தமிழோவியம்
மஜுலா சிங்கப்புரா : எதற்கும் இனி அஞ்சாதீர் புவியில் உள்ளீர்!
- எம்.கே.குமார்

Devan Nairசிங்கப்பூரின் முன்னாள் அதிபர் திரு. தேவன் நாயர், மலேசியாவின் மலாக்கா பகுதியில் பிறந்து, இளமையிலே கம்யூனிசக்கொள்கைகளில் பிடித்தம் கொண்டவராய் வளர்ந்து, தொழிற்சங்கங்களின் தலைவராய் சிங்கப்பூருக்கு ஆற்றிய சீர்மிகு பணி குறித்தும் நாட்டின் மூன்றாவது ஜனாதிபதியாய் அவர் ஆனதும் நான்கு வருடங்கள் கழித்து அவர் மீது எழுந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து பதவி இறக்கம் செய்யப்பட்டது என்பது உள்ளிட்ட சில விஷயங்களைச் சென்றவாரம் பார்த்தோம். சிங்கப்பூரின் ஒட்டுமொத்த மக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்றாக இது அமைந்தது. பின்னே? ஜனாதிபதியாயிருப்பவர், குடிகாரர் மற்றும் பெண்போகர் என்று பதவி இறக்கம் செய்யப்பட்டால்?

சிங்கப்பூர், 'தனிநாடு' என்ற சட்டை போட ஆரம்பித்து சில வருடங்களில், பொருளாதார அளவில் முழு வெற்றியை அடைய அது எத்தகைய முழுமுதற் முயற்சிகளை எடுத்து வந்தது என்பதை திரு. ஆல்பர்ட் வின்ஸிமியுஸ் அவர்களின் தேர்ந்த திட்டங்களின் வழி முதல் அத்தியாயங்கள் சிலவற்றில் கண்டோம். தொழிற்துறையில் தான் விரும்பிய அளவு சீரிய முன்னேற்றம், திரு. லீ குவான் யூ அவர்களுக்கு கிடைப்பது அரிதாகவே இருந்துவந்தது. கம்யூனிச சக்திகளிடமிருந்தும் ஆங்கிலேயர்களிடமிருந்தும் நாட்டைக்காப்பாற்றிய அவருக்கு, தொழிலாளர்களின் ஆதரவு முழுமையாகக் கிடைக்கவில்லை. தொழிலாளர்களை எப்படிக் கையாளுவது என்று திகைத்திருந்த நிலையில்தான் அவருக்கு வரமாகக் கிடைத்தார் திரு.சி.வி.தேவன் நாயர்.

1964ல் மலேசிய நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து மலேசியாவில்தான் இருந்தார் திரு. தேவன் நாயர். 1969ம் வருடம், அவரை மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு திரும்ப அழைத்தார் திரு. லீ. சிங்கப்பூரில், தொழிலாளர்களிடையே ஒற்றுமையையும் உற்பத்தி திறனையும் அதிகரிக்க அவர் அழைக்கப்பட்டார். 'என்.டி.யூ.சி' எனப்படும் 'தேசிய தொழிலாளர் வாரிய காங்கிரஸ¤க்கு' (இதுபற்றி அதிகமான தகவல்கள் பிறகு!) மீண்டும் அவரைத் தலைவராக்கினார். அங்கிருந்து திரு. நாயரின் சாதனைச் சரித்திரம் ஆரம்பித்தது. 1970-ல் தொடங்கி 1981 வரை தொடர்ந்து பதினோரு ஆண்டுகள் அதன் தலைவராயிருந்து அதனைச் செம்மைப்படுத்தினார் அவர்! திரு. தேவன் நாயரின் எழுச்சிமிகுந்த நாட்டு நலப்பணிக்கு மாற்றாக, 1981 ல் அவரை, நாட்டின் மூன்றாவது அதிபராக்கி அழகுபார்த்தார் திரு. லீ குவான் யூ.

