தமிழோவியம்
தராசு : பல்டியடிக்கும் தலைவர்கள்
- மீனா

இரண்டு நாட்களுக்கு முன்பாக பா.ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான முக்தார் அப்பாஸ் நக்வி " இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த தலைவர் ஒருவர் தான் அடுத்த தேர்தலில் பா.ஜனதாவை வழிநடத்திச் செல்வார்.." என்று பிரமாதமாக அறிக்கை விட்டிருந்தார். ஆனால் அதற்குள் கட்சியில் என்ன ஆனதோ நேற்று லக்னோவில் நடந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் " அத்வானி தான் எங்கள் தலைவர்.. அவரது தலைமையிலேயே நாங்கள் அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்வோம்.. பா.ஜனதாவில் தலைவர் மாற்றம் குறித்த பேச்சிற்கே இடமில்லை.." என்று காரசாரமாக உரையாற்றியுள்ளார்.

வயது முதிர்ந்த தலைவர்கள் தங்களது வயது மற்றும் உடல் நலனைக் கருத்தில் கொண்டு இளைய தலைமுறையினருக்கு வழிவிட்டு ஒதுங்குகிறார்களே.. அதிசயமான ஆனால் வரவேற்கத் தக்க மாற்றமாக இது இருக்கிறதே! என்று எண்ணி வியப்படைவதற்குள்ளாகவே, 'இல்லை.. இல்லை!! நான் தான் தலைவர்!! நான் இருக்கும் வரை யாரும் தலைவராகவே முடியாது' என்று கூறிக்கொண்டே வயதான பெரியவர் ஓடிவந்து தலைவர் நாற்காலியில் அமர்ந்து கொள்கிறார். இது இப்போது நடந்த விஷயம் மட்டுமல்ல.

தமிழகத்தில் சென்ற முறை நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, கருணாநிதியின் தலைமையின் கீழ் தி.மு.க சந்திக்கும் கடைசிப் பொதுத் தேர்தல் இது!! அடுத்த பொதுத் தேர்தலின் போது நிச்சயமாக ஒரு புதிய தலைவர் தலைமையில் நாங்கள் தேர்தலைச் சந்திப்போம் என்று தி.மு.கழகத்தினர் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறினார்கள். மக்களும் கருணாநிதியின் கடைசித் தேர்தல் என்ற எண்ணத்திலேயே வாக்களித்தார்கள். ஆனால் தற்போது நடப்பது என்ன? அடுத்து வரப்போகும் பொதுத் தேர்தலிலும் கருணாநிதியின் தலைமையில் தான் தி.மு.க தேர்தலைச் சந்திக்கப்போகிறது என்கிறார்கள். பா.ஜனதாவும் இதே நிலையில் தான் இருக்கிறது.

ஆக எந்தக் கட்சியினருக்கும் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க பயம்.. அவர்களது தலைமையில் தேர்தலை எதிர்கொள்ள அச்சம்.. இருக்கும் பழைய முகங்களைக் காட்டியே ஓட்டு வாங்க வேண்டிய கட்டாயம். இதில் முக்கியமான இன்னொரு விஷயம் - தற்போதுள்ள எந்த தலைவருக்கும் " நான் தலைவர் பொறுப்பில் இருந்தது போதும். இளைய சமுதாயமே!! நீ கட்சியைக் கட்டிக் காப்பாற்று!! " என்று சொல்வதில் உள்ள தயக்கம். மக்கள் சம்மந்தப்பட்ட எல்லா அரசு - மற்றும் தனியார் நிறுவனங்களில் ஓய்வு பெறும் வயதை நிர்ணயம் செய்யும் அரசியல்வாதிகள் தாங்கள் கட்சி - மற்றும் பதவியிலிருந்து ஓய்வு பெறப்போகும் வயதை எப்போது தீர்மானம் செய்வார்கள்?

Copyright © 2005 Tamiloviam.com - Authors