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.." என்று புகார் மழை கூறியவர்கள் தி.மு.கவினர்.

அன்று காமராஜர் கூறிய யதார்த்தமான உண்மையை நம்பாமல் திராவிட கழகத்தாரின் பசப்பு வார்த்தைகளை நம்பி அவர்களுக்கு ஓட்டு போட்டு அபாரமாக ஜெயிக்க வைத்தவர்கள் தான் நமது முட்டாள் தமிழக ஜனங்கள். அன்று தமிழகத்தில் வேரூன்றிய திராவிடக்கட்சிகள் இன்றும் தமிழகத்தை ஆட்டிப்படைக்கின்றன.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை எந்த ஒரு கட்சியுமே மக்களுக்கு தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்போவதில்லை. அதெல்லாம் நினைவில் இருந்தாலி அல்லவா நிறைவேற்றுவதற்கு.. எனவே தமிழக வாக்காளப் பெருமக்களே! கேழ்வரகில் நெய் வழிகிறது என்று ஒவ்வொருவரும் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். அதை நம்பி கெட்டழியாதீர்கள். உங்கள் தொகுதியில் யார் ஓரளவாவது தாங்கள் சுயமாக சொல்லும் வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்று பார்த்து அவர்களுக்கு ஓட்டுபோடுங்கள்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors