தமிழோவியம்
கட்டுரை : சிறைவாழ்வு
- லாவண்யா

 
சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்... 

(நன்றி வைரமுத்து)

இந்த உலக வாழ்வே ஒரு சிறை வாழ்வு தான். சிலருக்கு சிறை சற்று பெரியதாக இருக்கும். வீடு, அலுவலகம், உறவுகள், நண்பர்கள் என்று விரியும் அவர்கள் உலகம். ஒரு சிலருக்கு பிறக்க ஒரு நாடு வசிக்க ஒரு நாடென்று அமைந்து விடுகிறது. சிலருக்கு குறிப்பாக சில பெண்களுக்கு வீடு ஒரு சிறையாகும். அதை விட்டு விடுபடுவது அவள் இறப்பே ஆகும். மீன் தொட்டியை கண்டிருக்கிறீர்களா? அதில் நீந்தும் மீன்கள் மிக அழகாக இருக்கும். அவை எல்லாம் மிக சந்தோசமாக இருப்பதுப் போல நமக்குத் தோன்றும். சில சமயம் மெதுவாக நீந்தும், சில சமயம் மின்னல் வேகத்தில் மேலிருந்து கீழாக குதிக்கும். நாம் தருவதை உண்ணும்.  ஒரு சில கொடுத்து வைத்த மீன்கள் சற்று பெரிய தொட்டியில் ஒரு சில உறவுகளோடு காலம் கழிக்கும். ஒரு சில தொட்டிகள் பானை போன்ற வடிவில் சிறியதாக இருக்கும். கடலில் நீந்த தெரிந்தாலும்கூட அந்த அளவான இடத்தில் தான் மீன்கள் உலவ வேண்டும். அதன் வாழ்வு அந்த தொட்டிக்குள் மட்டுமே. மீன் தொட்டி மீன்களுக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நாம் யாவரும் பல காலமாக சிறை வாழ்வே வாழ்கின்றோம். கீழ் வரும் சங்க கவிதையை பாருங்கள்.

கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
அச்சுடைச் சாகாடு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலி தாக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே

உரை

jeyamohanதாழி செய்பவனே! தாழி செய்பவனே! தருமம் நிறைந்த பழைய ஊரின் தாழி செய்பவனே! அச்சில் சுழலும் வண்டிச் சக்கரத்தில் ஒட்டியிருக்கும் சிறிய வெளிறிய பல்லிபோல இவனுடன் பலவிதமான பாதைகள் தாண்டிவந்த என்னிடமும் கனிவுகாட்டுவாயாக. மலர் நிரப்பி மண்ணில் இறக்கப்படும் உறுதியான பெரிய தாழியை இன்னும் பெரிதாக வனைவாயாக.

(நன்றி : ஜெயமோகன் "சங்கச் சித்திரங்கள்")

இந்த கவிதை இறுக்கமான உணர்வு பொருந்தியது.இந்த வரிகளின் வலி உணர பெறுங்கள். எவ்வளவு ஆழமான துயரத்தை வெளியிட்டிருக்கிறாள் அந்த பெண்கவி. என்ன பொருத்தமான ஒரு உதாரணம் பாருங்கள், ஒரு வண்டி சக்கரத்தில் ஒட்டி இருக்கும் பல்லியானது வண்டி செல்லும் இடம் எல்லாம் செல்லும் ஆனால் அதன் வாழ்வு இருக்கும் அதே இடத்தில் மட்டுமே. இப்படி தானே இருக்கின்றது சில பெண்களின் வாழ்வு இன்றும் கூட. மேலும் சொல்கிறாள் அவள் மலர் நிரப்பிய தாழி வனைக, எவ்வளவு ரசனை மிக்கவளாக இருந்திருப்பாள் ஒரு வேளை இனி அவளை கட்டுபடுத்தி சிறை அடைக்க ஆள் இருக்க போவதில்லை என்ற ஆனந்தமா அது? இன்னும் உறுதியான தாழியை சற்று பெரியதாக வனைக... இவ்வளவு இறுக்கமான வாழ்வு அவள் வாழ்திருந்தாள் இறக்கும் போதாவது சற்று விசாலமான இடத்தில் இறக்க வேண்டும் என்று எண்ணி இருப்பாள்.உடன்கட்டை ஏறுவதினும் கொடும் கொடுமை இதல்லாவா?

இப்போது இதற்கு இணையான இன்னும் ஒரு சூழலைப் பார்ப்போம். "புனரபி மரணம் புனரபி ஜனனம்" என்ற ஆதி சங்கரர் பாடல் கேட்டிருக்கின்றீர்களா? கருவிலுள்ள குழந்தைக்கு பிறக்கும் வரை புனர் ஜென்ம சிந்தனை எல்லாம் இருக்குமாம். அப்போது பட்ட அத்துணை துன்பங்களும் நினைவிலிருக்குமாம். அது கடவுளிடம் இந்தப் பிறவி வேண்டாம் என்று இறைந்துக் கேட்குமாம். அதையே வேறு விதமாக நாம் யோசித்தால் அக்குழந்தை இந்த புவிக்கு வரும் முன் "கடவுளே நான் ஒரு மீள முடியாத சிறைக்கு செல்ல இருக்கிறேன், எனக்கு ஒரு நல்ல வீடு, நிறைய சொந்தங்கள், சொத்து எல்லாம் தா, குறைந்த பட்சம் உன்னை அடையும் வரை புவி சிறையை முடிந்த அளவு சுற்றி வருகின்றேன் என்று கேட்பது போல கொள்ளலாம். இக்குழந்தை பிறக்கும் வரை தாய் செல்லும் இடமெல்லாம் செல்லும் ஆனால் அது வாழும் இடமோ தாயின் கருவறையே.

அடுத்த சூழலை வேறு விதமாக மேலே கூறிவிட்டேன். அதுவும் ஒரு பிறப்பு போல தான். திருமணம் முடிவாகி இருக்கும் ஒரு பெண் மனநிலை கூட ஒரு கருவில் உள்ள குழந்தைக்கு ஒப்பிடலாம். தன் கணவன் மற்றும் கணவனை சார்ந்த சொந்தங்களை பற்றிய பயம் கலந்த ஒரு சிந்தனை இருக்கும். அந்த குடும்ப சூழல் பழக்க வழக்கம் எல்லாம் பற்றிய கலக்கம் இருக்கும். ஒரு புது உலகை பற்றிய கனவிருக்கும், ஆனால் அவள் இருக்கும் இடம் தாயின் வீடாக இருக்கும். சிந்தனை அவளை சுற்றியடிக்கும். இதை திருமணம் முடிந்த ஒரு பெண் வாழ்வோடும் ஒப்பிடலாம். இருக்கும் இடம் கணவன் வீடாக இருந்தாலும் சிந்தனை மட்டும் ஒரு வண்டி சக்கரத்தில் ஒட்டி இருக்கும் பல்லி போல தாய் வீட்டையே சுற்றி சுற்றி வரும். தாய் வீட்டில் அதிகாலை சூரியன் அவளை இப்போதும் விழிக்க வைக்கும். தாயோடு இட்ட செல்ல சண்டைகள் இன்று கூட சிணுங்க செய்யும். அப்பல்லி படும்பாட்டை பாருங்கள். தாய் வீட்டு திண்ணையோடு உலவும் தென்றல் எப்போதும் அவளை தாலாட்டும். வீட்டு தோட்டத்தில் உள்ள மல்லிகை செடிகளுக்கும் நினைவால் நீர் வார்க்கப்படும். அங்கே வந்து போகும் பட்டாம்பூச்சிகளின் நலம் விசாரிக்கும் அவள் மனம். மாடிப்படிகளில் அமர்ந்து ரசித்த அடுத்த வீட்டு அவரைக்கொடியின் பூங்கொத்து அவள் எண்ணங்களில் சிறகடிக்கும். மொட்டை மாடியில் பார்த்து கிறங்கிய சாயுங்கால கீழ்வான சிவப்பும் சின்ன புன்னகை பூக்க செய்யும். அவள் படுக்கை அறை ஜன்னல் வழி பார்த்த தென்னங்கீற்றிடை நிலவொளி உள்ளத்தை மயக்கும். எப்போதும் தாய் இடும் மருதாணி இப்போதும் சிவந்திருப்பது போல தோன்றும். சிறு வயதில் பிறந்த நாளுக்கு தலையில் தைத்து கொண்ட மல்லிகை பூக்களை கண்கள் தேடித் தொலைக்கும். பட்டியலிட்டது அவள் நினைவுகளின் ஒரு சிறு பகுதி தான். சொல்லதவதை ஒரு கோடி இருக்கலாம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors