தமிழோவியம்
தராசு : பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா
- மீனா

இந்திய பாராளுமன்றத்தில் பெண்களுக்காக 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா வெகுவிரைவில் தாக்கல் செய்யப்படும் என்று பாராளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கான சார்க் மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் ஆண்டுக்கணக்காக நிலுவையில் உள்ள மசோதாக்களில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பல பெண்கள் முதல்வர்களாக உள்ள இந்நாட்டில் - பெண் பிரதமராக இருந்த இந்நாட்டில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்யவே இத்தனை ஆண்டு காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. இது எப்போது நிறைவேறுமோ என்ற கேள்விக்கு நம் அரசியல் தலைவர்களிடம் தற்போது நிச்சயம் எந்த பதிலும் இருக்காது.

மற்ற விவகாரங்களில் எல்லாம் ஆளும் கட்சி தீர்மானங்களை நிறைவேற்ற எதிர்கட்சிகளின் தயவை கொஞ்சமும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவைப் பொறுத்தமட்டில் எந்தக் கட்சி ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி - மசோதாவை நிறைவேற்ற அனைத்துக் கட்சி ஆதரவைக் கேட்பார்கள். எதிர்கட்சிகள் ஒரு பதிலையும் சொல்லாமல் வேறு பல காரணங்களுக்காக பாராளுமன்றத்தைப் புறக்கணிப்பதில் மும்முரமாக இருப்பார்கள் - இந்த மசோதாவும் ஒரு ஆழ்ந்த தூக்க நிலைக்குச் சென்றுவிடும். இது தான் பல ஆண்டு காலமாக நம் நாட்டில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து நம் தலைவர்கள் காட்டிவரும் அக்கறை.

முஸ்லீம் நாடான பாக்கிஸ்தானில் கீழ்மட்டத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடும், தேசிய அசெம்பிளியில் 20 சதவீதமும், செனட்டில் 18 சதவீதமும் இடஒதுக்கீடு உள்ளது. ஆனால் பெண்களுக்கு எல்லா விதங்களிலும் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று தம்பட்டம் அடிக்கும் நம் நாட்டில் பெண்களுக்காக நாம் உண்மையாக ஒன்றுமே செய்யவில்லை என்பதை நினைக்கும் போது வேதனைதான் மிஞ்சுகிறது.

போனது போகட்டும். இனியாவது காங்கிரஸ் கட்சித் தலைவியான சோனியா காந்தி மற்றும் அனைத்து பாராளுமன்ற பெண் உறுப்பினர்களும் கடுமையாக முயன்று கூடிய விரைவில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை செயல்படுத்த முன்வரவேண்டும். ஆளும்கட்சி - எதிர்கட்சி என அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் எப்பாடு பட்டாவது அவைக்கு வரவழைத்து அவர்களது ஆதரவுடன் இம்மசோதாவை நிறைவேற்ற வேண்டும். இல்லையன்றால் இந்தியா ஒரு முற்போக்குச் சிந்தனை கொண்ட நாடு - ஆண்களுக்குச் சமமாக பெண்களை மதிக்கும் நாடு என்பதற்கு பதிலாக இந்தியா ஒரு பழமைவாத நாடு என்ற பெயர்தான் மிஞ்சும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors