தமிழோவியம்
திரைவிமர்சனம் : சச்சின்
- மீனா

ரொம்ப நாட்களுக்குப் பிறகு விஜய் நடித்திருக்கும் ஒரு முழு காதல் - காமெடி படம். படத்திற்குப் படம் வித்தியாசமான ஓப்பனிங் கொடுக்கும் விஜய் இதிலும் அசத்தியிருக்கிறார் - சாதாரணமாக அறிமுகமாகி.

ஊட்டி கல்லூரியையே கலக்கும் ஜெனிலியாவிடம் " நான் உன்னை காதலிக்கிறேன்.. இன்னும் 30 நாளில் நீயும் உன் காதலை ஒத்துக்கொள்வாய் பார்" என்று சவால் விடுகிறார் விஜய். உள்ளுக்குள் விஜய் மீது உண்டான காதலை மறைத்துக்கொண்டு அவரிடம் வம்பு செய்துகொண்டிருக்கிறார் ஜெனிலியா. ஏன் காதலைச் சொல்லவில்லை என்று கேட்கும் தோழியிடம், 30 நாளில் காதலைச் சொன்னால் நான் தோற்றவளாகிவிடுவேன். அதனால் 31வது நாள் போய் என் காதலை அவனிடம் சொல்வேன் என்கிறார் ஜெனிலியா. ஆனால் அந்த 31வது நாள் நடக்கும் ஒரு விஷயம் அவரது காதலை விஜயிடம் சொல்லமுடியாமல் போகிறது. விஜயும் தன் காதல் தோற்றதை எண்ணி சொந்த ஊருக்குத் திரும்புகிறார். முடிவில் ஜெனிலியா - விஜய் காதல் கதை என்ன ஆனது? இதுவே சச்சின்..

அப்படியே குஷி படத்தை வேறு நடிகர்கள் நடிக்க - நாம் மீண்டும் பார்த்த அனுபவமே மிஞ்சுகிறது. குஷி மாதிரியே காதலர்களுக்குள் ஈகோ - காதலர்களுக்கு நடுவே ஒரு கவர்ச்சிப் பெண்... வித்தியாசம் குஷியை விட காமெடி மற்றும் நடிப்பில் கலக்கியிருக்கிறார் விஜய்.  முதன் முதலில் ஜெனிலியாவைப் பார்த்து அந்தக் கணத்திலேயே தன் மனதைப் பறிகொடுப்பதும், அதேப் பெண்ணை காலேஜையேக் கலக்கும் சூப்பர் பிகராப் பார்த்து, " நீயெல்லாம் ஒரு அழகா?" என்று கேட்டு நக்கலடிப்பதிலும், தன் சீனியரான வடிவேலுவிடம் அவர் காட்டும் மரியாதையும் - பணிவும்... ஆகா விஜய் அசத்தியிருக்கிறார். மற்ற படங்களைப் போல பஞ்ச் டயலாக்காக பேசி பொழுதைக் கழிக்காமல் சமர்த்துப் பிள்ளையாக நடித்திருக்கிறார் விஜய்.

ஜெனிலியா.. அழகான ராட்சஸி. விஜய் இவரைப் புகழும் போதெல்லாம் அழகாகச் சிரிக்கிறார். விஜய் யார் என்று தெரிந்து கொள்வதிலிருந்து கிளைமாக்ஸ் வரையிலான இவரது தவிப்பான நடிப்பு சூப்பர்.. வடிவேலு - ஒன்பது வருடங்களாக ஒரே வகுப்பில் படிக்கும் சீனியர் கல்லூரி மாணவராக இவர் செய்யும் அலும்பல்கள் அப்பப்பா!! வடிவேலு இல்லாமல் படம் இல்லை என்ற நிலையை மெள்ள உருவாக்கிவருகிறாரோ என்ற சந்தேகம் தோன்றுகிறது.

படத்திற்கு கொஞ்சமும் தேவையில்லாத ஒரு கேரக்டர் பிபாஷா பாசு. கவர்சிப் புயல் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் இவரது நடிப்பு ஒரு புரியாத புதிர். இவர் எங்கிருந்து கல்லூரிக்குள் திடுமென்று வந்தார்? எதற்காக வந்தார்? ஏன் விஜய் - ஜெனிலியா காதலில் இவருக்கு அத்தனை ஈடுபாடு? வந்த வேகத்தில் அட்வைஸ் செய்துவிட்டு எங்கே சென்றார்? போன்ற ஏகப்பட்ட கேள்விகள் படத்தில் பிபாஷாவின் வருகை குறித்து. அரை நொடி வந்து படத்திற்கு முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தும் காரெக்டரில் ரகுவரன். மற்றபடி இவரைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.

படம் முழுக்க ஒரே புகைமூட்டம். அதிலும் ஏர்போர்ட்டில் எல்லாம் அத்தனை புகை மூட்டம் சாத்தியமே இல்லை. எரிச்சலையே ஏற்படுத்துகிறது. மற்றபடி ஜீவாவின் கேமரா ஓக்கே. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். எத்தனையோ வெற்றிப் படங்களை இயக்கிய மகேந்திரனின் வாரிசு ஜான் இயக்கியுள்ள முதல் படம் தான் சச்சின். ஆனால் அதை ஏன் குஷி-2 ஆக எடுத்திருக்கிறார் என்பதுதான் மனதில் எழும் பெரிய கேள்வி. குறைந்த பட்சம் நாயகர்களாவது புதுப்படத்தில் நடிக்கும் போது தங்களுடைய பழைய படக்கதைகளை நினைத்துப் பார்க்கமாட்டார்களா என்ன?

சரத்திற்கு சத்ரபதி மற்றும் ஏய். விஜய்க்கு குஷி - சச்சின். அட புதுசா ஏதாவது பண்ணுங்கப்பா !!

Copyright © 2005 Tamiloviam.com - Authors