தமிழோவியம்
திரையோவியம் : கே.பாலசந்தருடன் ஒரு மாலை
- சோம. வள்ளியப்பன்

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தருக்கு உழைப்பால் உயர்ந்த மாமேதை விருது வழங்கும் விழா

சென்னையிலிருந்து : சோம. வள்ளியப்பன்அழைப்பிதழே மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஆடம்பரமில்லாமல் அதே சமயம் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தது. எப்பொழுதும் "என்ன செய்யலாம்? வித்தியாசமாக என்ன செய்யலாம்? எதை எப்படி அழுத்தமாகச் சொல்லலாம்?' என்று யோசித்துக் கொண்டேயிருக்கும் ஒரு படைப்பாளியின் அடையாளமாக விளங்கும் கே.பி.யின் படம், ஆழ்ந்த யோசனையுடன் "செட்'டில் அமர்ந்திருக்கும் படம், கருப்பு வெள்ளையில்...

"உழைப்பால் உயர்ந்த மாமேதை' என்ற ரோட்டரி சங்கத்தின் விருது வழங்கும் விழா, தோள் கொடுத்து நிகழ்ச்சியை நடத்தியது ராஜ் டி.வி. தமிழ்நாட்டில் திரைக்கதாநாயகர்களை மன சிம்மாசனத்தில் ஏற்றி அமர வைத்து, ஆசை தீர கொஞ்சித் தீர்க்கும் மக்கள் லட்சக்கணக்கில் இருப்பது தெரியும். எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ரஜினி, விஜய், அஜித் என அது ஒரு தொடர்கதை. அவர்களுக்கு விழாக்கள், திரைப்படங்களுக்கு விழாக்கள் என்பதெல்லாம் புதிதல்ல.

இந்த விழா, வித்தியாசமான விழா. திரைக்குப் பின்னால் இருக்கும் ஒரு படைப்பாளியின் உழைப்பைப் போற்றும் விழா.

தமிழர்களின் அடையாளமான திருக்குறளையும், திருவள்ளுவரையும் இன்று நேற்றல்ல, 40 வருடங்களுக்கு முன்பாகவே தனது மனத்தில் பூஜித்து, நிறுவனத்தின் அடையாளமாகவும் ஆக்கியவர் கே.பி. "மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்' என்ற திருக்குறளே இறைவணக்கம் ஆகப் பாடப்பட்டது. சாதகப் பறவைகள் இசையுடன்.

பூர்ண கும்ப மரியாதையுடன் கே.பி. அழைத்துவரப்பட்டார். அவர் வந்தபொழுது சரியாக, ""நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன், நீ வரவேண்டும்'' என்ற பாடல் மேடையில்.

முன்னால் அமைச்சர் என்பதைவிட, சத்யாமூவீஸ் நிறுவனர் என்ற முறையில் ஆர்.எம்.வி. அவர்கள் மற்றும் ஏவி.எம். சரவணன் போன்றோர் முன்னதாகவே வந்திருந்தார்கள். அருமையான நேரு உள் விளையாட்டரங்கம். சுகமான ஏ.ஸி. சிறப்பான ஏற்பாடுகள். "கலா மாஸ்டர் ஏற்பாடு செய்திருந்த நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதை அமைதியாக கே.பி. பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது சம்பந்தமில்லாமல் "ஹோ'வென ரசிகர்களின் ஆரவாரம். என்ன ஏது என்று நிதானித்துப் பார்த்தால், அரங்கத்தில் மேடைக்கு இருபுறமும் பெரிய திரைகள். அதில் ஒரு காட்சி. அரங்கத்துக்கு வெளியே இருந்து படமெடுப்பது உள்ளே திரையில். திரையில் தெரிந்தது வெள்ளை பைஜாமா குர்தாவில் 'சந்திரமுகிலன்'. ஆம் ரஜினிகாந்தே தான்.

தன் குருநாதர் விருது பெரும் நிகழ்ச்சிக்கு, மகிழ்வோடு தனக்கேயுரிய வேகத்துடன் வந்து கொண்டிருந்தார். உள்ளே வந்தார். 'விர்'ரென்று கே.பி. அருகே போய், அவர் காலைத் தொட்டு வணங்கிவிட்டு அருகில் அமர்ந்தார். அரங்கமும் சற்று அடங்கியது.

கே.பி.யின் புன்னகை படம் பார்த்துவிட்டு, தற்கொலை செய்து கொள்ளவிருந்த ஒருவர் மனம் மாற்றி வாழத் தொடங்கியது, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் வெளியிட்டிருக்கும் இந்திய சினிமா பற்றிய என்சைக்ளோபீடியாவில், குறிப்பிடப்பட்டுள்ள சில படங்களில் கே.பி.யின் 'அவர்கள்', 'அச்சமில்லை அச்சமில்லை', 'தண்ணீர் தண்ணீர்' என்ற மூன்று படங்கள் இடம் பெற்றிருப்பது என பல தகவல்களை அழகாக பாரதி பாஸ்கர் அவர்கள் தனது தொகும் வழங்கும் உரையில் சொல்லிக் கொண்டிருந்தார்

கே.பி. அடையாளம் காட்டியவர்கள், அவரால் வளர்ந்தவர்கள் என இன்றைய நட்சத்திரங்கள் வரை தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தார்கள். வீட்டுப் பெரியவர் காலில் விழும் பிள்ளைகள் பேரன் பேத்திகள் போல, அது பாட்டுக்கு மேடைக்குக் கீழே நடந்து கொண்டேயிருந்தது.

மலையாள நடிகர் மோகனும், அபிராமி ராமநாதன் அவர்களும் ரோட்டரி சங்கத்தின் சார்பாகப் பேசினார்கள். ரோட்டரி இதுவரை இந்த விருதினை தமிழ்நாட்டில் மூன்றே நபர்களுக்குத்தான் கொடுத்திருக்கிறதாம். ஏவி. மெய்யப்பச் செட்டியார் மற்றும் செவாலியே சிவாஜிகணேசன் தவிர இதைப் பெறும் மூன்றாவது மேதை கே.பி.தான். இதனை முறையாக ஆரம்பித்து அமெரிக்காவில் ஒப்புதல் பெற்றுத்தான் கொடுக்க முடியுமாம்.

ஏற்கெனவே 5 தேசிய விருதுகள், பத்மஸ்ரீ, கலைமாமணி போன்ற பட்டங்கள் தவிர, 'இவர்தாண்டா டைரக்டர்'... 'டைரக்டர்', என்று மக்களால் தனது முதல் நாடகம், முதல் சினிமாவிலேயே மக்களால் அங்கீகரிக்கப்பட்டு விட்டவர் கே.பி.

அபிராமி சொல்வதுபோல, இந்த விருதை கே.பி. பெறுவதால் விருதுக்கும் ஒரு கெளரவம்தான். சுகமாகப் போய்க் கொண்டிருந்த நிகழ்ச்சியில் மீண்டும் சலசலப்பு. ரசிகர்களின் ஆரவாரம். இந்த முறையும் திரை சொன்னது விடையை! வந்துகொண்டிருந்தவர் ஆளவந்தான். கே.பி.யின் மற்றொரு செல்லப் பிள்ளை கமல். என்ன சொல்ல? எல்லாம் பிள்ளைகள்தான். ஆனால் தந்தையின் தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட, பிரபலமாகிவிட்ட பெரிய பிள்ளைகள்.

வெள்ளை வெள்ளையில் மிடுக்காக, அதே சமயம் அக்கறையாக குருநாதர் விழாவுக்கு வந்தார் கமல். ரஜினி செய்தது போலவே குருவின் காலைத் தொட்டு வணக்கம். கே.பி. அருகில் இருக்கை காலி இல்லை. தள்ளி அமரப் போன கமலை, அருகில் அமர அழைத்தார் பாசமாய் கே.பி.

புகைப்படக்காரர்களுக்கோ அரிய விருந்து. ஆனந்தமாக சுட்டுத்தள்ளிக் கொண்டிருந்தார்கள். தமிழ்நாட்டைக் கலக்கிக் கொண்டிருக்கும் இரண்டு சிங்கங்கள் அமைதியாக தாய் சிங்கத்தின் இரண்டு பக்கமும் உட்கார்ந்திருக்கும் அரிய காட்சி. கேட்கவா வேண்டும்?

எவருக்கு கிடைக்கும் இப்படியொரு பெருமை! இப்படி முத்துக்களைக் கண்டெடுக்க, அவற்றை வளர்க்க, அவையும் வளர, வளர்ந்த பின்னும் அதே மரியாதையுடனும் பாசத்துடனும் கண்ணசைத்தால் வந்து, எவ்வளவு நேரமானாலும் அருகே இருக்க! அவ்வளவு தகுதி வாய்ந்தவர் கே.பி என்று அந்த இருவரின் அமைதியான அருகிருப்பிலேயே தெரிந்தது.

எவர் பேசுவது, எவர் பேசாமலிருப்பது? எதைச் சொல்வது? எதை விடுவது? ஆறு மணி நேர நிகழ்ச்சியே போதுமானதாக இல்லை. நாற்பது ஆண்டுகால தமிழ் சினிமா சரித்திரம். தமிழ் மட்டுமா? தெலுங்கு, இந்தி என்று எல்லா கடல்களையும் தாக்கிய பேரலை அல்லவா பாலசந்தர்.

அவர் வந்தபிறகு திரைப்படங்களின் தரம் மட்டுமல்ல, தொலைக்காட்சி தொடர்களின் தரமும் மிக உயர்ந்தது என்று மிகச் சரியாகக் கணித்துச் சொன்னார் ஏவி.எம். சரவணன். மேலும் அவருடைய தந்தை ஏவி.எம். மெய்யப்பச் செட்டியார் என்ற தமிழ் சினிமா ஜாம்பவான் கே.பி.யின் தீவிர ரசிகர் என்பதையும் பகிர்ந்து கொண்டார்.

நடிகர்கள், கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மட்டுமல்ல... பல சிறந்த இயக்குநர்களையே உருவாக்கியவர் கே.பி. அவருடைய சிஷ்யர்களுள் ஒருவரான வஸந்த் இயக்கிய கே.பி. பற்றிய ஒரு குறும்படம் ராஜ் டி.வி. தயாரிப்பு - திரையிடப்பட்டது.

கே.பி. யார்? என்ன செய்தார் என்பதை, தனக்கேயுரிய முத்திரைகளுடன் நறுக்குத் தெறித்தாற்போல செய்திருந்தார் வஸந்த். முக்கியத் திரைப்படங்களின் கிளிப்பிங்குகளையும் நேர்த்தியாக ஆங்காங்கே சேர்த்திருந்தார். கே.பி.யின் மனைவி, அவரோடு வெளியே போவது அரிது என்ற வார்த்தைகள், பிரபலங்களின் குடும்பத்தார் இழக்க நேரும் தனிமை பற்றி அழகாகச் சொல்லியது. அவள் அல்ல, அவர் ஒரு தொடர்கதை என்பதும் புரிந்தது.

23000 தொழிலாளர்கள் சார்பாக வணங்குகிறேன் என்றார் பெப்சி விஜயன். உங்கள் பெயரில் ஒரு நாடக அகாதமி தொடங்க வேண்டும் என்றார்.

நாகேஷ் வந்தார், அசைந்து. வயதானது தெரிகிறது. பேச்சிலும். கே.பி. விழாதவர் என்றும், அவருக்கு விழா சரிதான் என்றும் சொன்னார். நாகேஷ் பேசும்போது, எலக்ட்ரிஷியன் வந்து மைக்கினை சரி செய்ய, 'அப்ப இதுவரைக்கும் நான் பேசினது கேக்கவேயில்லையா?' என்று 'டம்'மென்று அடித்தார். புரிந்தவர்கள் சிரித்தார்கள். மனுஷனுக்கு நகைச்சுவையுணர்வு உடம்போடு ஒட்டிப் போய்விட்டது தெரிந்தது.

கே.பி. ஒரு மிகச்சிறந்த நடிகர். அவர் நடித்திருந்தால் எல்லா விருதுகளும் அவருக்கே கிடைத்திருக்கும் என்றார் ஆச்சி மனோரமா. நானும்தான் கே.பி.யால் நடிகனாக அறிமுகப்படுத்தப்பட்டவன், உயர்ந்த தன் குடும்பத்தில் என்னை விட்டுவிட்டார் என்ற ஆதங்கத்துடன் தொடங்கிய எஸ்.பி.பி., மொட்டை போட்டிருந்தார். கொண்டு வந்திருந்த மாலையை அணிவித்துவிட்டு, காலனியைக் கழற்றிவிட்டு, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கே.பி.யை வணங்கி விட்டு பேசப் போனார், பாடினார்.

ஆம்... எனக்குப் பேச வராது என்று சொல்லிவிட்டு மனுஷன், குரலா அது... மேடையும் அரங்கமும் கட்டிப்போட்டது போலானது. கே.பி.யின் படங்களில் இருந்து மெலோடியஸான பாடல்களாகப் பாடினார். விவேக், கமல், சிவக்குமார் எல்லாம் லயித்து விட்டார்கள். எல்லாம் நான்கு, எட்டு வரிகள்தான். ஒன்றன்பின் ஒன்றாக ஆயிரம் சொல்லுங்கள், இசைக்கான சக்தியே தனிதான்.

பார்த்திபன் வந்தார். பிலிமால் செய்த மாலையை அணிவித்தார். (எல்லோரும் பிலிம் காட்டுவதாகச் சொல்வார்கள், பார்த்திபன் உண்மையிலேயே பிலிம் காட்டினார் - விவேக்). எதையும் வித்தியாசமாகச் செய்பவர், இந்த சந்தர்ப்பத்தையா விடுவார்?

நான் கெட்ட வார்த்தைகளால் கே.பி.யைப் பற்றிப் பேசப்போகிறேன் என்றார். கே.பி.யை குப்பைத்தொட்டி, அவசரக் குடுக்கை, அடங்காப்பிடாரி, பக்காத் திருடன், கொள்ளைக்காரன், பொறுக்கி, விவஸ்தையற்றவன் என்றார. எல்லாவற்றுக்கும் அழகான Positive ஆன விளக்கமும் கொடுத்தார்.

பல பிரமாதமான ஐடியாக்களை தானே ரிஜெக்ட் செய்து, தனக்கு உள்ளேயே கசக்கிப் போட்டுக் கொள்ளும் குப்பைத் தொட்டி. 20 வருடங்களுக்குப் பின்னால் தர வேண்டிய படங்களை முன்கூட்டியே தந்த அவசரக் குடுக்கை. எவரையும் வலிந்து பாராட்டும் விவஸ்தையற்றவர். மக்கள் மனம் கொள்ளையடித்தவர். தன்னிடம் வாய்ப்புக் கேட்ட 1000 நபர்களில் 67 பேரை 'பொறுக்கி' வளர்த்தவர். சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற ஜாம்பவான்களின் வீட்டுக்கதவை முட்டாதவர். முட்டாத ஆள் என்பது போல்... நன்றாகத்தான் இருந்தது.

விவேக் வந்தார். (நடிகர்) சூர்யாவின் தம்பி சிவக்குமார் அவர்களே... என்று சிவக்குமாரின் இளமை குறித்து 'பன்ச்' வைத்து, அரங்கத்தை அதிர வைத்தார். K.B. 100 cc என்றால் சிங்கம், 100 classic Cinema என்றார். K.B. என்றால் கொம்பன். ரஜினி கமலை உருவாக்கிய கொம்பன் என்றார்.

கவிஞர் வாலி, கே.பி.யிடம் தனக்கு நடிக்க வராது என்றதையும் அதற்கு 'அதை நான் முடிவு செய்கிறேன்' என்று சொல்லிவிட்டு பொய்க்கால் குதிரை எடுத்ததையும் சொன்னார். எஸ்.பி. முத்துராமன் கே.பி. எப்படி ஒரு சுதந்தரம் தரும் தயாரிப்பாளர் என்பதை விவரித்தார்.

பாலசந்தரால் உருவாக்கப்பட்ட இயக்குநர் சரண். எழுதி வைத்துப் படித்தார். பாரதிராஜா சிறுவயதில் எப்படி கே.பி. ரசிகனாக இருந்தேன் என்றும் சர்வர் சுந்தரம் நாடகத்துக்கு 'பிளாக்'கில் டிக்கெட் வாங்கிப் பார்த்தேன் என்றார். தன்னுடைய 16 வயதினிலே படம் பார்த்துவிட்டு 'It is thundering my heart. you are going to hit head this' என்று மற்றொரு கலைஞரை மனம் விட்டுப் பாராட்டி கைதூக்கி விட்டவர் என்றார். ரஜினி பக்கத்தில் உட்கார்ந்தது மட்டுமல்ல, அவ்வப்பொழுது பேசிக் கொண்டுமிருந்தார் அவருடன்.

கமல் வந்தார், நெகிழ்ந்தார். எழுதி வந்ததைப் படித்தார். கே.பி.க்குத் தானும் மரபணு பெறாத மகன்தான் என்றார். சிவாஜி ஒரு தந்தை. அது அன்னை இல்லம். கே.பி. மற்றொருவர். அவர் வீடு 'அப்பன் இல்லம்'. என்றார். துரோணாசாரியாரிடம் கே.பி. நேரிடையாகப் பாடம் கற்ற அர்ச்சுனன் தான் என்றார்.

கே.பி. பெயரில் ஒரு நாடக அகாடமி தொடங்குவோம். அரசு உதவினால் சரி, இல்லையென்றால் நாமே செய்வோம் என்றார்.

ரஜினி வந்தார். கே.பி. எங்களுக்கெல்லாம் நடிப்பு மட்டுமல்ல, எத்தனையோ விஷயங்கள் கற்றுக் கொடுத்திருக்கிறார் என்றார். உங்களில் எவருக்குக் கொஞ்சம் திறமையிருந்து, அவரைச் சந்தித்திருந்தாலும், உங்களையும் அவர் முன்வரிசை அளவுக்கு உயர்த்தியிருப்பார் என்றார். கே.பி.யின் வெற்றிக்கு Physical, Moral & Spiritual discipline தான் காரணம் என்றார். நான் பாராட்டுவதைவிட, மற்றவர்கள் பாராட்டுவதை கேட்டு மகிழவே வந்தேன் என்றார்.

உங்கள் தாய் வீடு நாடகம். திருமணமான வீடு சினிமா. அங்க ரொம்ப நாள் தங்கிட்டீங்க... திரும்ப நாடகத்துக்கு வாங்க.'

'சார்... நீங்க மீண்டும் நாடகம் எழுதுங்க. நான் நடிக்கத் தயார், கமலும் தயார். (கமல் உட்கார்ந்த இடத்திலிருந்தபடியே ஆமோதித்துத் தலையாட்டினார்) நீங்கள் நாடகம் போட்டா மக்கள் வருவாங்க. நாமெல்லாம் வர, மற்றவர்களும் வருவாங்க. நாடகம் தழைக்கும. இதைப்பற்றி சீரியஸா யோசிங்க என்றார்.

பின்பு உழைப்பால் உயர்ந்த மாமேதை விருது வழங்கப்பட்டது. மனைவியும் மகள் புஷ்பா கந்தசாமியும், மருமகள் கந்தசாமியும் மகன்கள் அருகில் இருந்தார்கள். பல வெளிநாட்டு இயக்குநர்களும் கே.பி.யை வாழ்த்த வந்திருந்தார்கள். குறும்படம் எடுத்தவர்களுக்குப் பொன்னாடை போர்த்தினார் கே.பி. நெளிந்தார் வஸந்த். இன்னும் நாடகங்களும், திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் கொடுக்கவிருக்கும் ஒரு கலைஞனுக்கு, இதுவரை செய்தவைகளுக்காக எடுக்கப்பட்ட விழா, உள்ளார்ந்த அன்புடனும், உண்மையான மரியாதையுடனும் எடுக்கப்பட்ட விழாவாக அமைந்தது.

தமிழ்த் திரையுலகம் செய்த பாக்கியம் கே.பி. அவர் நூறு வயது வாழட்டும். வாழும் மட்டும் தன் கதாபாத்திரங்கள் மூலம் நம் ரசனையையும் சிந்தனையையும் வழக்கம்போல உயர்த்தட்டும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors