தமிழோவியம்
முத்தொள்ளாயிரம் : பலம் மிகுந்த பாண்டியன்
- என். சொக்கன்

பாடல் 107

சென்ற பாடலின் தொடர்ச்சியைப்போலவே, இந்தப் பாடல் அமைந்துள்ளது.

'அந்தப் பாண்டியன், தனி ஒருவனாக, வானத்துக்குக் கீழுள்ள இந்தப் பூவுலகம் மொத்தத்தையும் ஆட்சி செய்பவன். வெண்கொற்றக் குடையின்கீழ் நல்லாட்சி நடத்தி, இந்த பூமியைக் காப்பவன்', என்று வர்ணிக்கிறாள் பாண்டியனின் காதலி ஒருத்தி.

'ஆனால், அவனோடு ஒப்பிடுகையில், நான் ஒரு சாதாரணப் பெண், மிக மிக எளியவள், யாரையும் எதிர்த்துப் போராட இயலாத பெண் !', என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் அவள், 'என்னுடைய நிலைமை இப்படியிருக்க, ஈரமான, குளிர்ச்சியான மலர்களைத் தொடுத்து, மாலையாய் அணிந்த அந்தப் பாண்டியன், என்மேல் கருணை காட்டவேண்டாமா ?', என்று வேண்டுகிறாள்.

'பலம் மிகுந்த பாண்டியன், எளியவளாகிய என்னைக் காப்பாற்றி, அருள் செய்வதுதான் முறை., அதைச் செய்யாவிட்டால், அது தவறு என்று அவனுக்கு யார் எடுத்துச்சொல்வார்கள் ? யார் என்னை அவனோடு சேர்த்துவைப்பார்கள் ?', என்று இந்த உலகத்தாரைப் பார்த்து, ஏக்கத்தோடு கேட்கிறாள் அவள்.


தான்ஏல் தனிக்குடைக் காவலனார் காப்பதுவும்
வானேற்ற வையகம் எல்லாமால் யானோ
எளியேன்ஓர் பெண்பாலேன் ஈர்ந்தண்தார் மாறன்
அளியானேல் அன்றுஎன்பார் ஆர் ?

(ஏல் - ஏற்றுக்கொண்ட
வானேற்ற - வானத்துக்கு எதிராக / கீழே இருக்கும்
வையகம் எல்லாமால் - பூலோகம் முழுவதும்
ஈர் - ஈரம்
தண் - குளிர்ச்சி
தார் - மாலை
அளியானேல் - அன்பு / அருள் செய்யாவிட்டால்
ஆர் - யார் ?)பாடல் 108

பாண்டியனைக் காதலிக்கும் ஒரு பெண், அவன் தன்னைச் சந்திக்க வரவில்லையே என்று கவலை கொண்டு, தன்னுடைய காதல் தோற்றுவிட்டதாகவும், அவன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்றும் பலவிதமாய் ஊகித்துக்கொண்டு, ஏகத்துக்குப் புலம்பிக்கொண்டிருப்பதை முந்தைய பாடல்களில் பார்த்தோம்.

அந்தப் பெண்ணின் கண்ணீரைத் துடைத்து, அவளுக்கு ஆறுதல் சொல்கிறது இந்தப் பாடல் !

'தேன் நிரம்பிய மலர்களைத் தொடுத்து, மாலையாக அணிந்த பெண்ணே, நான் சொல்வதைக் கேள்', என்று அவளை அழைத்து, ஆதரவாய்ப் பேசத்துவங்குகிறது பாடல், 'உன் காதலனைச் சாதாரண ஆள் என்று நினைத்துவிட்டாயா ? உன்னுடைய நலனையெல்லாம் திருடிக்கொண்டு ஓடிவிடுகிற ஆள் என்று எண்ணிவிட்டாயா ? அது தவறு, அப்படியெல்லாம் நீயாக ஏதும் கற்பனை செய்துகொள்ளாதே.'

இதைக் கேட்டதும், சற்றே நம்பிக்கையோடு நிமிர்ந்துபார்க்கிறாள் அந்தப் பெண், 'நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? என் காதலன் திரும்பி வருவானா ? எனக்கு அருள்புரிவானா ?', என்று ஏக்கமாய்க் கேட்கிறாள்.

'அவன் நிச்சயமாய் உன்னைக் கைவிடமாட்டான்', என்று உறுதி சொல்கிறது பாடல், 'அவன் பெண்களை ஏமாற்றுகிற ஆள் இல்லை, கொடுமையான அரசன் இல்லை, ரொம்ப நல்லவன், ஒழுக்க நெறி தவறாமல் ஆட்சி செய்கிறவன், தமிழ்நாட்டின் ஐந்து பகுதிகளையும் முறைப்படி காவல் காக்கும் குடும்பத்தைச் சேர்ந்த அரசன் அவன்.'

'இப்படிப்பட்ட பெருமையுடைய பாண்டியனா உன்னைக் கைவிடப்போகிறான் ? இல்லவே இல்லை, அவன் கண்டிப்பாக உன்னைச் சந்திக்க வருவான், நீ கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, வழிமேல் விழியை வை !'

நறவுஏந்து கோதை நலம்கவர்ந்து நல்கா
மறவேந்தன் வஞ்சினயான் அல்லன் துறையின்
விலங்காமை நின்று வியன்தமிழ்நாடு ஐந்தின்
குலக்காவல் கொண்டுஒழுகும் கோ.

(நறவு - கள் / தேன்
கோதை - மாலை
நல்கா - (அருள்) தராத
மறவேந்தன் - கொடிய அரசன்
துறை - ஒழுக்கம்
விலங்காமை - விலகிச் செல்லாமல் இருப்பது
வியன் - அகன்ற / அதிகமான / விரிவான / வானம்(போன்ற)
கோ - அரசன்)

Copyright © 2005 Tamiloviam.com - Authors