தமிழோவியம்
கட்டுரை : IPL காலி மைதானம்
- ச.ந. கண்ணன்

 

தென் ஆப்பிரிக்காவில் நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் போட்டிகள் 20-20-யின் அடையாளத்தைப் பிரதிபலிப்பதாக அமையவில்லை. இதுவரை.

கிரிக்கெட் என்றால் இருதரப்புக்கும் (பேட்ஸ்மேனுக்கும் பந்து வீச்சாளருக்கும்) நியாயம் சேர்க்கும் விதமாகத்தான் இருக்க வேண்டும். சென்றமுறை இந்தியாவில் நடந்த ஐபிஎல் போட்டிகள் அநியாயத்துக்கு பேட்ஸ்மேனுக்கு சாதகமானதாக இருந்தன. சொல்லப்போனால் 20-20-ன் ஸ்தூல வடிவமே  ஃபோர்களாலும்  சிக்ஸர்களாலும் கட்டமைக்கப்பட்டதுதான். சொற்ப ரன்களில் எந்த அணியாவது ஆட்டம் இழக்கும்போது அது ரசிகர்களிடையே அசுவாரசியத்தைக் கொண்டுவந்துவிடுகிறது. ரசிகர்கள் மைதானத்துக்கு வருவது சிக்ஸர் வாணவேடிக்கைகளை வாயைப் பிளந்து பார்ப்பதற்கு. டிவி முன்னால் அமர்பவர்களும் அதே நேர்க்கோட்டில்தான் ஆட்டத்தை அணுகுகிறார்கள்.  சென்றவருடம் பெங்களூருவில் நடந்த ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் மெக்கலம் 13 சிக்ஸர்கள் அடித்து ஐபிஎல்-க்கு அழகான அறிமுகம் கொடுத்தார். 2007ல் தென் ஆப்பிரிக்காவில் நடந்த 20-20 உலகக்கோப்பைப் போட்டியிலும் முதல் ஆட்டத்தில் கேலே செஞ்சுரி அடித்து பரபரப்பான துவக்கத்தை அளித்தார்.

ஆனால் ஐபிஎல் 2 ல் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் எதுவும் நிகழவில்லை. ஒவ்வொரு ஆட்டமும் சோம்பல் முறிக்கிறது. இந்த ஐந்து நாள்களில் சொல்லிக்கொள்ளும்படியாக ஒரு ஆட்டம்கூட பெரிய அளவில் ரசிகர்களைப் பரவச நிலைக்குக் கொண்டு செல்லவில்லை. மந்திரா பேடிகூட முன்பு பார்த்த மாதிரி இல்லை. இன்று மழை வருமா வராதா என்று டாஸ் வேறு போடவேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம் கங்குலியாவது ஏதாவது பேசித் தொலைத்து சூட்டைக் கிளப்பியிருக்கவேண்டும். அதுவும் நிகழவில்லை.

முந்தைய 20-20 போட்டிகளில் மெக்கல்லம், கேலே, யுவ்ராஜ் போன்ற வீரர்கள் வழங்கிய முத்திரை ஆட்டங்களுக்கு மாற்றாகப் புதிய விளாசல் எதுவும் நிகழவில்லை. இந்த ஐபிஎல் ஆட்டங்களைப் பார்க்காவிட்டால்தான் என்ன என்கிற மனநிலைக்குக் கொண்டுவந்துவிட்டார்கள். ஆதாரமாக, சென்ற வருடம் ஐபிஎல் தொடங்கியவுடன் இந்தியாவில் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் அதன் பாதிப்புகள் தென்பட ஆரம்பித்தன. அரங்கம் பாதிகூட நிரம்பாததைக் கண்டு பல படங்கள் ஐபிஎல் முடியட்டும் என்று பின்வாங்கின. ஆனால் இந்தவருடம் இதுவரை அப்படியொரு பாதகம் எதுவும் திரைத்துறைக்கு ஏற்படவில்லை. சென்னை சத்யம் திரையரங்கில் தொடர்ந்து அயன் ஜேஜே என்று ஓடிக் கொண்டிருக்கிறது. அதைப் பார்த்து இந்த வாரம் புதிதாக 3 படங்கள் வெளியாகின்றன.
 
தென் ஆப்பிரிக்கா மீது முழு பழியையும் போடமுடியாது. முடிந்தவரை எல்லா ஆட்டங்களுக்கும் எட்டாயிரம் ரசிகர்கள் வருகிறார்கள். ஆனால் இந்திய ரசிகர்களிடையே தென்பட்ட மயக்கநிலை தெ.ஆ ரசிகர்களிடையே மருந்துக்கூட இல்லை. சிக்ஸர் அடித்தால் கழுத்தை லேசாக அசைத்து அண்ணாந்து பார்க்கிறார்கள். கிரிக்கெட்டை டிவி சீரியல் பார்ப்பதுபோல புல்தரையில் கால் நீட்டி அமர்ந்துகொண்டு அசையாமல் ரசிக்கப் பழகியிருக்கிறார்கள். காலியான மைதானத்தில் ஆடும் உணர்வே வீரர்களிடம் தென்படுகிறது. இதே கடந்த வருடம் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் குறைந்தது 40,000 ரசிகர்கள் கிடைத்தனர். இன்னும் சில நாள்களில் பிளிண்டாப்பும் பீட்டர்சனும் ஐபிஎல்-லிருந்து தங்களை விலக்கிக்கொண்டு நாட்டுப்பணி செய்யக் கிளம்பி விடுவார்கள். அப்போது ஐபிஎல் மேலும் தன் பளபளப்பை இழக்க நேரிடும். 

20-20 உலகக்கோப்பையின்போது இப்படியொரு நெருக்கடி ஏற்பட்டது. துக்கடா போட்டிதானே என்று பல முன்னணி வீரர்கள் ஓய்வு எடுத்துக்கொண்டனர். தெண்டுல்கர், திராவிட், கங்குலி ஆகியோர் சின்னப் பசங்களை அனுப்பிக் கொள்ளுங்கள் என்று வாரியத்திடம் சொல்லிவிட்டனர். இந்தியா போல பல அணிகளும் நிறைய புது வீரர்களை அல்லது டிராப் செய்த வீரர்களை பரிசோதனை முயற்சியாக அப்போட்டிக்கு அனுப்பி வைத்தது. இந்தியா, கேப்டன் பதவிக்கே அப்படியொரு சோதனை ஓட்டம் செய்து பார்த்தது. ஆனால் எந்த ஒரு வீரரை நம்பியும் கிரிக்கெட் இல்லை என்பது அப்போது முழுமையாக ஊர்ஜிதமானது.  20-20 உலகக்கோப்பை ரசிகர்களிடையே ஓர் எழுச்சியை உருவாக்கியது. எண்ணிப் பார்க்காத விதத்தில் போட்டி பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக முடங்கிக் கிடந்த இந்தியக் கிரிக்கெட்டை எழ வைத்து ரேஸ் கார் வேகத்தில் முடுக்கி விட்டது. அதுவரை 202-0 போட்டிகள் என்றாலே முகத்தைத் திருப்பிக்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் வாரியம் முதல்முறையாக 20-20 மீது காதல் கொண்டது. அதற்கு முன்னால், 20-20 யா ஐய்யே அதெல்லாம் கிரிக்கெட் கிடையாது என்று சொல்லிவந்தது இந்தியா. எல்லா நாடுகளும் 202-0- ஆட ஆரம்பித்தபோதுதான் வேறுவழியின்றி முனகிக்கொண்டே ஆடப்பழகியது. 20-20 உலகக்கோப்பை மட்டும் மேற்கு இந்திய தீவில் நடந்த 2007 ஒருநாள் உலக்கோப்பைபோல உப்புச்சப்பின்றி முடிவடைந்திருந்தால் ஐபிஎல் தோன்றியிருக்க வாய்ப்பே இருந்திருக்காது.

சரி, கொஞ்சம் விட்டுப் பிடிப்போம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors