தமிழோவியம்
திரைவிமர்சனம் : மும்பை எக்ஸ்பிரஸ்
- மீனா

சீரியஸான டாப்பிக்கில் படம் எடுப்பதை கொஞ்ச நாளைக்கு நிறுத்திவைத்துவிட்டு காமெடியின் பக்கம் திரும்பியிருக்கும் கமலின் மற்றொரு தொடர் காமெடி கலக்கல் மும்பை எக்ஸ்பிரஸ். வழக்கமாக கமல் படத்தில் காணப்படும் சில அடிப்படை விஷயங்களான டூயட், கிஸ்ஸிங் சீன் ஒன்றுமே இல்லாத சுத்த வெஜிடேரியன் படமாக இருப்பது இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பம்சம்.

கோடீஸ்வரரான சந்தானபாரதியின் மகனைக் கடத்தி பணம் பறிக்கத் திட்டமிடும் பசுபதி, வையாபுரி கோவின் மூன்றாவது மெம்பரான கமலின் மச்சானுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட, அவரது மனைவி கோவை சரளா தன் தம்பி கமலை வைத்து திட்டத்தை நிறைவேற்றுமாறு பசுபதியிடம் வலியுறுத்துகிறார். வேறு ஆளை குறைந்த அவகாசத்தில் தேடமுடியாத காரணத்தால் பசுபதியும் கமலை தங்களோடு சேர்த்துக்கொள்கிறார். இந்த மூவர் கூட்டணியில் எதிர்பாராத நான்காவது உறுப்பினராக வந்து சேர்கிறார் இன்ஷ¥ரன்ஸ் ஏஜண்டான ரமேஷ் அர்விந்த்.

பிள்ளையை கடத்துவதில் பசுபதியால் ஏற்படும் ஒரு குழப்பத்தில் கமல் மனீஷா மற்றும் போலீஸ் அதிகாரியான நாசரின் மகனைக் கடத்திவர, உண்மையை கொஞ்சம் நேரம் கழித்து உணரும் பசுபதி மற்றும் வையாபுரி போலீஸ்காரர் பிள்ளை என்பதால் கடத்தப்பட்ட சிறுவனை கொல்ல முயல்கிறார்கள். அவர்களிடமிருந்து அந்தச் சிறுவனைக் காப்பற்றி மனீஷாவிடம் சேர்க்கும் கமல் எப்படி அந்தக் குடும்பத்தில் ஒருவராகிறார் என்பதே மீதிக்கதை.

வார்த்தைக்கு வார்த்தை காமெடியில் வெளுத்து வாங்குகிறார்கள் அனைவரும். சந்தானபாரதி, கோவைசரளா, வையாபுரி, ரமேஷ் அர்விந்த், நாசர் என்று அனைவரும் கமலுடன் சேர்ந்து நகைச்சுவை விருந்தே பரிமாறுகிறார்கள். வசனகர்தாவாக புகுந்து விளையாடியிருக்கும் கமலுக்கு இதற்காகவே பெரிய பாராட்டுவிழா எடுக்கவேண்டும். அதிலும் இவ்வளவு நாட்களாக வில்லனாகவே மிரட்டி வந்த பசுபதியும் கூட இதில் கிட்டத்தட்ட காமெடியன் ரேஞ்சிற்கு நடித்திருப்பதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. நாசர் தனது மகளின் திருமணத்திற்கு நடுவே தன் செட்டப்பான மனீஷாவின் மகனைக் காப்பாற்றச் செய்யும் முயற்சிகளைப் பார்த்து - சிரித்து வயிறு புண்ணாகிறது. முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் கமல் நடத்தும் வார்த்தை விளையாட்டு சூப்பர்.

படமே நகைச்சுவை படம் என்பதால் கதைக்கு பெரிய அளவில் கமல் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது தெளிவாகப் புரிகிறது. சில விஷயங்களை ஒருவரியில் சொல்லி முடித்துவிடுகிறார். அதைப் போலவே பணத்திற்காக எதையும் செய்யத் துணிந்த பெண்களாக மனீஷாவையும் கோவை சரளாவையும் காட்டியிருப்பதும் யதார்த்தமாக இருந்தாலும் கடைசியில் மனீஷா கமலைத் திருமணம் செய்யச் சம்மதிப்பது அவரது நல்ல மனதிற்காகவா அல்லது அவரிடம் இருக்கும் பணத்திற்காகவா என்ற கேள்வி மனதை நெருடுகிறது.

நகைச்சுவை கதைக்கு பாடல்கள் எதற்கு என்று முடிவுசெய்தார்களோ என்னவோ, படத்தில் பாடல்கள் மிகக் குறைவு. இசை இளையராஜா என்றால் நம்ப முடியவில்லை. இளையராஜாவின் பேவரிட்டான பின்னணி இசையும் இந்தப்படத்தில் பிரமாதமாக இல்லை. மேலும் புதுமையான டிஜிடல் தொழில் நுட்பமும் சில இடங்களில் தகறாரு செய்துள்ளதை தவிர்க்க கமல் முயற்சி செய்திருக்கலாம்.  மற்றபடி கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு என்று கமல் கலக்கியிருக்கிறார். இவரது காமெடி கலக்கல் வரிசையில் மும்பை எக்ஸ்பிரஸ¤க்கு நிச்சயம் ஒரு தனியிடம் உண்டு.

Copyright © 2005 Tamiloviam.com - Authors