தமிழோவியம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : அறனும் ஆக்கமும்
- எஸ்.கே


நம் வாழ்க்கையில் வெற்றிகரமான சாதனைகள் புரிந்து, சமூகத்தில் நான்குபேர் நம் பெயரைச் சொல்லும் நிலை ஏற்பட வேண்டுமெனில், அதற்கு பிறருடைய பங்களிப்பு மிகவும் அவசியம் என்பதை பலமுறை வலியுறுத்தி வருகிறேன். அதுபோல் நம் நன்மைக்காக பிறர் மனமுவந்து தம் பங்களிப்பை அளிக்க முன்வரவேண்டுமானால் அது நம் ஆளுமையினால்தான் எற்படவேண்டும். நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தை நம் இஷ்டப்படி வளைத்து, நம் நன்மைக்காக  அதன் செயல்பாடுகளை மாற்றியமைப்பதுதான் சாமர்த்தியம். ஆனால் வெளிப்படையாக தாம் பிறரால் பயன்படுத்தப் படுகிறோம் (getting exploited) என்னும் எண்ணம் தோன்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம். அவ்வாறான எண்ணப்பாங்கு அவர்களின் ஈகோவை பாதிக்கும். நமக்காக உழைப்பதில் அவர்களுடைய தன்னலமும் சேர்ந்திருக்கிறது என்பதுபோன்ற பிரமையை ஏற்படுத்துவதுதான் இவ்வகை செயல்பாட்டின் முதல் படி.

"அப்படியானால் இதுபோல் பிறரை ஏமாற்றுவதுதான் வாழ்வின் வெற்றிக்கு ஒரே வழி என்று கூறுகிறீர்களா" என்ற கேள்வி உங்கள் மனதில் எழக்கூடும். அந்தக் கேள்வியை பலர் என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  இதில் அறநெறிக்கு ஒவ்வாத செயல்பாடுகள் ஏதுமில்லை. நாம் எல்லோருமே ஒரு வகையில் பிறருக்காகத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம். நம் ஒவ்வொரு செயலும் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பலருக்கு லாபங்களை கொண்டு சேர்த்தவண்ணம்தான்  இருக்கிறது.நம்மையறியாமல் விளம்பரங்கள் மூலமாகவும், பரிந்துரைகள் மூலமாகவும், ஆங்காங்கே கவனமாகச் சிதறப்பட்ட தேர்ந்தெடுத்த சொற்றொடர்கள் மூலமாகவும் பிறரால் ஆளப்பட்டு, அவர்கள் சித்தப்படிதான் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவை துல்லியமாக நம் மனதால் அடையாளம் காட்டப்படுவதில்லை. இதையே அறிவார்ந்த முறையில் திட்டமிட்டு, நம் இலக்குகளை எட்ட நம்மைச் சுற்றியுள்ளவர்களின் பங்கெடுப்புடன் முனைப்புடன் செயல் புரிந்தால் வெற்றி நிச்சயம். பெயரும் பெருமையும் கைகூடும். நம்முடன் ஒருங்கிணைந்து ஈடுபாட்டுடன் பங்கெடுத்தால் அவர்கள் நிச்சயமாக பயன்பெறுவார்கள்; அவ்ர்களுடைய நன்மை நம் நன்மையுடன் பிணைந்திருக்கிறது என்ற கருத்தை பிறர் மனத்தில் பதித்துவிட்டால், அதுவே பாதி வெற்றி. மீதம் தானே நம்மிடம் வந்துசேரும்!

ஆள்பவர், ஆளப்படுபவர் என்ற பாகுபாடு எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானதொரு அமைப்பு. இது இயற்கையின் கட்டாயம். இத்தகைய செயல்முறை இல்லையெனில் சமூக அமைப்பு என்பது சாத்தியமே இல்லை. புலி, கரடி போன்ற தனிக்காட்டு ராஜாக்கள் தவிர, கூட்டுக் குடும்பமாக இயங்கும் எல்லா விலங்கினங்களும், எறும்பு, தேனீ போன்ற ஒட்டுமொத்த காலனி வாழ்க்கை வாழும் பூச்சி வகைகளும் இத்தகைய வழிமுறையையே கடைப்பிடிக்கின்றன. ஏற்றத்தாழ்வு அதிகமில்லாத அமைப்புகளில்கூட கடைசியாக ஒப்புதல் அளிப்பவர் என்று ஒருவர் கட்டாயம் இருப்பார்.

நீங்கள் ஒரே ஒரு நபரை வேலைக்கமர்த்தி உங்கள் வீட்டை வர்ணமடிக்கச் சொன்னீர்களானால், நீங்களே அந்த வேலையின் வரையறைகளை உறுதிசெய்து மேற்பார்வையிட்டு செய்து முடிக்கலாம். ஆனால் 2, 3 பேருக்குமேல் கொண்ட ஒரு குழுவை அமர்த்தினீர்களேயானால் அவர்களின் பங்கெடுப்பை ஒழுங்கு செய்து நிர்வகிக்க ஒரு மேலாளர் தேவைப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டவுடனேயே அந்த நிலை ஒரு நேரியல் சமன்பாட்டிலிருந்து வேறுபட்டுவிடும்.  அப்போது அந்த செயலின் வெற்றி தோல்வி, அந்த மேலாளரின் ஆளுமைத்திறன் பொருத்து அமையும். இதுவும் ஒரு மனவியல் சார்ந்த இயற்கை நியதிதான்.

எருதுகள் பூட்டிய வண்டியில் பாரம் ஏற்றி அவற்றை விரட்டுவதில் நாம் உடன்படுகிறோம். குதிரைகள் நமக்காகத்தான் பிறவி எடுத்திருக்கின்றன. கொசுக்கள் விரட்டப்பட வேண்டியவை. கரப்புகள் அழிக்கப்பட வேண்டியவை.  கிளிகள் கூண்டிலடைக்கப்பட்டு நம் இல்லங்களை அலங்கரிக்க வேண்டியவை. நாய்கள் இருப்பதே நமக்கு உழைப்பதற்காகத்தான். அவற்றின் utility value நாம் நினைக்கும்படி இல்லையென்றால் அவை அழிக்கப்பட வேண்டியவை.  இப்படி எல்லாவற்றையுமே நம் நோக்கப்படி பார்த்துத்தான் முடிவெடுக்கிறோம். அத்தகைய அணுகுமுறை உண்மையில் அறநெறிப்படி சரியா என்ற கேள்வியே நம் மனதில் எழுவதில்லை. அது போகட்டும். ஒரு நிறுவனத்தில் சம்பளத்துக்கு வேலைபார்த்துக் கொண்டு, வேலைப் பளு மற்றும் வேலை நேரம் குறைக்கப்பட வேண்டிய அவசியத்தைப் பற்றியும், உரிமைகள் பற்றியும் கோஷமிட்டுக் கொண்டு,  கடிகாரத்தின் முட்களைப் பிடித்துத் தொங்கும் ஒரு தொழிலாளி தன் சொந்த வேலைக்காக இன்னொரு தொழிலாளியை (பகுதி நேரத்திற்காகவாவது) வேலைக்கமர்த்தினால், அவர் அணுகுமுறை எவ்வாறிருக்கும்? அவர் பறைசாற்றும் தொழிலாள உரிமைகளை தன்  கைக்காசிலிருந்து கூலி பெரும் தொழிலாளியின்பால்  அனுசரிப்பாரா? நிச்சயமாக இல்லை. சீனாவில் வேலைநிறுத்தம் என்று எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறோமா? ஏன் இந்த இரட்டை வேட நிலை? இதுதான் இயற்கை. இந்த இரட்டை அணுகுமுறையைத் தவிர்க்க முடியாது. நான், எனது என்கும்போது சட்டங்களும், கோட்பாடுகளும் வேறு அர்த்தம் பெறுகின்றன. மனித மனம் அத்தகைய ஓர்நிலைச் சார்பை நிலைநிறுத்தும்படிதான் படைக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது பிறர் மனத்தின்மேல் ஆளுமை செலுத்தி அவர்களை நம்போக்குக்கு மாற்றி நமக்கு ஆகவேண்டியவற்றை நடத்திக் கொள்வதில் நெறி பிழைதல் என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது உலக நியதி. நான் ஆளப்பிறந்தவன், என் சொல்கேட்டு பிறர் நடக்க ஏதுவாக என் செயல்பாட்டை மாற்றியமைப்பேன், பிறர் மனதில் என்னைப் பற்றிய மேன்மையான இமேஜை உருவாக்கி, அதனை எனக்கு சாதகமாக பயன்படுத்துவேன். இத்தகைய கண்ணோட்டத்தில் எந்தவிதத் தவறும் இல்லை. இதனால் உங்கள் மனத்தூய்மைக்கு எவ்விதக் கேடும் இல்லை. ஆனால் பொதுவில் இதனை பறைசாற்றாதீர்கள். பிறர் நம்மிடமிருந்து எத்தகைய சொற்களைக் கேட்க விரும்புகிறார்களோ, அதனையே அளிப்போம். நம் மனதிலுள்ளதை, நம் செயல் திட்டங்களை அப்படியே "சுக்குநூறாக" உடைத்துச் சொல்லவேண்டிய அவசியமில்லை. அதனை மக்கள் விரும்பவும் மாட்டார்கள். தேவை புத்திசாலித்தனம்தான்!

நம் மனம் ஒருமித்து ஓர் சிந்தனையில் லயித்திருக்கும்போது, நம் உடலின் அங்கங்கள் எவ்வித சேஷ்டைகளில் ஈடுபடுகின்றன என்பது நம் கவனத்திற்கு வராது; அவை நம் மனத்தின் கண்ணிற்கும் புலப்படாது. அதுபாட்டுக்கு கோணங்கித்தனமாக ஏதாவது செய்து கொண்டிருக்கும். நாம்தான் அவற்றை கவனிக்கவில்லையேயன்றி நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம் ஒவ்வொறு அசைவையும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள் அதன்மூலம் அவர்கள் நம்மைப் பற்றிய கணிப்பை மனதிலிருத்திக் கொள்கிறார்கள். Body language-க்கு உள்ள தாக்கத்தை நீங்கள் அறிவீர்கள். அத்தகைய தன்னிச்சை செயற்கள்:

  1. மூக்கிலிருந்து தூர்வாருதல். சிலர் அங்கு புல்பிடுங்கி கையில் வைத்து அழகுபார்க்கவேறு செய்வார்கள்.
  2. பல் குத்துதல். இது முழு கவனத்துடன் பாத்ரூமில் செய்யவேண்டியது.
  3. சட்டை பொத்தானை சரிசெய்தல், தலை சொரிதல், கனைத்தல், செருமுதல் - இவை தன்னம்பிக்கையின்மையை பறைசாற்றும்.
  4. இருமி இருமி கோழையை வெளிக்கொணர்தல். இதைவிட அருவருப்பான செயல் வேறு இல்லை என்பது என் கருத்து.
  5. குறுக்கே பேசுதல். வெட்டிப் பேசுதல். எதெற்கெடுத்தாலும் தர்க்கம் செய்தல்.

எங்கோ என்னமோ நடக்கிறது, நமக்கும் இந்த உலகத்துக்கும் தொடர்பில்லை என்பதுபோன்ற மந்த நிலையைத் தவிர்க்க வேண்டும். Full of energy என்ற என்று உங்களை பிறர் எண்ணவேண்டும். எதையும் ஒத்திப் போடுதல், நமக்கு ஆதரவளிக்கக் கூடியவர் யார்யார் என்பதை அடையாளம் கொள்ளாதிருத்தல், வாய்ப்புக்கள் நெருங்கி வரும்போது அவற்றை அசட்டை செய்தல் போன்றவை வெற்றிக்கு வழிகாண்பிக்காது.

சிலர் குள்ளமாயிருப்பர். சிலர் ஒட்டைச் சிவிங்கி போலிருப்பர். சிலருக்கு கழுத்து எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு "தனிப்படை" அமைக்க வேண்டியிருக்கும். சிலருக்கு சப்பை மூக்கு. மற்றும் சிலருக்கோ கிளி மூக்கு, சிலர் முடிக்கற்றை நெற்றியில் விழ ஸ்டைலாக தலையசைப்பர். சிலருக்கு தலையில் வழவழ மைதானமே அமைந்து, அதனை யாரும் திருடிச் செல்லாதபடி அதற்கு ஓரத்தில் கோரைப்புல்லால் பாத்தி கட்டியிருக்கும். இதுபோல் வெளித்தோற்றத்தில் எத்தகைய குறைபாடுகள் இருந்தாலும், அவற்றை மறைத்து, மக்கள் கவனம் அவற்றிலிருந்து விடுபட்டு நம்முடைய சிறப்பியல்புகள்பால் செல்லும்படி கவனமாக அவர்கள் மனதை திசை திருப்புவதில்தான் உங்கள் வெற்றி அடங்கியிருக்கிறது. அதனை ஒரு திட்டத்துடன், ஒருவித "பாணி"யைக் கடைப்பிடித்து முழு ஈடுபாட்டுடன் செய்ய முற்பட்டால் பூமி, வானம், பாதாளம் அனைத்துமே வசப்படும்!

Copyright © 2005 Tamiloviam.com - Authors