தமிழோவியம்
உள்ளங்கையில் உலகம் : நேர முன்னேற்பாடு
- எழில்

ஒரு செல்-லில் நிறைய செல்பேசிகள் இங்குமங்கும் பரவிக்கிடக்கின்றன. சில செல்பேசிகள் தள நிலையத்திற்கு அருகில் இருக்கலாம். ஒரு சில செல்பேசிகள் தள நிலையத்திலிருந்து சற்றுத் தொலைவிலிருக்கலாம். ஒவ்வொரு செல்பேசியும் ஒரு நேரத்துண்டில் தான் தள நிலையத்திற்குத் தகவல் அனுப்புகின்றன என்று கண்டோம். இவ்வாறு தகவல் அனுப்புகையில், தள நிலையத்திற்கு அருகிலுள்ள செல்பேசி அனுப்பும் தகவல் தள நிலையத்திற்கு உடனடியாகக் கிடைத்துவிடும். ஆனால் சற்றுத்தொலைவிலுள்ள செல்பேசி அனுப்பும் தகவல் சற்று நேரங்கழித்தே தள நிலையத்தை அடையும். இப்படி நேர வேறுபாடுகள் தோன்றின் தகவல்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் அபாயம் தோன்றும். எப்படி?

படத்தில் உள்ளவாறு மூன்று செல்பேசிகளின் செயல்பாடுகளைக் கவனிப்போம். செல்பேசி "1" என்பது தள நிலையத்திற்கு அருகிலேயே உள்ளது. செல்பேசி "2" சற்று இடைப்பட்ட தொலைவில் உள்ளது. செல்பேசி "3" தள நிலையத்தை விட்டு வெகு தொலைவில் உள்ளது. மூன்று செல்பேசிகளும் தள நிலையத்துடன் தொடர்பு கொண்டு தகவல் அனுப்பிக்கொண்டிருப்பதாய்க் கொள்வோம். ஒரு சுற்றில் மொத்தம் எட்டு நேரத்துண்டுகள். அதில் இரண்டாவது துண்டை செல்பேசி 1 பயன்படுத்துவதாகவும், செல்பேசி 2 நான்காவது நேரத்துண்டு மற்றும் செல்பேசி 3 ஏழாவது நேரத்துண்டைப் பயன்படுத்துவதாய்க் கொள்வோம்.

முதல் செல்பேசி தள நிலையத்திற்கு அருகில் இருப்பதால் , அது அனுப்பும் தகவலானது மிக விரைவாகத் தள நிலையத்தை அடைந்துவிடும். எனவே  அத்தகவல் முதல் நேரத்துண்டைப் பயன்படுத்தும் செல்பேசித்தகவலுடன் மோதி தகவல் அழிந்து போக வாய்ப்புண்டு. செல்பேசி 2 அனுப்பும் தகவல்கள் குறித்த நேரத்தில் தள நிலையத்தை அடைகிறது. செல்பேசி 3 வெகு தொலைவில் இருப்பதால் அது அனுப்பும் தகவல்கள் சற்றுக் காலதாமதமாகவே தள நிலையத்திற்கு வந்து சேருகின்றது, ஆனால் அதற்குள் அடுத்த நேரத்துண்டு (next
timeslot)ஆரம்பமாயிருக்கும். எனவே ஏழாவது மற்றும் எட்டாவது நேரத்துண்டுகளின் தகவல்கள் மோதி அழிந்து போகலாம். இதனை எவ்வாறு தவிர்ப்பது? இத்தகைய அபாயங்களைத் தவிர்க்க தள நிலையங்கள் "நேர முன்னேற்பாட்டு"த் திட்டத்தை (Timing advance) அறிமுகப்படுத்துகின்றன. அதாவது தள நிலையத்தின் அருகிலுள்ள செல்பேசிகள் ஒரு குறிப்பிட்ட நேரத்துண்டில் தகவல் அனுப்ப வேண்டுமெனில் அந்த நேரத்துண்டு ஆரம்பித்த சில மைக்ரோ வினாடிகள் கழித்தே தள நிலையத்திற்குத் தகவல் அனுப்புகின்றன. இவ்வாறு சிறிது நேரங்கழித்து ( சில மைக்ரோ வினாடிகள் கழித்து) அனுப்புவதால் தகவல்  தள நிலையத்தை விரைவாக அடைவது தவிர்க்கப்பட்டு சரியான நேரத்தில் சென்றடைகிறது. இதுபோல் தள நிலையத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள செல்பேசிகள் தகவல் அனுப்ப வேண்டுமெனில் குறிப்பிட்ட நேரத்துண்டு தொடங்கும் முன் ( சில மைக்ரோ வினாடிகள் முன்னதாக) தகவல் அனுப்ப ஆரம்பிக்கின்றன. இவ்வாறு அனைத்து செல்பேசிகளின் செயல்பாடுகளையும் ஒழுங்குபடுத்தும் வேலை தள நிலையத்தைச் சார்ந்தது. ஒரு செல்பேசி குறிப்பிட்ட ஒரு தள நிலையத்தின் கட்டுப்பாட்டினுள் வந்ததும் அந்தச் செல்பேசியின் இருப்பிடம் அறிந்து ( அருகில் உள்ளதா , தொலைவில் உள்ளதா) அதற்கேற்றாற்போல் அச்செல்பேசி தகவல் அனுப்பும் நேரத்தை நெறிப்படுத்துவது தள நிலையத்தின் இன்றியமையாத பணியாம்.

இதே போல,  தள நிலையத்தின் மற்றொரு வேலை திறன் கட்டுப்பாடு (Power Control). ஒரு செல்பேசி  தள நிலையத்துடன் தொடர்பு கொள்ளும்போது வெளிப்படுத்த வேண்டிய திறன் எவ்வளவு என்று வரையறைகள்  (specifications) உள்ளன. தள நிலையத்தின் அருகில் இயங்கும் செல்பேசியானது தகவல் அனுப்பும்போது , வரையறையில் குறிப்பிட்ட அளவை விடச் சற்றே குறைவான திறனில் தகவல் அனுப்பினாலும் அதனால் பிரச்சினை ஏற்படப்போவதில்லை. தள நிலையம் அருகில் இருப்பதால் குறைந்த திறனில் இயங்கினால் போதுமானது. ஆனால் தள நிலையத்திலிருந்து  தொலைவில் இயங்கும் ஒரு செல்பேசி  தள நிலையத்தைத் தொடர்பு கொள்கையில் சற்று அதிகத் திறனில் இயங்கவேண்டும். இல்லையேல் அந்தத் தகவலானது தள நிலையத்தை அடையுமுன் வலுவிழந்துவிட வாய்ப்புகள் உண்டு.

சரி, ஒரு செல்பேசி பயன்படுத்த வேண்டிய திறன் குறித்த தகவல் எவ்வாறு அனுப்பப் படுகிறது?

ஒரு செல்பேசி அழைப்பு ஏற்படுத்த எண்ணி, தள நிலையத்தைத் தொடர்பு கொள்கிறது என்போம். முதலில் குறித்த வரையறைக்குள் , ஒரு திறனில் ஒரு பொதியைத் (packet) தள நிலையத்திற்கு அனுப்பும். தள நிலையத்தை அடையும்போது அப்பொதியின் திறன் தள நிலையத்தால் அளவிடப்படுகிறது. செல்பேசி, தள நிலையத்திற்கு அருகில் இருப்பின் அப்பொதியின் திறன் சற்று அதிகமாக இருக்கும். செல்பேசி தள நிலையத்தை விட்டு அதிக தொலைவில் இருந்திருந்தால் திறன் குறைவாக இருக்கும். எனவே, தள நிலையம் செல்பேசிக்குத் தொடர்பு கொள்கையில் செல்பேசியின் திறனைச் சற்று குறைக்கவோ அதிகரிக்கவோ சொல்லும்.   அடுத்த நேரத்துண்டில் செல்பேசி தகவல் அனுப்புகையில் தள நிலையத்தின் கட்டளைப்படி திறனைச் சற்றுக்கூட்டியோ குறைத்தோ தகவல் அனுப்பும். இந்தத் தகவல் தள நிலையத்தை அடந்ததும் மீண்டும் திறன் பரிசோதிக்கப்படுகிறது. திறன் அதிகமாகவோ குறைவாகவோ இருந்தால் மீண்டும் செல்பேசிக்குத் திறன் கட்டுப்பாட்டுத் தகவல் அனுப்பப் படும். செல்பேசிகள் ஒரே இடத்தில் நிலையாக இருப்பதில்லையே. இடம் மாறிக்கொண்டே அல்லவா இருக்கின்றன. எனவே திறன் கட்டுப்பாடும் தொடர்ச்சியாக ஒவ்வொரு பொதித் தகவல் அனுப்பப் படும் போதும் கண்காணிக்கப்படுகிறது.

ஒரு செல்பேசி எந்த நிலையில் இருக்கிறது , அந்த நிலையில் என்னென்ன வேலைகள் செய்கிறது  என்று  சற்றே கவனிப்போம். இரண்டு நிலைகள் , முடங்கு நிலை (Idle state) மற்றும் இயங்கு நிலை (Actice state) உங்களது செல்பேசியை நீங்கள் இயக்கவே (Power On) இல்லை (powered off) என்றால் அது  உறக்க  நிலை (Sleep mode) . அந்த நிலையில் ஒரு செல்பேசி எந்த ஒரு செயலும் செய்வதில்லை. எந்த இடத்தில் இருக்கிறோம் என்றெல்லாம் அது  கவலை கொள்வதில்லை. எனவே இந்நிலையைக் கணக்கில் சேர்க்க வேண்டாம். கைக்கருவியை இயக்கியவுடன் (Power ON), அது "டொடொய்ங்க்" என்று சத்தம் கொடுத்து கைக்கருவியின் சின்னத்தையெல்லாம் திரையில் காட்டி இறுதியில் நெட்வொர்க்கின் பெயர் காட்டிப் பின் மௌனமாய் முடங்கிக் கிடக்கும். நெட்வொர்க்கின் பெயர் காட்டுவதற்கு முன் தனது இருப்பிடத்தை தள நிலையத்திற்கு அறிவிக்க செல்பேசி பல தகவல்களை அனுப்புகிறது. இச்செயலுக்கு இருப்பிடம் புதுப்பித்தல் (Location update) என்று பெயர். இருப்பிடம் புதுப்பித்த பின் முடக்க நிலையை அடைகிறது. இந்த நிலையில் செல்பேசி எந்த வேலையையும் செய்யாதா? செல்பேசியிலிருந்து தகவல்கள் எதுவும்  தள நிலையத்திற்கு அனுப்பப் படுவதில்லை. ஆனால் தள நிலையத்திலிருந்து வரும் அலைபரப்புத் தகவல்களையும் (Broadcast messages) பக்கமாக்குத் தகவல்களையும் (paging messages) செல்பேசியானது கண்காணித்துக் கொண்டே இருக்கும். ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் தனது இருப்பிடத்தைத் தள நிலையத்திற்குத் தெரியப்படுத்திக்கொண்டே இருக்கும். இதற்கு காலவட்ட இருப்பிடப் புதுப்பித்தல் (Periodic Location update) என்று பெயர். செல்பேசிகள் ஒரே இடத்தில் இல்லாமல் நகர்ந்துகொண்டே இருப்பதால், அதன் இருப்பிடத்தை அடிக்கடி தள நிலையத்திற்குத் தெரிவிப்பது இன்றியமையாதது முடங்கு நிலையிலுள்ள ஒரு செல்பேசி எப்போது இயங்கு நிலைக்கு மாற்கிறது? ஏதேனும் அழைப்பு  ஏற்படுத்தச் செல்பேசி விழைந்தாலோ, அல்லது ஏதேனும் அழைப்பு செல்பேசிக்கு ஏற்படுத்தப் பட்டாலோ, அல்லது குறுந்தகவல் அனுப்ப/பெறப்பட்டாலோ செல்பேசி இயங்கு நிலைக்கு மாறுகிறது. அதாவது, செல்பேசி தள நிலையத்துடன் தொடர்பு கொண்டு தகவல் பரிமாற்றம் ஏற்படுத்தும் நிலையே இயங்கு நிலையாம்.

இனிவரும் பதிவுகளில் செல்பேசிக்கும் தள நிலையத்திற்குமிடயே நிகழும் பரிவர்த்தனைகள், எவ்வாறு செல்பேசி முதலில் நெட்வொர்க்கில் பதிவு செய்து கொள்கிறது, அழைப்பு ஏற்படுத்துகையில் என்னென்ன தகவல்கள் அனுப்பப் படுகின்றன என்பது பற்றியெல்லாம் விரிவாகக் காண்போம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors