தமிழோவியம்
தராசு : மனநோயாளி போர்வையில் கிரிமினல்
- மீனா

Pramod Mahajanஇரண்டு நாட்களுக்கு முன்பு சொந்த சகோதரனால் சொத்து தகராறு காரணமாக சுடப்பட்டு இன்னமும் அபாய கட்டத்தைத் தாண்டாத நிலையில் இருப்பவர் பா.ஜனதா கட்சியின் மிக முக்கிய பிரமுகர்களில் ஒருவரான பிரமோத் மகாஜன். இந்த விவகாரத்தில் போலீஸில் சரணடைந்து இருக்கும் இவரது சகோதரர் பிரவீண் மகாஜனின் வழக்கறிஞர் "பிரவீண் மகாஜன் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.. அதனாலேயே தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் இந்தக் காரியத்தைச் செய்துவிட்டார்.." என்று கூறியுள்ளார்.

பிரவீண் மகாஜன் மட்டுமல்லாமல் கொலை, கற்பழிப்பு என்று பல தவறுகளைச் செய்யும் பணக்கார கிரிமினல்கள் எல்லோரையும் அவர்களது வக்கில்களில் பெரும்பாலானவர்கள் இதைச் சொல்லியே தண்டனையிலிருந்து தப்ப வைக்கிறார்கள். "என் கட்சிக்காரருக்கு மன நோய். தான் என்ன செய்கிறோம் என்பதை அவர் அறியவில்லை.. எனவே தன்னை அறியாமல் நிகழ்ந்த ஒரு சம்மவத்திற்கு அவர் எவ்வாறு பொறுப்பாவார்? எனவே அவரை விடுதலை செய்யுங்கள்.." இதுவே பெரும்பாலான வழக்கறிஞர்களின் வாதம்..

உண்மையிலேயே இவர்கள் மனநோயாளிகளா என்பதை ஆய்வு செய்ய நீதித்துறையை விடுவதே இல்லை இவர்களது வழக்கறிஞர்கள். அப்படியே ஏதாவது ஒரு மருத்துவமனையில் பரிசோதனை செய்து மருத்துவர் சம்மந்தப்பட்டவரது உடல் நிலை பற்றிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டாலும் இந்த வழக்கறிஞர்கள் ஏதாவது ஒரு வழியில் மருத்துவ அறிக்கையை மாற்றிவிடுகிறார்கள்..

தன் சுயநினைவை முற்றிலும் இழந்து நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு தனிமையில் வாடும் உண்மை மனநோயாளிகள் எங்கே? தான் தெரிந்தே செய்த குற்றத்திற்கான தண்டனையிலிருந்து தப்பிக்க மனநோயாளி வேஷம் போடும் இத்தகைய கிரிமினல்கள் எங்கே?? தற்போதைய சட்டத்துறையிலும் சமூகத்திலும் இத்தகைய போலி மனநோயாளிகளுக்கு எவ்வித தண்டனையும் இல்லை என்றாலும் மனநோயாளி என்ற போர்வையில் ஏதாவது ஒரு குற்றத்திலிருந்து தப்பித்த ஒருவர் ஒரு குறுகிய கால அவகாசத்தில் நோயிலிருந்து தான் மீண்டுவிட்டதாக கூறிக்கொண்டு நாடகமாடினால் அவரை எவ்வித விசாரணையுமின்றி தண்டிக்க நாட்டில் ஒரு புது சட்டம் இயற்றவேண்டும். அப்போதுதான் இத்தகைய சந்தர்பவாத மனநோயாளிகளை சமூகத்திற்கு நாம் அடையாளம் காட்ட இயலும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors