தமிழோவியம்
கவிதை : காரணம் சொல் !
- சத்தி சக்திதாசன்

உலகெங்கும் கொண்டாட்டம் - பாவம்
உழைப்பவர்க்கோ திண்டாட்டம் !

ஊர்வலமாய்ப் போவோர்கள்
உதடுகளில் கோஷங்கள்

உதிரத்தைச் சிந்தி
உழைக்கும் தோழர்கள் - அவர்
உதடுகளில் மட்டும் தாகத்தின் ரேகைகள் !

கதை பேசிக்
காலந்தள்ளும் செய்கை
கணக்கற்றோர் செய்கின்றார்

காரணம் சொல் !

கண்களில் நீர் சிந்தக்
காலமெலாம் வாழும் உழைப்பாளர் பெயராலே
கட்டாயம் வேண்டுமோ ?
கண்துடைப்பு விழாக்கள் .

உழைப்பு நிச்சயமாய் இந்த
உலகில் ஓர்
உன்னதமான சக்திதான் !
உழைப்பவரும் நம்மாலே
உயர்த்தப்பட வேண்டியவர் தான் !

ஆனால் தோழனே !

சத்தங்கள் அவன் வாய்க்குச்
சாப்பாடு போடாதே !
சபைகளிலே மாறாத
சடங்கான வெட்டிப் பேச்சு
சத்தியமாய் தீர்க்காது
சதிர் கொண்டு உழைக்கும் தோழன்
சங்கடங்கள் ஒரு நாளும் !

காரணம் சொல் !

ஏனிந்த விளையாட்டு
எப்போதும் ஏமாற்று வித்தை
எந்நாளும் சந்தைக் கூப்பாடு

உழைப்போர் வாழ
உண்மையாய் நாமும்
உள்ளத்தை நேராக்கி
உழைப்போம் என்றொரு சங்கற்பம்
உழைப்போர் தினத்தில்
உறுதியாய் எடுத்திடுவோம்

Copyright © 2005 Tamiloviam.com - Authors