தமிழோவியம்
உள்ளங்கையில் உலகம் : நேரப் பகிர்வு
- எழில்

சென்ற பதிவில் தள நிலையங்களுக்குள் எவ்வாறு அதிர்வெண் பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்று பார்த்தோம். இந்தப் பதிவில் ஒரு தள நிலையத்திலுள்ள செல்பேசிகள் , அத்தள நிலையத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்று பார்ப்போம்.

ஒன்றுக்கு மேற்பட்ட செல்பேசிகள் ஒரே நேரத்தில் தள நிலையத்திற்குத் தகவல்களை அனுப்பினால் அவை ஒன்றுடன் ஒன்று மோதி , தகவல்கள் தள நிலையத்திற்குப் போய்விடாமல் அழிந்துவிட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட செல்பேசி மட்டும் தகவல் அனுப்புவது என்றும் அதன் பின் அடுத்த செல்பேசி தகவல்களை அனுப்பலாம் என்றும் முடிவானது. இவ்வாறாக ஒரு நேரத்தில் ஒரு செல்பேசி மட்டும் தகவல் அனுப்புவதை நேரப் பகிர்வு பல்லணுகல் முறை (Time division Multiple
Access, TDMA) எனலாம்.

ஒரு சிறு உதாரணத்துடன் இதை விளக்கலாம்: ஒரு  சிறிய அறை , அதனுள் இருபது பேர் அமர்ந்திருக்கிறார்கள் என்போம். அனைவரும் ஒரே சமயத்தில் பேச ஆரம்பித்தால் ஒருவர் பேசுவது மற்றவருக்குப் புரியாமல் போய் குழப்பம் மட்டுமே எஞ்சும். ஒவ்வொருவரும் வரிசையாய், ஒருவர் பின் மற்றொருவர் எனப்பேசினால் அப்பேச்சு மற்றவருக்கு எளிதில் விளங்கும் அல்லவா? அதுபோலத்தான் செல்பேசிகளும் ஒவ்வொன்றாக, தள நிலையத்துடன் தொடர்பு கொள்கின்றன.

ஒரு குறிப்பிட்ட நேரம் (Time Frame) என்பது  4.615 மில்லி செகண்டுகள். இந்தக் குறிப்பிட்ட நேரம் எட்டு சமமான பகுதிகளாய்ப் பிரிக்கப்பட்டு (Time slots)எட்டு செல்பேசிகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு செல்பேசிக்குக் கிடைக்கும் நேரம் 577 மைக்ரோ வினாடிகள். இவ்வளவு குறைந்த நேரத்தில்  மிகக்குறைவான தகவல்கள் தானே  அனுப்பப்பெறும் என்கிறீர்களா? ஆமாம்.

இவ்வாறு எட்டு செல்பேசிகளும் ஒரு சுற்று தகவல் அனுப்பியவுடன் அதாவது, 4.615 மில்லி செகண்டுகள் முடிந்தவுடன் அடுத்த சுற்று ஆரம்பிக்கிறது. அடுத்த சுற்றுக்கும் இவ்வாறு எட்டு நேரப்பிரிவுகள். எட்டு செல்பேசிகளும் தனக்கென ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் மீண்டும் தகவல் அனுப்புகின்றன. இந்தச் சுற்று தொடர்ந்து நடைபெறுகிறது. ஒரு செல்பேசி  தனது பேச்சை முடித்துக்கொண்டதென்றால் ( மேற்கொண்டு தகவல் அனுப்பத் தேவையில்லை எனில்) அந்த நேரப் பகுப்பு (Slot) அச்செல்பேசிக்கு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு, தகவல் அனுப்ப விழையும் பிற செல்பேசிகளுக்கு வழங்கப்படலாம்.

ஒரு நேரச் சட்டம்  (Time frame)  என்பது இதுபோல் எட்டு நேரத் துண்டுகளைக்கொண்டது (Time slot) . செல்பேசிகள் ஒரு குறித்த நேரத்தில் 577 மைக்ரோ செகண்டுகள் அளவுள்ள ரேடியோ அலைகளை அனுப்புகின்றன.

தள நிலையங்களும் இதே முறையைத்தான் பின்பற்றுகின்றன. ஒரு குறிப்பிட்ட செல்பேசிக்கு அவை தகவல் அனுப்பும் போது 577 மைக்ரோ விநாடிகள் அகலமுள்ள வானலைகளை அனுப்புகின்றன. அதற்கடுத்த 577 மைக்ரோ விநாடிகளில் மற்றொரு செல்பேசிக்குத் தகவல் அனுப்புகின்றன. இவ்வாறு எட்டு நேரத்துண்டுகள் கழித்து, அதாவது ஒரு நேரச் சட்டம்  முடிந்ததும் முதல் செல்பேசிக்கு மீண்டும் தகவல் அனுப்பும்.

தள நிலையத்திலிருந்து செல்பேசிக்குத் தகவல் அனுப்புவது தாழ்நிலை இணைப்பு (DownLink) . செல்பேசியிலிருந்து தள நிலையத்திற்குத் தக்வல் அனுப்பப் படுவது உயர்நிலை இணைப்பு (UpLink). ஒரு செல்பேசியிலிருந்து ஒரே நேரத்தில் தகவல் அனுப்புவதும், பெறப்படுவதும்  இல்லை என்று முன்பே கண்டோம். தள நிலையத்திலிருந்து தகவல் பெறுவதற்கும், தள நிலையத்திற்கு தகவல் அனுப்புவதற்கும் மூன்று காலத்துண்டுகள் இடைவெளி உண்டு. அதாவது, ஒரு செல்பேசி X என்ற நேரத்தில் தகவல் பெறுவதாக வைத்துக் கொள்வோம். அதே செல்பேசி தள நிலையத்திற்கு X+ 3  எனும் நேரத்துண்டில் தகவல்களை உயர்நிலை இணைப்பு செய்கிறது.

படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, கீழ்நிலை இணைப்பில் (Downlink) தள நிலையத்திலிருந்து செல்பேசிகளுக்குத்தகவல் அனுப்பும் நேரச் சட்டம் , 0 முதல் 7 வரை (எட்டு நேரத்துண்டுகள்). ஒரு நேரச் சட்டம்  முடிந்ததும் அடுத்த நேரச் சட்டம் ஆரம்பிக்கிறது. இந்தச் சட்டங்களுக்கு ஒரு சட்ட எண் உண்டு(Frame Number). இதே போல் தான் மேனிலை இணைப்பும்.  ஒரே ஒரு வேறுபாடு; படத்தில் காண்பது போல்  மேனிலை இணைப்பில்,ஒரு சட்டத்தின் 0 என்று குறிக்கப்பட்டுள்ள துண்டு தொடங்கி மூன்று துண்டுகள் கழிந்தபிறகே கீழ்நிலை  இணைப்பு நேரச்சட்டத்தின்  0 எனக் குறிக்கப்பட்டுள்ள  துண்டு  தொடங்குகிறது. இதற்கு என்ன காரணம்? செல்பேசியும் தளநிலையமும் ஒரே நேரத்தில் தகவல் பரிமாறிக்கொள்வதில்லை என்று சென்ற பதிவில் பார்த்தோம்.  தள நிலையம்   ஒரு செல்பேசிக்கு  2-ஆவது துண்டில் தகவல் அனுப்பினால்,  மூன்று நேரத் துண்டுகள்  கழித்து செல்பேசி தளநிலையத்திற்குத் தகவல் அனுப்பும். இவ்வாறு மூன்று நேரத்துண்டுகள் வித்தியாசம் இருந்தாலும், செல்பேசி எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள  வசதியாக இரு நேரத்துண்டுகளும் ஒரே  எண்ணாகக் குறிக்கப்படுகின்றன

சரி , இவ்வாறு ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் ஒரு செல்லில் இருக்கும் எட்டு செல்பேசிகள் நேரப் பகிர்வு செய்து கொண்டு தள நிலையத்துடன் தகவல் பரிமாற்றம் செய்கின்றன என்றால், ஒரு செல்லில், ஒரு குறித்த நேரத்தில் (one Time frame) எட்டு செல்பேசிகள் தான்  தள நிலையத்துடன் தொடர்பு ஏற்படுத்திப் பேச முடியுமா? எட்டுக்கு மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் பேச முயற்சி செய்தால் என்ன செய்வது?  எட்டுக்கு மேற்பட்டவர்கள் பேச முடியும்!

எப்படி?

ஒரு தள நிலையம்  F1 எனும்  ஊர்தி அதிர்வெண்ணில்(Carrier Frequency) இயங்குகிறது எனலாம். அப்படியானால் அத்தள நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து செல்பேசிகளும் உயர்நிலை இணைப்பு (Uplink) ஏற்படுத்தப் பயன்படுத்தும் அதிர்வெண் F1-45. இந்த அதிர்வெண்ணில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எட்டு நேரத்துண்டுகளும் எட்டு செல்பேசிகளுக்கு வழங்கப்பட்டு விட்டன, மேலும் நிறைய செல்பேசிகளுக்கு இணைப்பு வழங்கப்படல் வேண்டும். அப்படியானால் அந்தத் தள நிலையம்  ஒன்றுக்கு மேற்பட்ட ஊர்தியைப் (Career) பயன்படுத்தலாம். அதாவது 200 கிலோஹெர்ட்ஸ் அகலமுள்ள மற்றொரு அதிர்வெண் பட்டையையும் பயன்படுத்தலாம். அந்த அதிர்வெண் பட்டையை F6 என்று அழைக்கலாம். எனவே தாழ்நிலை இணைப்பு அதிர்வெண்கள் F1 மற்றும் F6. அந்தத் தள நிலையத்தில் உள்ள செல்பேசிகள் பயன்படுத்தும் உயர்நிலை அதிர்வெண்கள் F1 - 45 மற்றும் F6 - 45 . மேலும் எட்டு செல்பேசிகள் இந்த இரண்டாவது அதிர்வெண் பட்டையை உபயோகிக்கலாம். இன்னும் பல செல்பேசிகள் இத்தள நிலையத்தில் இருக்கின்றனவா? மேலும் சில ஊர்தி அதிர்வெண்களைப் பயன்படுத்துக் கொள்ளலாம். ஆக, ஒரு தள நிலையம் பயன்படுத்தும்  மொத்த அதிர்வெண் பட்டைகள் அந்த இடத்தில் இருக்கும் செல்பேசிகளின் எண்ணிக்கையையும், குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு செல்பேசிகள் தகவல் அனுப்ப விழைகிறதோ, அந்த அவசியத்தையும் பொருத்தது.

இந்த அதிர்வெண் தேவை எப்போதும் ஒரே மாதிரியாய் இருப்பதில்லை. உதாரணமாய் விளையாட்டுப் போட்டிகள் நிகழும் மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பர்.  அந்தச் சமயங்களில், மைதானத்திற்கருகே உள்ள தள நிலையத்திற்கு அதிகமான ஊர்தி அதிர்வெண் பட்டைகள் தேவைப்படலாம். விளையாட்டு முடிந்து மக்கள் கலைந்து சென்றதும் அங்கே செல்பேசிப் பயன்பாடு குறைந்து , குறைந்த ஊர்தி அதிர்வெண் பட்டைகள் பயன்படுத்தப் படலாம்.

இவ்வாறு பல ஊர்திகள் இருக்கும் ஒரு தள நிலையத்தைப் பற்றிய தகவல்களையும், செல்பேசிக்குத்தேவையான பிற தகவல்களையும் தள நிலையம் எவ்வாறு தெரிவிக்கிறது. கீழ் இணைப்பின் ஏதாவது ஒரு நேரத்துண்டில் , தள நிலையம் தன்னைப்பற்றியும் தன்னுள் இயங்கும் அதிர்வெண்கள் பற்றியும் மற்றும் பிற முக்கியமான தகவல்களையும் ஒலிபரப்பிக்கொண்டே இருக்கிறது. அந்த ஒலிபரப்பைச் செய்யும் ஊர்தி அதிர்வெண்ணை , செல்பேசிகள் எப்போதும் கவனித்தல் அவசியம். அதாவது , ஒரு தள நிலையம் F1 , F2, F3 , F4 என நான்கு ஊர்திகளைக் கொண்டது எனலாம்.  F1 என்ற ஊர்தியிலிருந்து தள நிலையம் முக்கியத்தகவல்களை ஒலிபரப்புகிறது எனில் எல்லாச் செல்பேசிகளும் அந்த ஊர்தியில் வரும்
ஒலிபரப்புத்தகவல்களை எப்போதும் பெற்று , அதில் இருக்கும் குறிப்புக்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.  இந்த F1 எனும் ஊர்தி அலைபரப்புக் கட்டுப்பாட்டு ஊர்தி (Broadcast Control carrier) என்றழைக்கப்படுகிறதுபிற ஊர்திகளை ( F2, F3, F4) அவை கவனிக்கத்தேவையில்லை. ஏதாவது தகவல் அனுப்ப (அழைப்பு ஏற்படுத்த) வேண்டுமெனில் (பயன்படுத்தப்படாத ஒரு நேரத்துண்டில்) ஏதாவது ஒரு ஊர்தியைப் பயன்படுத்தலாம்.

மேலும் சில முக்கிய, ஒலிபரப்புத் தகவல்களை அடுத்த வாரம் காண்போம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors