தமிழோவியம்
பேட்டி : நடிகர் சரத்குமார் பேட்டி
- திருமலை கோளுந்து

Sarathkumar, Jayalalithaநடிகர் சரத்குமார் தி.மு.க.வில் இருந்து அ.தி.மு.க.விற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறங்கி தென் மாவட்டங்களில் கலக்கி வருகிறார். பலத்த முயற்சிக்குப் பின் அவருடன் தமிழோவியத்திற்கு பேச வாய்ப்பு கிடைத்தது. எந்தக் கேள்வி கேட்டாலும் பளீச் சென்று பதில் வருகிறது. அவருடனான நேர்காணல்.

தமிழோவியம் :-  வாழக்கை என்றாலே பல மாற்றங்கள், திருப்பங்கள் இருக்கத் தான் செய்கிறது. உங்கள் வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அ.தி.மு.க.வில் நீங்கள் சேர்ந்ததை சொல்லலாமா?

பதில் :-  எனது உணர்வுகளுக்கு அங்கு மதிப்பு, மரியாதை இல்லை. சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க.வில் உழைத்து இருக்கிறேன். எதையும் எதிர்பார்க்காமல் எனது பங்களிப்பை அளித்து இருக்கிறேன். அதனை அங்கு புரிந்து கொள்ளவில்லை. அ.தி.மு.க.விற்கு நான் வந்ததை எனது நண்பர்கள் உட்பட அனைவருமே வரவேற்கிறார்கள். அ.தி.முக.வில் நான் சேர்ந்ததை முக்கிய திருப்பமாகவே கருதுகிறேன். இங்கு எனக்கு போதிய மதிப்பு, மரியாதை அளிக்கப்படுகிறது என்பதை சொல்லத் தான் வேண்டும்.

தமிழோவியம் :- முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த தருணத்தை சொல்லமுடியுமா ?

பதில் :- தேனியில் முதல்வரை சந்திக்க நானும் எனது மனைவியும் சென்ற பொழுது பரிவுடன், பாசத்துடன் வரவேற்றார். அ.தி.முக.விற்கு நீங்கள் முன்பே வந்திருக்க வேண்டியவர். காலதாமதமாக வந்துள்ளீர்கள் என்றார். அவரது பேச்சில் பாசத்தையும், அன்பையும் நான் உணர்ந்தேன்.

தமிழோவியம் :- நீங்கள் அ.தி.மு.க.வில் இணைந்ததற்கு உங்கள் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றும், ரசிக மன்றத்தில் இருந்து விலகுகிறார்கள் என்று செய்திகள் வருகின்றதே?

பதில் :- தி.மு.க. அதரவு பத்திரிக்கைகள் தான் அப்படிப்பட்ட செய்திகளை வெளியிடுகிறார்கள். எனது மன்றத்தினர் அப்படி எதுவும் செய்வதாக எனக்கு எந்தத் தகவலும் இது வரை வரவில்லை. மாறாக வரவேற்கத் தான் செய்கிறார்கள். சில முக்கிய நிர்வாகிகளை சந்தித்து அவர்களுக்கு பணத்தை கொடுத்து எனக்கு எதிராக பேட்டி கொடு என்று எனது மன்ற நிர்வாகிகளை மிரட்டுகிறார்கள். இப்படி பிரச்சினைகளை கிளப்பி தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பீதிக்குள்ளாக்க நினைக்கிறார்கள். அதற்கு நான் இடம் கொடுக்கப் போவது இல்லை. அவர்கள் செய்வதை செய்து கொள்ளட்டும். நான் முழு வீச்சில் பிரச்சாரத்தில் இறங்கி விட்டேன்.

தமிழோவியம் :- தான் இருக்கும் ஒரு கட்சியில் தனக்கு சாதகமான சூழல் இல்லாவிட்டால் அக்கட்சியில் இருந்து விலகுவது தனி உரிமை. ஆனால் அக்கட்சியின் பலவீனங்களை வெளியே சொல்வதோடு, எதிர்கட்சியில் சேர்ந்து முன்பு இருந்த கட்சியை குறை சொல்வது கூட ஒரு வித சந்தர்ப்பவாதம் தானே?

பதில் :- இப்படி பார்த்தால் இங்கு யாராலும் இங்கு அரசியல் செய்ய முடியாது. சேடப்பட்டி முத்தையா, இந்திராகுமாரி  போன்றவர்களுக்கு எதிராக ஊழல் வழக்கு போட்டதே கலைஞர் கருணாநிதி அரசு தான். ஆனால் அவர்கள் ஏன் அக்கட்சியில் சேர்ந்தார்கள். ஒரு கட்சியின் கொள்கை பிடிக்காவிட்டால் மாற்று கட்சிக்கு செல்வது இயல்பான ஒன்று. இதில் சர்ந்தர்ப்பவாதத்திற்கு இடம் இல்லை. 

தமிழோவியம் :- ஒரு பக்கம் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ. மத்திய அமைச்சர் தயாநிதியை குறி வைத்து பிரச்சாரம் செய்கிறார். நீங்களும் தயாநிதி மீது குற்றம் சொல்கிறீர்கள். அதற்கான காரணங்கள் சொல்ல முடியுமா?

பதில் :- தி.மு.க. இப்பொழுது தயாநிதி முன்னேற்ற கழகமாக மாறி விட்டது. அங்கு ஒர அரசியல் பதவியை பிடிக்க போட்டி தான் நடக்கிறது. தான் முதல்வராக வேண்டும் என்று தயாநிதி நினைக்கிறார். ஆனால் ஸ்டாலின் தான் தான் முதல்வராக வேண்டும் என கணக்கு போடுகிறார். அங்கு ஒரே அதிகார போட்டி நடக்கிறது. தி.மு.க. வளர வை.கோ. என்ன பாடு பட்டிருப்பார் என எனக்கு தெரியும். ஆனால் அவரை மத்திய அமைச்சராக இருக்கும் தயாநிதி மாறன் ஒண்டிக்கு ஒண்டி வர்றியா என்று பேசுகிறார். நாகரிகமே தெரியாத இவர்கள் நாட்டிற்கு தேவை தானா என மக்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டனர்.

தமிழோவியம் :- தமிழகத்தில் டி.வி. பத்திரிக்கை துறையில் கருணாநிதி குடும்பத்தினர் ஆதிக்கத்தினால் ஒட்டு மொத்த பத்திரிக்கைகளும் தி.மு.க.விற்கு எதிராக திரும்பி விட்டன என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில் :- நடு நிலை பத்திரிக்கைகள் எல்லாம் நடுநிலையோடு தான் செயல்படுகின்றன. ஆனால் கருணாநிதி குடும்பத்தினர் தான் ஒட்டு மொத்த டி.வி., பத்திரிக்கை துறையை தங்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையாக மாற்ற துடிக்கிறார்கள். அது போல் எல்லா தொழில்களையும் தாங்களே செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். இது ஒரு சர்வாதிகார போக்கினை காட்டுகிறது.

தமிழோவியம் :- அ.தி.மு.க.விற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறீர்கள். மக்களிடம் வரவேற்பு எப்படி இருக்கிறது?

பதில் :- அ.தி.மு.க. கண்டிப்பாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். மக்களிடம் ஒர எழச்சியை பார்க்கிறேன். தமிழக மக்களின் எதிர்கால தேவையை அறிந்து ஆட்சி நடத்துகிறார் முதல்வர். அ.தி.மு.க. ஆட்சி மக்களின் நலனுக்காக நடத்தப்படம் ஆட்சி. தி.மு.க. நடத்திய ஆட்சி தனது குடும்பத்திற்கு நடத்தப்பட்ட ஆட்சி.

தமிழோவியம் :- மத்தியில் தி.மு.க. சொல்வது தான் நடக்கிறது. தமிழக முதல்வருக்கே நெருக்கடி கொடுத்தவர்கள், நாளை உங்களை விட்டு வைப்பார்களா?

பதில் :- கண்டிப்பாக ஏதாவது செய்வார்கள் என்பது எனக்கு தெரியும். குறிப்பாக வருமான வரி சோதனை நடத்தினாலும் நடத்துவார்கள்.அதனை நான் எதிர்கொள்வேன். என்னிடம் நேர்மை இருக்கிறது. எனது வீட்டில் இருந்து எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு போகட்டும். நான் நெருக்கடிக்கெல்லாம் பயப்பட மாட்டேன்.

தமிழோவியம் :- நீங்கள் கட்சி மாறியதற்கு உங்கள் மனைவி ராதிகாவிற்கு முமு சம்மதமா?

பதில் : அவருக்கு முழு உடன்பாடு உண்டு. எனக்கு ஏற்பட்ட அவமானங்கள் அவரையும் பாதித்து இருக்கிறது. தொழில் செய்து பணம் சம்பாதிப்பதை விட என்னை அதிகமாக நேசிப்பவர் அவர்.

தமிழோவியம் :- தமிழக தேர்தல்களின் முடிவு எப்படி இருக்கும்? ஒரு பக்கம் தி.மு.க. தலைவர் கூட்டணி ஆட்சிக்குத் தயார் என்கிறார். மற்றொரு பக்கம் தனித்தே ஆட்சி அமைப்போம் என்கிறார் முதல்வர். என்ன நடக்கும் என நினைக்கிறீர்கள்?

பதில் :- கூட்டணி ஆட்சி என்று கலைஞர் சொல்வது ஒரு வித தோல்வி பயம் தான். முதலில் கூட்டணி ஆட்சி தேவை என்று சொன்ன இளங்கோவனை கன்டித்து மன்னிப்பு கேட்க வைத்தவர் தான் கலைஞர். என்னைப் பொறுத்தவரை அ.தி.மு.க. தனித்து பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். இது உறுதி.

தமிழோவியம் :- இந்தத் தேர்தலில் ஒரு பக்கம் இலவச டி.வி., நிலம் என்றும் மறுபக்கம் இலவச அரிசி என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இலவசம் என்று சொல்வது ஒரு வகையில் மக்களை ஏமாற்றும் வேலை தானே?

பதில் :- இலவசமாக 10 கிலோ அரிசி முதல்வர் ஜெயலலிதா சொல்லி இருப்பது ஏழை மக்கள் வயிறார சாப்பிட வேண்டும் என்ற நோக்கில் தான். அதே போல இலவச சைக்கிள், இலவச நோட்டு புத்தகம், என்பதை முதல்வர் கொடுத்ததற்கு காரணம் மக்களின் வாழ்வு உயர வேண்டும் என்பது தான். ஆனால் கலைஞர் கருணாநிதி டி.வி. இலவசம் என்று சொல்வதில் ஒரு மர்மம் அடங்கி இருக்கிறது. டி.வி. கொடுத்தால் அவர்களின் சன் டி.விக்குத் தான் லாபம். டி.வி. கொடுப்பதால் ஏழைகளின் வாழ்வு உயர்ந்து விடுமா?

சரத்குமார் தெளிவாக இருக்கிறார். அவரது பிரச்சாரத்தால் தென்மாவட்டங்களில் உள்ள அவரது சமூகத்தை சேர்ந்த வாக்குகளை கணிசமாக அ.தி.மு.க. பக்கம் இழுக்க முடியும் என அ.தி.மு.க.வினர் நம்புகின்றனர். அது மே மாதம் 11 தேதி தெரிந்து விடும். அதன் பிறகு தான் சரத்குமாரின் அரசியல் வாழ்க்கை ஏறு முகமா? அல்லது இறங்கு முகமா என்று தெரியும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors