தமிழோவியம்
திரைவிமர்சனம் : கூடல் நகர்
- மீனா

குடும்ப சூழ்நிலையால் இளம் வயதிலேயே தகப்பனை இழக்கும் இரட்டையர்களான பரத்தை (அண்ணன் சூர்யன் தம்பி சந்திரன்  - இருவேடம்) அம்மா இந்து கஷ்டப்பட்டு வளர்க்கிறார். பெரியவர்களானதும் சூர்யன் ஒரு நூலகத்தில் வேலைக்குச் சேர - சந்திரன் மருத்துவமனை பிணக்கிடங்கில் வேலைக்குச் சேர்கிறார். வேலைச் சூழ்நிலை காரணமாக குடிகாரனாகும் சந்திரனைத் திருத்த படாதபாடு படுகிறார்கள் சூரியனும் அம்மா இந்துவும். பயன் என்னவோ பூஜ்ஜியம்..

தானுன்டு தன் வேலையுண்டுனு இருக்கும் அப்பிராணி சூர்யன்  ஒரு கட்டத்தில் உள்ளூர் அரசியல்வாதியின் bharath, bhavanaமகளான பாவனாவைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். அதே நேரத்தில் தன் சக குடிகாரரான லஷ்மனின் மகள் சந்தியாவைக் காதலிக்கிறார் சந்திரன். அண்ணன் பெரிய வீட்டுப் பெண்ணைக் காதலிப்பதை அறிந்து அவரை எச்சரிக்கை செய்கிறார் சந்திரன். இதைக் கண்டுகொள்ளாமல் காதல் ஜோடிகள் சுதந்திரமாகத் திரிய - அதைப் பார்த்துவிடுகிறார் மகாதேவன். ஜாதி மற்றும் அந்தஸ்து பார்க்கும் மகாதேவன் தன் மகள் பரத்தைக் காதலிப்பது தெரிந்ததும் சூர்யனைக் கொலை செய்ய திட்டம் தீட்டி அதில் வெற்றியும் பெறுகிறார். அண்ணனைக் கொன்றவரை தம்பி எப்படி பழிவாங்குகிறார் என்பதே மீதிக்கதை.

Bharath, Sandhyaமுதன்முதலாக இரட்டை வேடம் பரத்திற்கு. தோற்றத்தில் எந்த வித்தியாசத்தையும் காட்ட முயலாதவர் நடிப்பில் கொஞ்சம்  வித்தியாசத்தைக் காட்டியிருப்பது ஆறுதல் அளிக்கிறது. அண்ணனை காட்டிலும் தம்பி பரத் நன்றாக இருக்கிறார். சந்தியாவின் மனசில் இடம் பிடிக்கவேண்டும் என்பதற்காக அவருக்கு உதவி செய்வதுபோல் பில்டப் செய்யும்போதும், மருத்துவமனை கம்பவுண்டர் என்று ரீல் விட்டுவிட்டு சந்தியாவிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் போதும் சூப்பர். அண்ணன் இறந்தவுடன் உள்ளுக்குள் பொங்கும் வெறியை சாமர்த்தியமாக மூடி மறைத்து சமயம் பார்த்து எதிரியை வீழ்த்துவது அருமை.

பணக்கார வீட்டுப் பெண்ணாக - பாந்தமாக வரும் பாவனாவிற்கு பெரிய அளவில் நடிக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும் கிடைத்த நேரத்தில் தன் திறமையை வெளிக்காட்டி அசத்துகிறார். தம்பி பரத்தின் ஜோடியாக வரும் சந்தியா தன் துடுக்கு நடிப்பால் கவர்கிறார். கல்யாண வீட்டில் இரவல் நகைகளை மாட்டிக்கொண்டு செய்யும் அலும்பல்களில் அசத்துகிறார்.

சாதாரண வில்லனாக மகாதேவன். நல்லவன் போல் நடித்து கழுத்தறுப்பதைத் தவிர புதிதாக ஒன்றும் இல்லை. அம்மாவாக வரும் இந்துவும் சந்தியாவின் அப்பாவாக வரும் லஷ்மனும் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்கள்.

சபேஷ் - முரளி இசையில் பாடல்கள் சுமார். படத்தில் பெரிய பலம் ஒளிப்பதிவாளர் எம்.எஊ.பிரபு. மதுரையையும் மதுரை சார்ந்த இடங்களையும் அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.

பரத்துக்கு இரு வேடங்களை குழப்பம் இல்லாமல்  அமைத்த இயக்குனர் சீனுராமசாமி பெரிய இடத்துப் பெண்ணை காதலிக்கும் சாதாரண குடும்பத்து வாலிபன் - வில்லனாகும் பெண்ணின் தந்தை - அண்ணனைக் கொன்றவனைப் பழிவாங்கும் தம்பி என்ற பழைய பார்முலாவை கொஞ்சம் கூட விடாமல் படம் முழுக்க கெட்டியாகப் பிடித்துக் கொண்டது படத்தின் பெரிய குறை. கடைசி இருப்பது நிமிடங்களில் திரைக்கதையில் காட்டியிருக்கும் நேர்த்திக்கு மட்டும் அவரைப் பாராட்டலாம். மற்றபடி கூடல் நகரில் பரத்தின் இரட்டை வேடத்தைத் தவிர்த்து  ரசிக்க ஒன்றும் புதிதாக இல்லை.

Copyright © 2005 Tamiloviam.com - Authors