1981-லிருந்து 1985 மார்ச் பதினைந்து வரை சுமூகமாகப் போய்க்கொண்டிருந்த அவரின் பதவிக்கு, மலேசியாவின் கிழக்குப்பகுதியான 'சரவா' மாநிலத்திலிருந்து வந்தது அந்த ஆபத்து. சரவா மாநிலத்தின் 'குச்சிங்' பகுதிக்கு பார்வையாளராக அவர் சென்றபொழுது, நிலை தடுமாறிய குடிபோதையில், அங்கிருந்த பெண்கள் சிலரிடம் தவறாக நடக்க முயன்றதாக 'சரவா' பகுதி டாக்டர் ஒருவர், மார்ச் 14 அன்று, திரு. தேவன் நாயரின் சிங்கப்பூர் தனி மருத்துவருக்கு போன் செய்தார். திரு. தேவன் நாயரை அங்கிருந்து உடனே அழைத்துச்செல்ல வேண்டும் என்றும் இல்லையேல் நாட்டின் பெருமைக்கும் அதிபர் பதவிக்கும் களங்கம் நேரும் என்று சொல்லி வற்புறுத்தினார். விஷயத்தைக் கேள்விப்பட்டதும் தனிமருத்துவர் 'டாக்டர் தம்பையா', உடனே குச்சிங்கிற்குப் பறந்தார்.

தன்னோடு காரில் வந்த மந்திரியின் மனைவியிடமும், விருந்திலிருந்த பெண்கள் மற்றும் மருத்துவமனை நர்சுகளிடமும் அவர் மோசமாக நடந்துகொண்டதாகக் கூறப்பட்டது. சிங்கப்பூருக்கு அவரை அழைத்து வந்தார் அவரது மருத்துவர் திரு. தம்பையா. அன்றிரவு ஒன்பது மணி அளவில், விஷயத்தைப் பக்குவமாக எடுத்துச்சொல்ல தனது மனைவியையும் அழைத்துக்கொண்டு, ஜனாதிபதி மாளிகையான 'இஸ்தானா'விற்கு வந்தார் திரு. லீ. அடுத்த நாள் பாராளுமன்றத்தில், திரு. தேவன் நாயர் குறித்தான, திரு. லீ குவான் யூ அவர்களின் அறிக்கை இப்படிச்சொல்லியது.

"திரு. தேவன் நாயரின் மனைவி, குச்சிங்கில் நடந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு மிகவும் வருந்தினார். தனது கணவர் முழுதும் மாறிவிட்டதாகவும், நாளுக்கு நாள் மிகவும் அதிகமாக குடிப்பதாகவும், கடந்த சில மாதங்களாக ஒரு இரவில் முழு விஸ்கி போத்தலைக் காலிசெய்யும் அளவுக்கு மது அருந்துவதாகவும் என்னிடம் என் மனைவியிடமும் சொல்லி வருத்தப்பட்டார். வீட்டு வேலையாட்களைச் சீக்கிரமே இதற்காக அனுப்பிவிடுவதாகவும் அதனால் அவர்களுக்கு அது தெரியாது எனவும் சொன்னார். அடிக்கடி தன்னை, தனது கணவர் திரு. தேவன் நாயர் அடிப்பதாகவும், சரவா மாநிலத்தில் இப்படி நடக்கும் என்பது ஏற்கனவே தெரிந்ததால்தான் தான் அவரோடு செல்லவில்லை என்பதாகவும் அவரின் மனைவி எங்களிடம் சொன்னார்"

"சில வாரங்களுக்கு முன் ஒருநாள், தலையில் 'விக்' வைத்துக்கொண்டு, தனது பாதுகாப்பு அலுவலர்கள் யாரும் இல்லாமல், தானே காரை ஓட்டிச்சென்றிருக்கிறார் தேவன் நாயர். ஜெர்மானியப்பெண் ஒருவரை அங்கு தனிமையில் அவர் சந்தித்திருக்கிறார். அடுத்தநாள் காலை அவரின் மனைவி அங்கு சென்று பார்த்தபொழுது, காலி மதுப்பாட்டில்களும் சிகரெட் பெட்டிகளும் லிப்ஸ்டிக்குகளும் கிடந்தனவாம். பிறிதொருநாள் அப்பெண்ணையே தனது மாளிகைக்கு விருந்திற்கும் அழைத்து வந்தாராம் இவர். இதையெல்லாம் கேட்ட திருமதி. தேவன் நாயரை அவர் அடித்திருக்கிறார். சுய உணர்வு என்பது அவருக்கு இல்லவே இல்லை என்பதும் குடிக்கு முற்றிலும் அடிமையாகிவிட்டார் என்பதும் இதன் மூலம் தெரிய வருகிறது" - இப்படி அமைந்தது திரு லீ அவர்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த திரு. தேவன் நாயர் குறித்தான அறிக்கை!

இதனைத் தொடர்ந்து ஏழு மருத்துவர்கள் கொண்ட குழு ஒன்று அவரைப் பரிசோதித்தது. பரிசோதனையின் முடிவில் அக்குழுவின் தலைவரான டாக்டர். நகுலேந்திரனின் அறிக்கை பின்வருமாறு இருந்தது. "பல ஆண்டுகள் ஆன அவரின் தொடர்ந்த குடிப்பழக்கத்தால் அவர் மதுவுக்கு அடிமையாகிவிட்டார். அவரது மன நிலையின் இயக்கம், அவரின் குடியைப்பொறுத்து இயங்கி வருவது வாடிக்கையாகிவிட்டது. நீண்ட நாட்கள் அளவில்லாமல் குடித்ததின் விளைவாக மூளையின் செயல்திறனும் ஞாபகசக்தியும் போய்விட்டன. ஆண்மையற்றவராகி விட்டார். இவைகளினால் அவர் தனது சுய சிந்தனையை இழந்து சமுதாயப்பொறுப்பற்று நடக்க ஆரம்பித்துவிட்டார்"

மருத்துவக்குழுவின் இவ்வறிக்கைக்குப் பிறகு, திரு. லீ அவர்களும் மற்றொரு அமைச்சரான திரு.இராஜரத்தினம் அவர்களும் திரு.தேவன் நாயர் இருந்த மருத்துவமனைக்குச் சென்றனர். பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டிய அவசியத்தை அங்கு அவருக்கு எடுத்துச் சொன்னார்கள். கொஞ்சம் தயக்கத்திற்குப்பின் திரு. தேவன் நாயர் தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுத்திருக்கிறார். அதற்கடுத்த நாள், தேவன் நாயர், திரு. லீக்கு எழுதிய கடிதத்தில், "ஒரு வருடத்திற்கு முன், மதுவுக்கு நான் அடிமையாகிவிட்டதை உணர்ந்துகொண்டேன், ஆனால் அதைச் சரிசெய்வதற்குப்பதிலாக மிகவும் கேவலமான முறையில் மீண்டும் மீண்டும் அதற்குள் நானே முழுகிவிட்டேன். தங்களைச் சந்தித்து இதனைத் தெரியப்படுத்தி விடலாம் என இருமுறை முயன்றேன். ஆனால் அதற்கான தைரியம் என்னிடமில்லை. நான் திருந்துவதற்கு எனக்குக் கிடைத்த கடைசி வாய்ப்பையும் இதனால் நழுவவிட்டு விட்டேன்" இவ்வாறு அதில் சொல்லப்பட்டிருந்தது.

தனது வாழ்நாளில் தான் செய்த இரு தேர்வுகள், எப்படி தவறுதலாக அமைந்து, தன்னைத் தவிக்க வைத்தன என்பதை திரு. லீ குவான் யூ மிகவும் வருத்தத்தோடு சொல்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம் மற்றும் தேவன் நாயர் விஷயம் ஆகியனவற்றில் சரியான நபரை தவறான பதவியில் வைத்ததும், சரியான நபர் எதிர்பாராவிதமாக தவறான பாதையில் நடந்ததும் என தான் எடுத்த எத்தனையோ முடிவுகளில் இந்த இரண்டு மட்டும் சற்றுப் பிசகிவிட்டதாகவே அவர் உணர்கிறார்; வருந்துகிறார்.

'அதிபராக இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, அரசாங்க உதவித்தொகை எதுவும் கொடுக்கும் வழக்கம் நடைமுறையிலும் இல்லை, சட்டத்திலும் இல்லை. ஆனால் தேவன் நாயர் அவர்களுக்கு, அவரின் வேண்டுகோளுக்கு இணங்கி உதவித்தொகை வழங்கப்பட்டதாகவும் அதுவும் மருத்துவக்குழு ஒன்று தொடர்ந்து அவரைப் பரிசோதித்து வரவேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதிக்கப்பட்டதாகவும் முதலில் ஒப்புக்கொண்ட அவர் பிறகு மறுத்துவிட்டதாகவும்' திரு. லீ சொல்கிறார்.

சரியாக ஒன்றரை வருடங்கள் கழித்து, 'FEER' (Far Eastern Economic Review) இதழில் எழுதிய ஒரு கடிதத்தில், திரு. தேவன் நாயர், 'தான் மதுவுக்கு அடிமையாக இருந்ததே இல்லை' என்று கூற, ஏழு டாக்டர்களின் மருத்துவ அறிக்கையையும், 'மதுவுக்கு அவர் அடிமையானவர்தான்' என்ற உறுதிமொழியையும் சிங்கப்பூர் அரசு, FEERக்கும் திரு. நாயருக்கும் அனுப்பி வைத்தது. பிறகு ஒரு வழக்கில் அவர், திரு. லீயைச் சாட, அவர் இவரின் மேல் வழக்குத்தொடுத்து எல்லாத் தகவலறிக்கைகளையும் முன்வைக்க, தேவன் நாயரும் அவரது குடும்பமும் மலேசியாவிற்கும் அங்கிருந்து பிறகு கனடாவுக்கும் இடம்பெயர்ந்தது.

பதினோரு வருடங்கள் கழித்து, கனடாவில் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்த அவர், 'தனது உடல்நிலை தவறாக கணிக்கப்பட்டதாகவும் தன்னை குடிகாரனாய், மதுவுக்கு அடிமையானவனாய் மக்களுக்குக் காண்பிப்பதற்காக, மருத்துவர்களோ அல்லது வேறு யாரோ வேண்டுமென்றே அதற்கான மாத்திரைகளைப் போட்டு அப்படி நிரூபித்ததாகவும் சொன்னார்.

நல்ல நண்பர்களாய், நெருங்கிய சினேகிதம் உடையவர்களாய், ஒரே தூணாக நின்று சிங்கப்பூரை வளர்த்தவர்களாய், ஒரே வருடத்தில் பிறந்தவர்களுமாயிருந்த திரு. லீக்கும் திரு. தேவன் நாயருக்கும் இருந்த உறவு அத்துடன் முடிவடைந்தது.

தேவன் நாயர் அவர்கள் மலேசிய நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டபின், அவரது தொகுதியில் அவருக்குப் பதிலாக நிறுத்தப்பட்ட அவரது மனைவி 'திருமதி. தனலெட்சுமி தேவன் நாயர்' தான் சிங்கப்பூர் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலும் கடைசியுமான இந்திய பெண்ணாவார். கடந்த ஏப்ரல் 18 அன்று கனடாவின் 'ஒண்டாரியோ' நகரில் இறந்துபோனார் அந்த அம்மையார்! அவரது மறைவிற்கு தனது  ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்திருந்தார் திரு.லீ குவான் யூ.

அவசரமாய் ஒரு அதிபரை பதவியிலிருந்து இறக்கியது சரி. அடுத்ததாய் பதவியில் அமர்த்தப்போவது யாரை? அத்தகைய சிறந்தவர்களை அரசு, வலை வீசித் தேடியபோது, திரு. லீ குவான் யூ அவர்களின் ஆரம்பம் முதல் இன்று வரை நெருங்கிய தோழராய் இருக்கும் மக்கள் செயல்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான 'எஸ்.ராஜா' எனப்படும் முன்னாள் அமைச்சர் ராஜரத்தினம் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டவர்தான் 1985 முதல் 1993 வரை இருமுறை தொடர்ந்து சிங்கப்பூரின் அதிபராய் இருந்த திரு. வீம் கீ வீ! தனது '89 ஆம் வயதில்' கடந்த மே 2 அன்று இறந்துபோனவர்; மக்களின் மனதில் என்றும் வாழ்பவர் அவர்!

தொடரும்...


சிங்கப்பூர் டைம்ஸ் 2015 இதழில் இருந்து.

தமிழகம் வந்தார் பிரதமர்!

சென்னை. மே 20. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கருகில், கடலுக்கடியில் ஏற்பட்ட அதிபயங்கர நில அதிர்வினால், 'சுனாமி' எனப்படும் ஆழிப்பேரலைகள் உருவாகி, இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, மலேசியா மற்றும் தாய்லாந்து பகுதிகளை மிகவும் கொடூரமாகத் தாக்கியது பலருக்கும் நினைவிருக்கலாம். இந்தியாவில் இது, தமிழ்நாட்டின் கிழக்குப்பகுதியான நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோரத்தாண்டவம் ஆடியதில் ஏராளமானோர் தங்களது உயிர்களையும் உடமைகளையும் இழந்தனர். இந்திய அரசும் இந்திய மக்களும் இதன் மீட்புப்பணியில் அப்போது மிகத் தீவிரமாக ஈடுபட்டு சிறந்த செயலாற்றினர்.

இந்நிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கென, அதி நவீன வசதிகளைக்கொண்ட அடுக்குமாடி வீடுகளை இந்திய அரசும் தமிழக அரசும் இப்போது கட்டி முடித்திருக்கின்றன. இவைகளைத் திறந்து வைப்பதற்கும் பாதிக்கப்பட்ட மக்களூக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் இந்தியாவின் பிரதமர் நேற்று சென்னை வந்தார். வீடுகளை மக்களுக்கு அளித்த அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், 'புயலாலும் கடலலைகளாலும் எளிதில் தாக்கமுடியாத அளவிற்கு ஜப்பானிய அரசின் திட்ட உதவியோடு இவ்வீடுகள் அமைந்திருக்கின்றன' என்று சொன்னார்.

இதற்கிடையில், நேற்றிரவு சன் டிவி செய்திகளில், 'நாகப்பட்டினத்திற்கு அருகேயுள்ள, காணாம்பட்டினம் கிராமத்தில் 'சுனாமி' தாக்கி பத்தாண்டுகள் கடந்தும் இதுவரை எந்தவித நலத்திட்ட உதவியும் வழங்கப்படவில்லை' எனவும் 'ஆட்சியிலிருக்கும் அரசு இவற்றையெல்லாம் கண்டுகொள்ளவில்லை' எனவும் காட்டப்பட்டது.

முன்னதாக, விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் அவர்களுக்கு, கட்சியில் ஒரு கோஷ்டிக்கு ஆதரவாகச் செயல்படும் தமிழக கட்சித்தலைவரை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி கட்சியின் மற்றொரு கோஷ்டியைச் சேர்ந்தவர்கள், பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டினார்கள்.

 

 

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors