தமிழோவியம்
திரைவிமர்சனம் : பட்டியல்
- மீனா

ரெளடியாக பல கொலைகளைச் செய்யும் ஹீரோ யாருக்காக அத்தனை கொலைகளைச் செய்கிறானோ அவனாலேயே கொல்லப்படுவதுதான் பட்டியல் படத்தின் ஒன்லைன் கதை.

Arya,Padma Priyaஅனாதைகளான ஆர்யாவும் பரத்தும் கொச்சின் ஹனிபாவிற்காக அவர் காட்டுகிற ஆட்களை கொலை செய்யும் உன்னத தொழிலைச் செய்பவர்கள். இதில் ஆர்யா சதா சர்வகாலமும் பாட்டிலும் கையுமாக போதையுடன் திரிபவர். பரத்தோ காது கேட்காத வாய் பேச முடியாத ஊமை. ரெளடியாக கத்தியும் துப்பாக்கியுமாகவே திரியும் இவர்களது வாழ்கையில் வசந்தம் சேர்க்க வருகிறார்கள் பத்மப்ரியா மற்றும் பூஜா. ஆர்யாவை ஒருதலையாகக் காதலிக்கும் பத்மப்ரியா எப்படியாவது ஆர்யாவின் காதலைப் பெறத்துடிக்கிறார். ஆனால் ஆர்யாவோ பத்மப்ரியாவைப் பார்த்தாலே எரிந்து விழும் ரகம். இவர்கள் இப்படி என்றால் மெடிக்கல்ஷாப்பில் வேலை செய்யும் பூஜாவைக் கண்டதும் காதல் கொள்கிறார். பரத்தின் காதலுக்கு சரி சொல்லும் பூஜா பரத்தின் தொழிலைப் பற்றித் தெரிந்தவுடன் அவரை விட்டு விலகுகிறார்.

ஒரு கட்டத்தில் ஆர்யாவும் பரத்தும் தாங்கள் செய்யும் தொழிலிலிருந்து விலகி நல்லவர்களாக வாழ முற்படுகிறார்கள். அப்போது ஹனிபா கடைசியாக தனக்காக ஒரு முக்கிய பிரமுகரை கொல்லச் சொல்கிறார். இதற்கு சரி என்று தலையாட்டும் ஆர்யா மிகுந்த சிரமப்பட்டு பரத்தை சம்மதிக்க வைக்கிறார். இருவரும் ஊருக்கு கிளம்புவதற்கு முன்பாக பத்மப்ரியாவை தான் காதலிப்பதை உணரும் ஆர்யா அதை அவரிடம் சொல்வதற்காக போகும் போது பத்மப்ரியாவை அவரது முதலாளி கெளதம் கற்பழித்த விவரம் தெரியவருகிறது. உணர்சிவசப்பட்டு ஆர்யா கெளதமை கொன்றுவிட, கெளதம் கோஷ்டியினர் ஆர்யாவை கொலை செய்துவிடுகிறார்கள். இதற்கிடையே ஹனிபா குறிப்பிட்ட முக்கிய பிரமுகரை கொலை செய்யும் பரத்தைக் கொல்ல ஹனிபாவே ஆள் அனுப்புகிறார். அனுப்பிய ஆள் கச்சிதமாக வேலையை முடித்துவிடுகிறான். ஹீரோக்கள் இருவருமே காலியாவதுடன் முடிகிறது படம்..

Bharath,Poojaதான் நடித்த மற்ற படங்களிலிருந்து பெரிதும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்கள் பரத்தும் ஆர்யாவும். சரியான முரட்டு குடிகார பாத்திரம் ஆர்யாவிற்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. காதுகேட்காத ஊமை கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார் பரத். என்றாலும் ஆர்யாவின் இறுதி ஊர்வலத்தில் பரத் ஆடும் வெறியாட்டம் கொஞ்சம் ஓவர். 

இந்த இருவரையும் காதலிக்கும் பெண்களாக பூஜா மற்றும் பத்மப்ரியா. பூஜா பரத்தின் நிஜ வேலை என்னவென்று தெரிந்து ஒதுங்கும் போதும் பிறகு கிளைமாக்ஸில் பரத்தின் நிலை கண்டு அழும் தருணங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆர்யாவின் மீது ஒருதலைக் காதல் கொள்ளும் பத்மப்ரியாவிற்கு நடிக்க போதிய சந்தர்ப்பம் தரப்படவில்லையோ என்று நினைக்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது அவர் வரும் காட்சிகள்.

இசை யுவன் ஷங்கர் - ஓக்கே ரகம். ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா வித்தியாசமான லைட்டிங், ஒளிப்பதிவுகளில் அசத்தியுள்ளார். அடிதடி செய்யும் ஹீரோ என்றாலும் கடைசியில் நாயகனின் உடம்பில் ஒரு கீறல் கூட விழாமல் காட்டும் தமிழ் சினிமாக்களில் கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்ற நியதியை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்த்தன். ஆனாலும் கதையில் ஏகப்பட்ட குளறுபடிகள். உதாரணமாக ரெளடியிஸம் தாண்டவமாடும் இடத்தில் ஒப்புக்கு கூட ஒரு போலீஸ் அதிகாரி தலையைக் காணவில்லை. அதைப் போலவே பூஜா பரத் காதல். குளறுபடிகள் இருந்தாலும் இரண்டு ஹீரோக்களை வைத்து - பழைய கதைதான் என்றாலும் அதற்கு ஒரு புதிய மெருகேற்றி காட்டியிருக்கும் இயக்குனருக்கு தைரியம் கொஞ்சம் ஜாஸ்தி தான்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors