தமிழோவியம்
தேர்தல் 2006 : வி.ஐ.பி தொகுதி
- திருமலை கோளுந்து

ஒரு சில லெட்டர் பேட் கட்சிகள் தங்களின் முழு ஆதரவை ஏதாவது ஒரு கட்சிக்கு கொடுப்பது தான் வழக்கம். ஆனால் புதிய நீதிக்கட்சி வித்தியாசமான முறையில் ஆதரவை சொல்லி இருக்கிறது. அக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் புதிய நீதிக்கட்சி 24 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் என்றும், மீதம் உள்ள 210 தொகுதிகளில் அ.தி.மு.க. வை ஆதரிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். சென்னையில் பெரும் மழை பதம் பார்த்த பொழுது தண்ணீர் வெளியேறாமல் கிடந்ததற்கு காரணம் கூவத்தை ஆக்கமித்த கட்டிடங்கள் தான் என்று சொல்லப்பட்டது. அந்தக் கட்டிடங்கள் பெரும்பாலனவை ஏ.சி.சண்முகத்திற்கு சொந்தமான எம.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழத்திற்கு சொந்தமானவை. இதனை தமிழக அரசு இடித்து தள்ளியதும், ஏ.சி. சண்முகத்தின் கோபம் முதல்வர் மீது திரும்பியது. பின் அந்தக் கோபம் காணாமல் போனது. அடுத்து ஆட்சியை ஜெயலலிதா பிடித்து விடுவார் என்று பத்திரிக்கைகள் சொல்லத் துவங்கியதை அடுத்து முதல்வருக்கு 210 தொகுதிகளுக்கும் ஆதரவை கொடுத்துள்ளார். அதே சமயத்தில் 24 தொகுதிகளில் போட்டியிட்டு தனது செல்வாக்கையும் முதல்வருக்கும், நாட்டுக்கும் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் உலா வருகிறார். ஒரு வேலை இவர் கட்சி போட்டியிடும் 24 தொகுதிகளில் கணிசமான ஓட்டுக்களை வாங்;கி அந்த ஓட்டுக்கள் அ.தி.மு.க.வுக்கு பாதகமாக அமைந்தால் ஏ.சி.சண்முகத்தின் கதை அதோ கதி தான் என்கின்றனர் தென் மாவட்டத்தில் உள்ள அவரது கட்சியினர்.

Vijayakanthகடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதி அனைவராலும் உச்சரிக்கப்பட்ட தொகுதி. இம்முறை அந்தப் பெருமையை விருத்தாசலம் தொகுதி பெற்றுள்ளது. நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவருமான விஜயகாந்த் இந்த தொகுதியில் போட்டியிடுவதால் இத்தொகுதி வி.ஜ.பி. தொகுதியாகி விட்டது. இத்தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர், தி.மு.க. கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் என இரண்டு ஜம்பவான்களையும் சமாளிக்க வேண்டிய பெரிய பொறுப்பு விஜயகாந்திற்கு உண்டு. இதில் அ.தி.மு.க.விற்கும், பா.ம.க.விற்கும் சின்னங்கள் இருப்பதால் இத்தொகுதியில் பிரச்சாரம் அனல் பறக்கிறது. ஆனால் விஜயகாந்த் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படாததால் தே.மு.தி.க.கத்தினர் கலக்கத்தில் உள்ளதாக புலனாய்வு பத்திரிக்கைகள் சொல்கின்றன. தேர்தல் பிரச்சாரம் இன்னும் முழுமையாக சுடு பிடிப்பதற்கு முன்பே விஜயகாந்திற்கு புதுப்பிரச்சினை பா.ம.க. கட்சியினர் வடிவில் வந்துள்ளது. அதிகளவு வன்னியர் உள்ள இத்தொகுதியில் விஜயகாந்தை பிரச்சாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என மிரட்டல் வந்துள்ளது. ஆனால் விஜயகாந்திற்காக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய அவரது மனைவி பிரேமலதா பிரச்சினைகளை பார்த்து அஞ்ச மாட்டோம், வீடு வீடாக சென்று வாக்கு கேட்போம் என்று பதிலடி கொடுத்து இருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சிக்கும், விஜயகாந்த் கட்சியினருக்கும் சண்டையை மூட்டிவிட்டு நாம் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் அ.தி.மு.க கூட்டணி கட்சிகள் இருக்கிறார்களாம். அதனால் தான் அ.தி.மு.க.வினர் விருதாசலத்தில் போட்டியிடும் விஜயகாந்தை ஒரு பொருட்டாகவே கருதாமல் தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். ஆனால் பா.ம.க.வினரோ நமக்கு விஜயகாந்த் வேட்டு வைத்து விடுவாரோ என்ற எண்ணத்தில் விஜயகாந்தை திட்ட ஆரம்பித்துள்ளனர். பிரச்சாரம் சூடு பிடிக்க பிடிக்க பெரிய ரகளைகளே நடக்கலாம் என காவல் துறை எதிர்பார்க்கிறதாம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors