தமிழோவியம்
உள்ளங்கையில் உலகம் : தகவல் பரிமாற்றம்
- எழில்


செல்பேசிக்கும் தள நிலையத்திற்குமிடையே தகவல் தொடர்பு தொடர்ச்சியாக (Continuous) நிகழாமல் 577 மைக்ரோ வினாடிகள் கொண்ட சிறு சிறு பொதிகளாக (inpackets) நிகழ்கிறதென்று சென்ற பதிவில் பார்த்தோம். இந்த 577 மைக்ரோ வினாடிகளுக்குள் 158 பிட்கள் (Bits) அனுப்ப/பெறப் படுகின்றன.ஆக, ஒரு பொதி (Packet) என்பது 577 மைக்ரோ செகண்டு அளவுள்ள , 158 பிட்கள் கொண்ட ஒரு சுமை. செல்பேசிக்கும் தள நிலையத்திற்குமிடையே தகவல் பரிமாற்றம் நிகழ்கையில் எந்த மாதிரியான தகவல்கள் அனுப்ப/பெறப் படுகின்றன? ஒரு பொதிக்குள் அனுப்பப் படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இத்தகவல்களை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று தரவு (Data) மற்றொன்று  குறிப்பு (Signal). ஆக, ஒரு பொதியுள் தரவு அனுப்பப் படுகிறது என்றால் , அது தரவுத் தடம்(Data Channel) அல்லது போக்குவரவுத்தடம் (Traffic Channel) ; அதனுள் ஏதேனும்
குறிப்பு அனுப்பப் படுகிறது எனில் அது குறிப்புத்தடம்(Signalling Channel) அல்லது கட்டுப்பாட்டுத் தடம் (Control Channel).

தரவுத்தடத்தில் என்னென்ன அனுப்பலாம்? பேச்சு(voice), தொலைநகல்(fax), தரவு (data) ஆகியவற்றைச் சுமந்து செல்லுவதற்கு தரவுத்தடம் பயன்படுகிறது. இவற்றை அனுப்புவதற்கு முன் ,ஏற்படுத்தும் இணைப்பு குறிப்புத்தடம் ஆகும். செல்பேசி ஒரு அழைப்பு ஏற்படுத்த வேண்டுமெனில் அது தள நிலையத்தைத் தொடர்பு கொண்டு, "எனக்கு ஒரு நேரத்துண்டு வேண்டும், நான் ஒரு அழைப்பு ஏற்படுத்த வேண்டும், அது இந்த எண்ணிற்கு" என்று சொல்லுவது இந்தக் குறிப்புத் தடத்தில் தான்.

கவனிக்கப்பட வேண்டிய விஷயம், ஒரெ செல்பேசிக்கு ஒரு நேரத்துண்டு வழங்கப்படுகிறது எனில் அந்த ஒரு நேரத்துண்டைத் தான் இந்த இரண்டு தடங்களும்  பயன்படுத்திக்கொள்கின்றன. தனித்தனி நேரத்துண்டுகள் அளிக்கப்படுவதில்லை. உதாரணமாய், ஒரு நேர வரையறையின்(Time period) ஏழாவது துண்டு ( time slot) ஒரு செல்பேசிக்கு வழங்கப்படுகிறது என்போம். அந்த நேரத்துண்டில் முதலில் குறிப்புத்தகவல்கள் அனுப்பப்படும். குறிப்புத்தகவல்கள் அனுப்பி முடிந்ததும் அதே நேரத்துண்டில் தரவுத்தடத்தின் தகவல்கள் (பேச்சு) அனுப்பப் படுகிறது. இதைக் கொண்டு, நேரத்துண்டை பருமநிலைத்தடம் (Physical Channel) என்றும்  அந்த நேரத்துண்டில் அனுப்பப் பெறும் தகவல்கள் ( தரவு அல்லது குறிப்பு)  ஏரணத்
தடம் (Logical Channels) என்றும் அழைக்கலாம். குழப்புகிறதா? சரக்கு ரயிலில் வரிசையாய்ப் பல பெட்டிகள் தொடர்ந்து வருவதைக் கவனித்திருப்போம். எல்லாப் பெட்டிகளும் ஒரே மாதிரித்தான் தோன்றுகிறது. ஒவ்வொரு பெட்டியையும் பருநிலைத்தடம் என்போம் (Physical Channel). அந்தப் பெட்டிகளுக்குள் என்ன இருக்கிறது? நிலக்கரி இருக்கலாம், உணவுப்பண்டங்கள் இருக்கலாம் அல்லது வேறு ஏதாவது பொருள் இருக்கலாம். அது சுமந்து செல்லும் பொருளை வைத்து அந்தப் பெட்டியை வகைப்படுத்தலாம்  அல்லவா? அவ்வாறு
வகைப்படுத்தலே ஏரணத்தடம் (Logical Channel). ஏரணத்தடத்தில் பல வகைகள் உண்டு. ஒவ்வொன்றாய்க் காணலாம்.

* போக்குவரவுத்தடம் (Traffic Channal, TCH) : முன்பே குறிப்பிட்ட படி பேச்சு, தொலைநகல் அனுப்பப் பயன்படுவது இத்தடமாகும்

* கட்டுப்பாட்டுத்தடங்கள் (Control Channels CCH): இவை நான்கு வகைப்படும்.

1. அலைபரப்பித் தடங்கள் ( Broadcast Channels , BCH)
2. பொதுவான கட்டுப்பாட்டுத்தடங்கள் ( Common Control Channels ,CCCH)
3. தனித்த கட்டுப்பாட்டுத்தடங்கள் ( Dedicated Control Channels DCCH)
4. உப கட்டுப்பாட்டுத்தடங்கள் ( Associated Control Channels ACCH)

1. அலைபரப்பித் தடங்கள் ( Broadcast Channels , BCH) : இந்த வகையான தடங்களை தள நிலையம் மட்டும் பயன்படுத்துகிறது, செல்பேசி இத்தகைய தடங்களை  உபயோகப்படுத்துவதில்லை. ஒரு கைத்தொலைபேசி இயக்கப்பட்டவுடன் (Powered ON) அதற்குத்தேவையான தகவல்களை அறிவிப்பதற்காக இந்தத்தடங்கள்  தள நிலையத்தால் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகைத்தகவல்கள் ஒரு தள நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள அல்லது இணைய விரும்புகிற எல்லாச் செல்பேசிகளுக்கும் பொதுவானது. இத்தகைய தகவல்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ,தொடர்ச்சியாகத் தள நிலையத்தால் ஒலிபரப்பப் படுகின்றன. உங்களது செல்பேசி எல்லா நேரங்களிலும் இந்தத் தகவல்களைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கும். மூன்று வகையான அலைபரப்பித்தடங்கள்:

(அ) அலைபரப்புக் கட்டுப்பாட்டுத் தடம் (Broadcast Control Channel  BCCH) : இந்தத்தடத்தின் மூலமே ஒரு தள நிலையம் தன்னைப்பற்றிய தகவல்களை செல்பேசிக்குத் தெரியப்படுத்துகிறது. அந்தத் தள நிலையத்தின் இருப்பிடம், எந்த நெட்வொர்க்கைச் சேர்ந்த தள நிலையம்    ( ஏர்டெல்லா, பிபிஎல்லா என்று) , அருகிலுள்ள அதே நெட்வொர்க்கைச் சேர்ந்த மற்ற தள நிலையங்கள் எந்தெந்த அதிர்வெண்ணில் இயங்குகின்றன என்பதைப்பற்றியெல்லாம் தெரிவிப்பது இதன் வேலையாகும்.

( ஆ) அதிர்வெண் ஒழுங்குபடுத்துத் தடம் ( Frequency Correction Channel FCCH) : ஒரு தள நிலையம் எந்த அதிர்வெண்னில் இயங்குகிறது என்று செல்பேசிகளுக்குத் தெரியப்படுத்த இந்தத் தடத்தில்தான் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

(இ) ஒத்திசைவுத்தடம் ( Syncronisation Channel SCH): அதிர்வெண் ஒழுங்குபடுத்துத்தடம் எவ்வாறு ஒரு தள நிலையத்தின் அதிர்வெண் பற்றிய தகவல்களை அளிக்கிறதோ அதுபோல ஒரு தள நிலையத்தின் நேரத் தகவல்களை ஒலிபரப்ப இந்த ஒத்திசைவுத்தடம் பயன்படுகிறது. செல்பேசிகள் தகவல்கள் அனுப்புவது சிறு சிறு நேரத்துண்டுகளில் என்று பார்த்தோமல்லவா? இவையனைத்தும் ஒரு நேர வரையறைக்குட்பட்டு (Time period)இயங்குகின்றன. எனவே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தள நிலையம் எந்த நேரச் சட்டத்தில் (Time Frame) இருக்கிறது
என்பது குறித்த தகவல்கள் இந்த ஒத்திசைவுத் தடத்தில் ஒலிபரப்பாகின்றன. இதில் வரும் தகவல்களைக் கொண்டே செல்பேசி தன்னைத் தள நிலையத்துடன்  நேர ஒத்திசைவு (Time Synchronized) செய்து கொள்கிறது.

2. பொதுவான கட்டுப்பாட்டுத்தடங்கள் ( Common Control Channels ,CCCH): ஒரு செல்பேசிக்கும் தள நிலையத்திற்கும் தகவல் பரிமாற்றம் நிகழ்வதற்கு முன் ஒரு  இணைப்பு ஏற்படுத்தப் பட வேண்டுமல்லவா?  அந்த இணைப்பை ஏற்படுத்த இந்தப் பொதுக் கட்டுப்பாட்டுத் தடங்கள் பயன்படுகின்றன. மூன்று வகையான பொதுக் கட்டுப்பாட்டுத் தடங்கள் உள்ளன.

அ) தற்போக்கு அணுகல் தடம் (Random Access Channel, RACH) :  இது செல்பேசியால் பயன்படுத்தப்படும் தடம். தள நிலையம் இதனைப் பயன்படுத்துவதில்லை.ஒரு செல்பேசி தனது மௌன நிலை(Idle mode)யிலிருந்து எழுந்து , தகவல் அனுப்புவதற்கு (அதாவது ஏதாவது ஒரு எண்ணை அழைக்க) "ஒரு தடம் ( நேரத்துண்டு ) வேண்டும்" என்று தள நிலையத்தைக் கேட்பது இந்தத் தடத்தில்தான்.

ஆ) அணுகல் அனுமதித் தடம் (Access Grant Channel ,AGCH) : இது தள நிலையம் மட்டும் பயன்படுத்தும் ஒரு தடம். செல்பேசியிலிருந்து தற்போக்கு அணுகல் தகவல் (Random access message) கிடைத்ததும் , "சரி, இந்த நேரத்துண்டினைப் பயன்படுத்திக்கொள்" என்று  செல்பேசிக்கு ஒரு தடத்தை அளிப்பதற்கு இந்த அணுகலனுமதித் தடம் பயன்படுகிறது.

இ) பக்கமாக்குத் தடம் (Paging Channel PCH) :  இந்தத் தடமும் தள நிலையம் பயன்படுத்துவது. ஒரு தள நிலையத்திலிருக்கும் செல்பேசியை யாராவது அழைக்கிறார்கள் என்று கொள்வோம். அப்போது அந்த அழைப்பானது தள நிலையத்தை அடைகிறது. தள நிலையத்திற்கு அந்தச் செல்பேசி சரியாக எந்த இடத்தினுள் (அந்தத் தள நிலைய எல்லைக்குள்) இருக்கிறது என்று தெரியாத காரணத்தினால் ஒரு பொதுவான தகவலை அனுப்புகிறது. அந்தத் தகவல் அனுப்ப பக்கமாக்குத்தடம் அவசியமாகிறது.  பக்கமாக்குத் தடம் மூலமே " யாருப்பா அது 984013989, உனக்கு ஒரு குறுந்தகவல் (அல்லது அழைப்பு ) இருக்கு" என்று ஒரு தகவலை தள நிலையம் எல்லாச் செல்பேசிகளுக்கும் அலை பரப்புகிறது. ஒரு தள நிலையத்திலுள்ள எல்லாச் செல்பேசிகளும் இந்தத் தகவலைப் பெற்றாலும் அந்த குறித்த செல்பேசி மட்டுமே இத்தகவல் தனக்கு என்று அறிந்து , தள நிலையத்தைத் தொடர்பு கொள்ளும்.

3) தனித்த கட்டுப்பாட்டுத்தடங்கள் ( Dedicated Control Channels DCCH) : சரி, ஒரு செல்பேசி ஒரு அழைப்பு ஏற்படுத்த விரும்புகிறது (செல்பேசி விரும்புகிறது என்றால் தானாக அல்ல; இங்கு செல்பேசியின் விருப்பம் என்பது பயன்படுத்துபவரின் விருப்பத்தைக் குறிக்கிறது) . தள நிலையத்துடன் தொடர்பு கொண்டு தனக்கு ஒரு நேரத்துண்டு வேண்டுமாய்க் கேட்கிறது. தள நிலையமும் ஒரு நேரத்துண்டை ஒதுக்கிவிடுகிறது என்போம். பின்னர் நடைபெறும் குறிப்புத்தகவல்கள் இந்த தனித்த கட்டுப்பாட்டுத்தடத்தில் அனுப்பப்பெறும்.
இதில் வரும் தனி நிலை கட்டுப்பாட்டுத் தடம் (Stand Alone Dedicated Control Channel SDCCH) தான் எல்லாவிதமான குறிப்புத்(Signalling) தகவல்கள் மற்றும் கட்டுப்பாட்டுத்(Control) தகவல்களைச் சுமந்து செல்கிறது. உதாரணமாய், ஒரு எண்ணை அழைப்பது, எதிர்முனையில் மணியடித்தால் அதனை இம்முனைக்குச் சொல்வது ( "ரிங் போகுதுப்பா") அழைத்த எண் உபயோகத்திலிருந்தால் அதனைத் தெரிவிப்பது ( "நம்பர் பிஸி") போன்ற அனைத்துத் தகவல்களும் இந்தத் தடத்தில் தான்  நடைபெறுகிறது. செல்பேசியும்
தள நிலையமும் இத்தடத்தைப் பயன்படுத்துகின்றன.

4) உப கட்டுப்பாட்டுத்தடங்கள் ( Associated Control Channels ACCH): இவையும் கட்டுப்பாட்டுத்தகவல் அனுப்பப் பயன்படும் தடங்களே. ஆனால் இவை தனியாக வருவதில்லை. போக்குவரவுத்தடத்தைத் தொடர்ந்தோ (Traffic Channel) அல்லது  தனி நிலை கட்டுப்பாட்டுத் தடத்தினைத் (SDCCH) தொடர்ந்தோ வரக்கூடியவை.இவை மெதுவான உப கட்டுப்பாட்டுத் தடம் (Slow Associated Control Channel SACCH) என்றும் வேகமான உப கட்டுப்பாட்டுத் தடம்(Fast Associated Control CHannel FACCH) என்றும் இரு வகைப்படும். இந்தவகைத் தடங்களின் உபயோகங்களைப் பற்றி இனி வரும் பதிவுகளில் காண்போம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors